Saturday, July 7, 2012

சிங்கள மயமாக்கலில் சிக்கிய புத்தர்
ஈழச்சிக்கல் தற்போது உலகின் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில் புதிதாக சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். 1980களில் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு அகதிகளாக உலகின் பல நாடுகளுக்கும் தப்பி ஓடியபோது கண்ணையும் காதையும் மூடிக்கொண்டிருந்த இந்துத்துவ அரசியல் வியாபாரிகள் இப்போது, கோவாவில் நடந்த இந்து மாநாட்டில் ஈழச்சிக்கலைப் பற்றிப் படம் காண்பித்திருக்கிறார்கள். "இங்கே 'தமிழன்’ மாமிசம் கிடைக்கும்” என்று சிங்கள இனவெறியர்கள் கொக்கரித்தபோது கோபப்படாதவர்கள் இப்போது கோவாவில் கூடிய மாநாட்டில் 'பிரபாகரன் வாழ்க' என்று கோஷம் போட்டார்களாம். இந்து முன்னணியிலிருந்து பிரிந்து வேறு பெயரில் மதவெறி வணிகம் செய்யும் ஒருவர் இந்த வேலையைச் செய்துள்ளார். இப்போதுதான் வட இந்திய இந்துத்துவாக்களுக்கு ஈழப்போர் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாம். 32 ஆண்டுகாளாகக் கேட்காத காதுகளுக்கு இப்போதுதான் ஈழச் செய்தி எட்டியிருக்கிறது.
இதுவரை ஈழத்தமிழர்களை தமிழர்களாக மட்டுமே தமிழகமும், உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களும் பார்த்து வருகின்றனர். உலகமும் அப்படித்தான் பார்க்கிறது. அதனால்தான் பல்வேறு நாடுகளிலும் தமிழர் புனர் வாழ்வுக்கழகம் என்றும் தமிழ் மொழி அடிப்படையிலான பெயர்களிலும் ஈழத்தமிழ் அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஈழத்தில் சாகின்றவன் தமிழன் என்ற உணர்வின் அடிப்படையிலேயே தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்றபடி, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் என்றால் இந்து மதம் ஏற்ற தமிழர்கள் மட்டுமல்ல, கிறித்துவ, இஸ்லாமியத் தமிழர்களும்தான். ஈழத்தமிழர்களும் தம்மைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி வந்தமையால் அவர்களை இந்துப் பார்ப்பனீயம் எதிரிகளாகவே பார்த்தது; இன்னும் பார்த்துவருகிறது. தமிழகத்தில் இயங்கிவரும் பார்ப்பனப் பத்திரிகைளும் ஈழ விடுதலைக்கு எதிராக எழுதுகின்றன. சிங்கள ரத்னாக்களாக வலம் வருகின்றன. தமிழீழம் என்ற சொல்லே அவாளுக்கு எரிச்சல் மூட்டுவதாக இருக்கின்றது. அதனால்தான் ஆரியமூலத்திலிருந்து வந்த சிங்களவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது பார்ப்பனீயம். சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து சென்ற ஆரிய இனத்தவர் என்பதற்கு வேறு எங்கும் போகவேண்டாம். 1980களில் கொத்துக்கொத்தாகத் தமிழர்களைக் கொன்றுகுவித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனே சொல்வதைக் கேளுங்கள்:
இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை மேற்கு வங்க மாநில பத்திரிகையாளர் ஒருவர் (அமிர்த பசார் பத்திரிகை தொகுதி) பேட்டி கண்டார்.
அவரிடம் ஜெயவர்த்தனே கீழ்க்கண்டவாறு கூறினார்:
“நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியிலிருந்து வந்திருக்கிறீர்கள். எனவே சிங்களவர்களுக்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள மைனாரிட்டிகள் (தமிழர்கள்) திராவிட இனத் தொடர்புடையவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” என்று ஜெயவர்த்தனே கூறினார். (31-8-1983-தி இந்து நாளேட்டில் அதன் செய்தியாளர் எஸ்.பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து...)
சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமிழர் சிங்களர் போராட்டத்தை ஆரிய - திராவிடர் போராட்டமாகவே கூறுகிறார்கள். படித்த சிங்களவர்களின் எண்ணம் கூட எந்த வழியில் செல்கிறது என்பதற்கு இதுவே சரியான எடுத்துக்காட்டு.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இந்துத்துவாக்கள் இப்போது ஈழத்தமிழர்களை இந்துக்களாக முன்னிறுத்தும் வேலையைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
அண்மைக்காலமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் ஈழப் பகுதிகளில் ராஜபக்சேவின் சிங்கள இனவெறி அரசு சிங்களர்களைக் குடியேற்றி வருகிறது. இப்பகுதிகளில் உள்ள இந்துக் கோவில்களை அகற்றிவிட்டு அங்கே புத்த விகாரங்களை அமைக்கிறது. சிங்கள இனவெறி அரசு இந்துக் கோவில்களை மட்டும் அகற்றவில்லை; கிறித்துவ தேவாலயங்களையும், இஸ்லாமிய மசூதிகளையும் கூட அகற்றிவருகிறது. தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள் அவை எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அகற்றப்படுகின்றன. இது எதைக் காட்டுகிறது? தமிழர் பகுதிகளை முற்றிலும் ஆக்கிரமித்து அதில் சிங்களர்களை குடி அமர்த்தும் அப்பட்டமான சிங்கள இனவெறியே தவிர, இந்து மதத்துக்கு மட்டுமே எதிரான செயல் அல்ல; ஈழத்தில் தமிழர்கள் பின்பற்றும் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களை அகற்றுவதன் மூலம் சிங்கள இனவெறி ராஜபக்சேவின் அரசு தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதே தவிர, இந்துக்களுக்கு மட்டுமே எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாகச் சொல்லமுடியுமா?
இந்த ஆக்கிரமிப்புகளை ஒருபோதும் ஏற்க முடியாது. இது அப்பட்டமான இனவெறி அல்லாமல் வேறல்ல. ஒரு மத வழிபாட்டுத்தலத்தை அகற்றி அந்த இடத்தில் இன்னொரு மத வழிபாட்டுத்தலத்தை அமைப்பது கடும் கண்டனத்திற்குரியதுதான். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால், உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
 
இலங்கையில் ராஜபக்சேவுக்கும் சிங்கள இனவெறியர்களுக்கும் மத அடையாளமாக பவுத்த மதம் இருக்கிறது; பவுத்த நெறி அல்ல. மதச் சின்னமாக புத்தர் சிலைகள் இருக்கின்றன. அதனால் அவர்கள் சிங்களக் குடியேற்றப் பகுதிகளில் புத்தர் சிலைகளை நிறுவி, விகாரங்களை அமைக்கிறார்கள். இதனை எடுத்துச் சொல்லும் ஈழத்தமிழர்கள் சிலரும், ஈழத்தமிழர் ஊடகங்களும் ’ஈழத்தில் பவுத்தமயமாக்கல்’ என்று எழுதுகின்றனர். ஆனால்,உண்மை என்ன? ஆரிய மதவெறியர்களான சிங்களர்களுக்குக் கிடைத்த முகமூடிதான் புத்தரே தவிர உண்மையிலேயே அவர்கள் பவுத்தர்கள் அல்ல. அதாவது உண்மையான பவுத்தத்தை ஒழிக்க ஆரியம் ஊடுருவி உருவாக்கிய பவுத்தம். இது இந்துத்துவக் கலவை. ஆரியத்தை ஒழிக்கப் புறப்பட்ட புத்தரை உள்வாங்கி செரிமாணம் செய்து, அவரையே அவதாரமாக்கி பவுத்தத்தை அழிக்க ஆரியம் செய்த சதி. இதுதான் வரலாற்று உண்மை. ஆரிய மூலம் இன்னும் சிங்களத்துடன் ஒட்டிக்கொண்டு இருப்பதால்தான் ராஜபக்சேயும், ரணில் விக்ரமசிங்கேவும் ஆண்டுக்கு ஒரு முறையாவது திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வருகிறார்கள்; இன்னும் சில இந்துக் கடவுள்களை வணங்க தமிழகம், கேரளம் வந்து செல்கின்றனர். இந்தக் கோவில்களில் இருக்கும் அவாளும் தீபாராதனை, சிறப்பு பூஜை உள்ளிட்ட அனைத்தையும் செய்து மகிழ்விக்கின்றனர். இங்கு மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக்கோவில்களிலும் ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதைதான்.
உண்மையான பவுத்தனுக்கு ஜாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு(புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். ஜாதிகளுக்கு எதிரானவர்.
ஒரு பைசாத்தமிழன் என்ற இதழ் நடத்திய அயோத்திதாசர் தமிழகத்தில் பவுத்தம் பரப்பினார். "புத்தம் என்பதுமதமல்ல; அது ஒரு நெறி” என்பார் தந்தை பெரியார். "இந்துவாகப் பிறந்த நான் இந்துவாகச் சாகமாட்டேன்” என்று உறுதியேற்ற அம்பேத்கர் பவுத்தம் தழுவினார். 'புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலை எழுதினார்.
அன்பைப் போதிக்கும் புத்தரின் போதனைகளை சிங்களவர்கள் உள்ளபடியே ஏற்றிருந்தால் தமிழர்களைக் கொன்று குவித்திருப்பார்களா? ஒரு புத்த பிக்குவின் போதனையால் போர்களே வாழ்க்கையாய் இருந்த அசோகன் இனி போர் புரியமாட்டேன் எனச் சபதம் ஏற்று பவுத்தம் தழுவினான். இதனால் புத்தரின் கொள்கையை உலகம் வியந்து வரவேற்றது புத்தருக்குப் பெருமை சேர்த்தது. ஆனால், சிங்கள புத்த பிக்குகளின் போதனையால் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். மனித மாமிசம் கேட்பவன் எப்படி புத்தரைப் பின்பற்றுபவனாக இருக்க முடியும்? இலங்கை மண்ணில் தமிழர்களின் ரத்தத்தால் புத்தர் களங்கப்படுத்தப்பட்டார். சிங்கள புத்த பிக்குகளின் இனவெறிக்கு புத்தரா பொறுப்பாக முடியும்? ஆரிய இனவெறிதான் உலகிலேயே மிகக் கொடூரமானது. மற்ற இனத்தவர் மீது வெறுப்பை உமிழ்வது. வேதங்கள் முழுதும் ஆரிய இன வெறிதானே விரவிக் கிடக்கின்றன.
அன்றைய இட்லர் 'ஆரியனே உலகை ஆளப்பிறந்தவன்’ என்று கொக்கரித்து பல இலட்சம் யூதர்களைக் கொன்றான். இன்றைய இட்லர் ராஜபக்சே 'சிங்களனே சிறீலங்காவை ஆள்வான்' என்று கொக்கரித்து தமிழர்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிடுகிறான். எனவே,ஈழ மண்ணில் நிகழ்த்தப்படும் சிங்கள மயமாக்கலுக்கு புத்தர் பயன்படுத்தப்படுகிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
ஈழத்தில் நிலவும் இச்சூழலில்தான் இந்துத்துவாக்கள் தங்கள் மூக்கை திடீரென இப்போது நுழைக்கின்றனர். தமிழர்கள் உயிர்களை இழக்கும் போதெல்லாம் கண்டுகொள்ளாதவர்கள், தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களான இந்துக் கோவில்கள் அகற்றப்படும் போது அலறுகிறார்கள். மனித உயிர்களைக் காப்பாற்றக் குரல் கொடுக்காதவர்கள் மத நிறுவனங்களைக் காக்க குரல் எழுப்புகின்றனர். இந்துக்கோவில்களை அகற்றுவதைக் கண்டிக்க நம்மைப் போன்ற மதமற்ற மனிதநேயர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமையில் ஒரு விழுக்காடாவது இந்துத்துவ வெறியர்களுக்கு இருக்கமுடியுமா? இந்தியாவில் இஸ்லாமியர்களின் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு சிங்களர்களின் இந்துக்கோவில் இடிப்பைக் கண்டிக்கும் தார்மீக உரிமைதான் உண்டா?
இந்த சூட்சுமத்தை ஈழத்தமிழர்களும் புதிய தமிழ் தேசியங்களும் புரிந்துகொள்ளவேண்டும். 'ஈழச்சிக்கலை தமிழர்களின் சிக்கல் என்ற அளவில் சுருக்கப்பட்டுவிட்டது; அதனை மனிதநேய அடிப்படையில் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லாததால்தான், அது போதுமான கவனம் பெறமுடியாமல் போய்விட்டது' என்பது பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்து என்பதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இந்நிலையில் இப்போதுதான் ராஜபக்சே மீதான போர்க்குற்றம் அய்.நா. அவைக்குச் சென்றுள்ளது. 21 ஆம் நூற்றாண்டு ஆரிய இட்லராக ராஜபக்சே பார்க்கப்படுகிறார். உலகின் பல நாடுகளும் இப்போதுதான் ஈழச்சிக்கலை மனிதப் படுகொலையாகப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்நிலையில் அதனை மத ரீதியாக மாற்றி முன்னெடுக்க முயல்வது எந்தவகையிலும் சரியாக இருக்க முடியாது. பட்டது போதும் சிங்களனால், இனி அவர்களுடன் இணைந்து வாழமுடியாது என்ற நிலையில் தமிழீழமே தீர்வு என்ற முடிவுக்கு ஈழத்தமிழர்களும், அவர்களை ஆதரிக்கும் தமிழகத் தமிழர்களும் வந்துவிட்டனர். ஆனால், இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவரான சுஷ்மா சுவராஜின் இந்துத்துவ பா.ஜ.க., ஒன்றுபட்ட இலங்கையே நீடிக்கவேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. தமிழீழம் என்ற வார்த்தையே இந்துத்துவாக்களின் வாயிலிருந்து வராது. அரசியலுக்காக பா.ஜ.க. அவ்வப்போது பட்டும் படாமலுமே ஈழச்சிக்கலில் பங்கெடுத்துள்ளது. ஏனென்றால் சிங்களவர்கள் எனப்படுவோர் இந்தியாவின் வட பகுதியில் இருந்து ஈழ மண்ணில் குடியேறிய ஆரிய வம்சாவழியினர் என்பது அவர்களுக்குத் தெரியும். ஸ்ரீலங்கா என்ற வார்த்தையே சமஸ்கிருத மூலச்சொல்லில் இருந்து பிறந்ததுதான். இந்நிலையில் புதிய பார்ப்பன அடிவருடிகள் மேலும் குட்டையைக் குழப்பி ஈழச்சிக்கலில் மதத்தை நுழைத்து மேலும் சிக்கலை ஏற்படுத்தாமல் இருப்பதே நல்லது.
இன்னொரு செய்தியையும் நாம் ஈழத்தமிழர்களுக்குச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்நாளும் குரல் கொடுத்துவரும் திராவிட இயக்கத்துடன் இணைந்து தமிழகத்தில் வாழும் தாழ்த்தப்பட்டோரும் ஈழ விடுதலைக்கு என்றென்றும் ஆதரவானவர்கள். இங்கே இந்து மத ஜாதி இழிவைச் சுமந்து கொண்டு வாழும் அவர்கள், இப்போது பல பகுதிகளில் தம்மை இந்து மதத்திலிருந்து விடுவித்துக் கொண்டு பவுத்தத்தில் இணைந்து வருகிறார்கள்.
இச்சூழலில் சிங்களத்தில் நடக்கும் இனவெறி ஆக்கிரமிப்பை, தவறாக பவுத்தமயமாக்கல் என்ற பெயரால் அழைப்பது புத்தரையே ஆக்கிரமிப்பாளராகச் சித்தரிப்பதாகும். தமிழக சமூக அரசியல் வரலாறு கடந்த நூறாண்டுகளாக ஜாதி இழிவுக்கு எதிரான போராட்டங்கள் நிரம்பியது. அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஜாதி இழிவுக்கு எதிராக மாற்று வழியாக புத்தரே இங்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். பண்டிதர் அயோத்திதாசர் தொடங்கி தந்தை பெரியார் வரை பவுத்தநெறியைப் பரப்பி வந்திருக்கிறார்கள். எனவே, பவுத்தமயமாக்கல் என்ற சொல்லாடல் தவிர்க்கப்படவேண்டும். சிங்கள மயமாக்கல் என்பதே சரியானது. சிங்கள இனவெறியில் புத்தரை சிக்க வைக்க வேண்டாம்.