Sunday, October 10, 2010

நமக்கும் பொறுப்பு இருக்கிறது நண்பர்களே...


இன்று, 2010 ஆம் ஆண்டு, 10 மாதம், 10 ஆம் நாள், இரவு 10 மணி 10 நிமிடத்தில் இருந்து, 10 நிமிடம் 10 மணித்துளி அளவுக்கு எனது இல்லத்தில் மின் பயன்பாட்டை நிறுத்திவைத்தேன்.உலக வெப்ப மயம் குறித்த விழிப்புணர்வுக்காக மின்சாரப் பயன்பாட்டை நிறுத்திவையுங்கள் என்ற வேண்டுகோள் செய்தியை, காலை நாளிதழில் படித்த  எனது மகள் தமிழீழம் எனக்கு நினைவுபடுத்தி மின்சாரத்தை நிறுத்தச் செய்தார்.சென்ற ஆண்டு 2009 செப் 9 இல் இதேபோல மின்சாரத்தை நிறுத்தினோமே நினைவில்லையா என்று கேட்டார்.ஆஹா...பரவாயில்லையே நம்மள மாதிரியே நம்ம பொண்ணும் வரும்போலயே என்று மகிழ்ந்தவாறு இந்தப் பதிவை இடுகிறேன்.
அறிவியல் வளர்ச்சியைப் பெருமளவு பயன்படுத்திக் கொண்ட தலைமுறை நாம்தான்.நமக்கு முன்னாட்களில் பிறந்து மறைந்தவர்கள் பலருக்கு கணினியும்,செல்பேசியும் தெரியாது.நினைத்தவுடனே இப்படி செய்தியை நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளமுடிகிறதே நம்மால்!அவர்களுக்கு அது வாய்க்கவில்லையே!ஆக,இந்த அனுபவிப்புகள் எல்லாம் மின்சாரத்தால் கிடைத்தது என்பதை மறக்கமுடியுமா? மின்சாரம் தேவையின்றி வீணாவதை பொறுத்துக்கொண்டிருக்கலாமா! இயன்றவரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்திலும், உலக வெப்பமயமாவதைத் தவிர்க்கும் பொருட்டும், இந்த 10 நிமிட மின் பயன்பாட்டு நிறுத்தத்தை நான் எடுத்துக்கொண்டேன்.

நண்பர்களே..உங்களில் பலர் இதுபோல செய்திருக்கக் கூடும்.அவர்களையெல்லாம்.பாராட்டுகிறேன்,நன்றி செலுத்துகிறேன்.இதனை மறந்தவர்கள் 2011 க்காக் காத்திருக்க வேண்டாம்.நாளையே கூட சில மணித்துளிகள் மின்பயன்பாட்டை நிறுத்திவைக்கலாம்.நம்மைப் போல சமூகம் குறித்து பேசுபவர்கள்,எழுதுபவர்கள்தான் முன் மாதிரியாக இருக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

நமது வசிப்பிடங்கள்,பணியிடங்களில் மின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம்.உலகை வெப்ப மயத்திலிருந்து காக்க நம்மால் இயன்ற இந்தத் தொண்டைச் செய்வோம்.

No comments:

Post a Comment