இந்நிலையில் அண்மையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கப் பாடலில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இந்தப் பாடலின் வரிகளை இணைத்திருந்தார்.அந்தப் பாடலை இசையோடு பாடிக்கொண்டிருந்தபோது,கணியன் பூன்குன்றனார் இந்தப் பாடலை எந்தப் பொருளில் பாடியிருப்பார் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.
சில நாட்களுக்கு முன் எனது ஊரான காரைக்குடி சென்றிருந்தேன்.எப்போதும் ஊருக்குச் சென்றால் எனது தமிழாசிரியர் பாவலர்மணி ஆ.பழநி அவர்களைச் சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம்.அப்போதெல்லாம் அரசியல் பற்றியும்,தமிழ் குறித்தும் உரையாடுவேன். இந்த முறை சென்றபோது யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் பற்றி பேசினேன்.இப்பாடல் குறித்து அவர் சொன்ன செய்தி எனக்குப்புதிதாக இருந்தது.
”கணியன் பூங்குன்றனார் ஆசீவகம் என்னும் சமயத்தைச் சார்ந்தவர்;அந்தச் சமயத்தின் கொள்கையைத்தான் இந்தப்பாடல் கூறுகிறது,’’ என்று பழநி அய்யா அவர்கள் குறிப்பிட்டார்.இது குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறிய அவர்,முனைவர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆசீவகம் குறித்து ஆய்வு நூல் எழுதியுள்ளார்,அதில் மேலும் சில தகவல்கள் கிடைக்கலாம்;எனவே அந்நூலைப் பெற்றுத்தர உதவிசெய் என்றார்.அவ்வாறே அந்நூலையும் பெற்றுத்தர உதவினேன்.
சில நாட்கள் கழித்து பழநி அய்யா அவர்களிடம் கணியன் பூங்குன்றனாரின் பாடலுக்கான விளக்கத்தை எனக்கு எழுதித் தரமுடியுமா?என்று தொலைபேசியில் கேட்க,அவர் அன்றே எழுதி அனுப்பிவிட்டார்.
கணியன் பூங்குன்றனாரின் பாடலும் அதற்கு பாவலர்மணி ஆ.பழநி அவர்கள் எழுதிய கருத்துரையையும் இங்கே தருகிறேன்.
அதற்கு முன்பாக ஆ.பழநி அவர்கள் பற்றி சில குறிப்புகள்: இவரது ’அனிச்ச அடி’ என்னும் நூல் தமிழக அரசின் பரிசினைப்பெற்றது;பல பல்கலைக் கழகங்களில் பாடமாக உள்ளது.சிலப்பதிகாரம் குறித்து பல ஆய்வு நூல்களை எழுதியுள்ள இவர்,சாலிமைந்தன்,காரல் மார்க்ஸ் ஆகிய காப்பியங்களைப் படைத்தவர்.பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? என்ற ஒப்பாய்வு நூலையும் எழுதியுள்ளார்.காரைக்குடி மீ.சு.மேல் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சீரிய பகுத்தறிவாளர்.
பழநி அய்யா அவர்களிடம் மூன்றாண்டுகள் தமிழ் கற்றதால்தான் தமிழ் மீது பற்றும்,தமிழ் வளர்ச்சியில் குன்றா ஆர்வமும்,ஓரளவுக்கேனும் எழுதும் ஆற்றலும் எனக்கு வாய்த்தது.
ஆ.பழநி அவர்கள் எழுதி அனுப்பியவாறு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலை எப்படிப் பிரித்துப் படிக்க வேண்டும் என்ற முறைப்படி கீழே வழங்கப்பட்டுள்ளது.கருத்துரையும் அவ்வாறே...
1 யாதும் ஊரே யாவரும் கேளிர்
2 தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
3 சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதென்று மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே;
மின்னொடு
இனிதென்று மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே;
மின்னொடு
4 வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்;
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்;
ஆதலின் மாட்சியின்
5 பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றன்
(பாடல்192, புறநானூறு)
(பாடல்192, புறநானூறு)
பாடலின் கருத்து:
- எல்லா ஊரும் எம்முடைய ஊரே; எல்லா மனிதர்களும் எம்முடைய உறவினர்களே;
- தீமையாயினும் சரி;நன்மையாயினும் சரி;அது பிறர் கொடுக்க வருவதில்லை.துன்புறுவதாயினும்-அத்துன்பத்திலிருந்து விடுபடுவதாயினும் சரி;அதுவும் பிறரால் நிகழ்வதில்லை. இவையெல்லாம் அவன் செய்த செயலின் எதிர்விளைவுதான்.அதாவது பழவினையின் பயன்தான்.
- இறப்பு என்பதும் புதுமையானதன்று;அது முன்னரே முடிவுசெய்யப்பட்டதுதான்.வாழ்தல் இனிமையானது என்று எண்ணி நாங்கள் மகிழ்ச்சி கொள்வதில்லை.ஏனெனில் அது துன்பங்களுக்கு இடையே எப்போதாவது வந்து செல்வதுதான். வெறுக்கத்தக்க செயல்கள் நடைபெறும்போது நாங்கள் அவற்றைத் துன்பமென்று ஒதுக்குவதில்லை.ஏனெனில் அவற்றை நுகர்வதைத் தவிர வேறு வழியில்லைஎன்பதனால். ஆம்,பழவினை அத்துணை வலிமையானது.
4. மின்னி முழங்கிய வானம் மழைத்துளிகளை இடைவிடாது பொழிய,அதனால் கல்லிலே மோதிப் பேரொலியோடு வருகின்ற புதுவெள்ளப் பேராற்றில் அகப்பட்ட ஒரு புணை(மிதவை,ஓடம்) வெள்ளம் எங்கெல்லாம் செலுத்துமோ அங்கெல்லாம் அலைபுரண்டு திரியுமே அல்லால் தான்விரும்பிய இடத்தில் கரை சேர முடியாது.அதைப்போல அரிய உயிரானது பழவினை செலுத்தும் வழியிலேதான் செல்ல முடியுமேயன்றித் தனக்கென தனிவழியைத் தேடிச்செல்ல முடியாது என்பதை மேலோர்கள் காட்டிய வழியில் அறிந்து கொண்டுள்ளோம்.
- அதனால்தான் நாங்கள் பெருமையிற் சிறந்தவர்களைப் போற்றுவதுமில்லை;கீழோரைத் தூற்றுவதுமில்லை.ஏனெனில் அவர்கள் பெரியோராக இருப்பதற்கும்,சிறியோராக இருப்பதற்கும் பழவினைதான் காரணமேயன்றி இவர்தம் முயற்சியோ-முயற்சி இன்மையோ காரணம் அன்று.இவர்கள் காரணர் அல்லர் என்றால் இவர்களைப் போற்றுவதும் தூற்றுவதும் எதற்காக? ஆதலின் எங்களுக்கு எதன்மீதும் – எவர்மீதும் வெறுப்புமில்லை;தனிப்பட்ட விருப்பும் இல்லை. இந்த மன நிலையில்தான் கூறுகின்றோம்;’எல்லா ஊரும் எம்முடைய ஊரே;எல்லா மக்களும் எம்முடைய உறவினர்களே’என்று.
கருத்துரை: பாவலர்மணி ஆ.பழநி-காரைக்குடி.