1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து
மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தோழர்கள் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் தலைமையில் பவுத்த மார்க்கம் தழுவினார்கள்.அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள்:-
1.பிரம்மனையோ விஷ்ணுவையோ சிவனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
2.இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
3.இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
4.கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.
5.பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப் பிரச்சாரம் செய்வது விஷமத்தனமானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
6.சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒரு போதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.
7.பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.
8.பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
9.அனைவரும் சமம் என்ற கொள்கையே நான் நம்புகிறேன்.
10.சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.
11.பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.
12.தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.
13.எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்;
அவைகளைக் காக்க முயலுவேன்.
14.நான் பொய் சொல்லமாட்டேன்.
15.நான் திருட மாட்டேன்.
16.காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.
17.போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.
18.ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.
19.பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர் களின் விடுதலைக்குக் கேடாக இருப்பது மான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக்கொள்ளுகிறேன்
20.புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
21.இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.
22.புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
No comments:
Post a Comment