Tuesday, September 14, 2010

சமூகப் பொறுப்புணர்வு வேண்டாமா?

எல்லாவற்றுக்கும் அரசைக் குறை கூறுவது என்பது மக்களின் வழக்கமாகி-விட்டது. (ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் பத்திரிகைகளேகூட, உண்மை எதுவெனத் தெரிந்தும் அரசின் மீது குறைகூறுவதை வாடிக்கையாக்கிக் கொண்டுவிட்டன என்பது அண்மைக்கால நிலை) ஒவ்வொருவரும் தம் பொறுப்பை உணர்வதாக இல்லை. அடுத்தவர் மீது குற்றம் சொல்லும் நெஞ்சமே எங்கும் நிறைந்திருக்கிறது.

ஆக்கப்பூர்வ அறிவுரைகள் சொன்னால், வந்துட்டார்யா புத்தரு என்று இளக்காரமாகப் பேசுவதை கேட்க முடிகிறது. இந்தப் பேர்வழிகளுக்-கெல்லாம் உறைக்கும்படி ஒரு காட்சியைத் தனது வம்சம் படத்தில் வைத்துள்ளார் அதன் இயக்குநர் பாண்டிராஜ்.கதாநாயகன் அருள்நிதி (முதலமைச்சர் கலைஞரின் பேரன்) இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கிறார். போக்குவரத்து சமிக்ஞையில் சிகப்பு விளக்கு எரிகிறது. வண்டியை நிறுத்துகிறார். இன்னும் 150 நொடிகள் நிற்கவேண்டும் என்று அந்த விளக்கு உணர்த்துகிறது.
உடனே தனது வண்டியின் மோட்டாரை அணைத்துவிடுகிறார். இதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்து வண்டிக்காரர்கள் தமது வண்டியின் மோட்டாரை அணைத்துவிடுகிறார்கள். பெட்ரோல் சிக்கனத்தை வலியுறுத்தி இந்தக்காட்சியை இயல்பாகப் படைத்துள்ளார் பாண்டிராஜ். உரையாடல்கள் இல்லாமல் மிக யதார்த்தமாக அமைந்துவிட்ட இக்காட்சி பார்ப்பவர்களுக்குப் பாடம் நடத்துகிறது.
பாண்டிராஜ்


பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற இயற்கை எரிபொருள்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த-வில்லையென்றால், நிலைமை விரைவிலேயே மோசமாகிவிடும் என்று உலகப் பொருளாதாரமும் பன்னாட்டு அரசியலும் நம்மை எச்சரிக்கை செய்கின்றன. ஆனால், நம் மக்களோ இதுபற்றிக் கொஞ்சமும் கவலைகொண்டதாகத் தெரியவில்லை.
இதைவிட இன்னும் மோசமாக மின்சாரத்தை வீணாக்குகிறார்கள் என்பதை அரசு அலுவலகங்களிலும், பொது அரங்குகளிலும் கண்கூடாகக் கண்டுகொண்டுதானிருக்கிறோம். வீடுகளிலும் பல நேரங்களில் ஆள் இல்லா அறைகளில் மின் விசிறிகள் சுழல்வதும், விளக்குகள் எரிவதும், தொலைக்-காட்சிகள் இயங்குவதையும் பார்க்கிறோம்.

மின் வெட்டு, மின் பற்றாக்குறை என்று அரசின் மீது பாயும் இவர்கள் மின்சாரத்தை வீணாக்குவதைப் பற்றி என்றாவது பேசியிருக்கிறார்களா? பத்திரிகைகள் மின்சார சிக்கனம் குறித்து தமது வாசகர்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனவா? அரசு அலுவலகங்களில் அலுவலர்களும், பணியாளர்களும் மின்சாரத்தை வீணாக்குவதைத் தவிர்ப்பதுடன், மக்களும் தத்தமது இல்லங்களில் மின்சாரத்தை மிச்சப்படுத்தினாலே நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படாது. சமூகப் பொறுப்பை ஒவ்வொரு தனி மனிதரும் உணராதவரை இழப்பு சமூகத்திற்குத்தான். இதனை உணர்த்த பாண்டிராஜ் தனது அடுத்த படத்தில் மின்சார சிக்கனம் பற்றி ஒரு காட்சியை அமைத்தால் அதனைப் பார்ப்பவர்களுக்காவது சமூகப் பொறுப்பை உணர வாய்ப்புக் கிடைக்கும்.

1 comment:

chittu kuruvi said...

Nowadays we are getting good directors and good screen plays in the Thamizh cinema field after a long gap. One of them is Thiru PaandiRaj and his movies. I personally proud of him about his birth place which is very nearer to our Town, Thiruppathur & Karaikudi and also as a member of JCI.
"SONA MAGAN" - Selvam, Karaikudi

Post a Comment