Friday, October 14, 2011

தீபாவளி : கொண்டாடத்தான் வேண்டுமா?


தீபாவளிப் பண்டிகை வரப்போகிறது. (ஆம்,பண்டிகைதான்; திருநாள் அல்ல) பெயரிலேயே தமிழ் இல்லை. ஆகவே இது நம்முடைய விழா அல்ல என்பது தெளிவாகிறது.
"நம்ம விழாவா இல்லைன்னா என்ன சார், மக்களுக்குக் கொண்டாட்டம் வேண்டாமா? அதுனால தீபாவளியக் கொண்டாடுறதா வச்சுக்குங்களேன்" என்கிறான் நவீனத்தமிழன்.
கொண்டாட்டம் தேவைதான், ஆனால் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டாமா? கொண்டாட்டத்திற்காக நம்மை இழிவு செய்யும் கதையை மய்யமாகக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடலாமா? இந்தக் கதைகள் ஒரு புறம் இருக்கட்டும். தீபாவளி என்பது நகர மக்களின் கேளிக்கைகளுக்கான விழாவாகத்தான் முக்கியத்துவம் பெற்றது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாக நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தீபாவளி புகுந்தது. புதுத் துணி எடுப்பது, புது விதமான பலகாரங்கள் செய்து உண்பது, பட்டாசுகள் கொளுத்துவது போன்ற அதுவரை தமிழ்நாட்டில் இல்லாத புதுவிதங்கள் வந்ததால் அன்று தீபாவளி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அக்காலக்கட்டத்தில் ஒரு சராசரிக் குடும்பம் துணி எடுப்பதற்காக தீபாவளி வரை காத்திருக்கும். கடைகளிலும் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்புதான் புதிய வண்ணங்களில், வடிவமைப்புகளில் துணி ரகங்கள் விற்பனைக்கு வரும்.
எனவே, தீபாவளி மாதமான அய்ப்பசி மாதத்திற்கு முன்பு வரும் ஆடியில் தள்ளுபடி வியாபாரம் செய்வார்கள்.
குறைந்த விலைக்கு முந்தைய ஆண்டு வாங்கிய துணிகளை விற்றுவிடுவார்கள். ( தை முதல் நாள்தான் பொங்கல் என்பது போல தீபாவளிக்கு குறிப்பிட்ட ஒரே நாள் எல்லாம் இல்லை. அய்ப்பசியில் எந்த நாளாவது வரும். அதாவது இங்கிலீஷ் மாதங்களில் அக்டோபரில் அல்லது நவம்பரில் வரும். அது எந்த நாள் என்பது சிவகாசியில் பஞ்சாங்கம் தயாரிக்கும் பார்ப்பானுக்கு மட்டும்தான் தெரியும்.
இப்படி ஒரு விஷேஷம்(?) இந்தப் பண்டிகைக்கு...) ஆனால், இன்றைய நிலை என்ன? ஆண்டு முழுதும் துணி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆடியில் மட்டுமல்ல எல்லா மாதங்களும் தள்ளுபடி வியாபாரம் நடக்கிறது. ஆண்டுக்கு 365 நாட்களும் தியாகராயர் நகரின் உஸ்மான் சாலையில் மக்கள் திரள்தான். தமிழ்நாட்டின் பெருநகரங்களிலும் இதே நிலைதான். ஆக, தீபாவளிக்குத்தான் துணி எடுப்பது என்பது கிட்டத்தட்ட மாறிவிட்டது.
அடுத்து இப்போது யாரும் வீட்டில் பலகாரங்கள் செய்வது இல்லை. காரணம் முன்பு பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்தனர். இப்போது அப்படி இல்லை; வெளியில் வேலைக்குச் செல்கின்றனர். எனவே வீட்டில் அன்றாட சமையலே வாரத்திற்கு சில நாட்களுக்கு இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இந்நிலையில் தீபாவளிக்கு எங்கே பலகாரங்கள் செய்வது? கடைகளில் வாங்கிவந்து விடுகிறார்கள். எஞ்சி இருப்பது பட்டாசு கொளுத்தி காசைக் கரியாக்குவது மட்டும்தான்.
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பட்டாசு வாங்க வேண்டியுள்ளது. அவர்கள் அதனைக்  கொளுத்தி மகிழ்வதில் பெற்றோருக்கு ஒரு மகிழ்ச்சி. முன்பெல்லாம் பட்டாசு கொளுத்துவது தீபாவளிக்கு மட்டும்தான்; ஆனால், இப்போது இந்திய முதலாளிகளின் கஜானாவை நிரப்பும் பன்னாட்டு நட்சத்திர வீரர்கள் விளையாடும்  கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வென்றாலே பட்டாசுச் சத்தம் காதைப் பிளக்கிறது. ஆக பட்டாசும் தீபாவளிக்கு மட்டும்தான் என்பதற்கும் வேட்டு வைத்தாகிவிட்டது. இப்படி தீபாவளியைப் பிரபலப்படுத்த கொண்டுவரப்பட்ட அத்தனை அம்சங்களும் இப்போது பிரபலமில்லாமல் போய்விட்டன.
அந்தக்கால பக்தி வணிகர்களின் தீபாவளி, இந்தக் காலத்தில் இப்படி மதிப்பிழந்தாலும், இந்தக் கால வணிகர்கள் சும்மா இருப்பார்களா? விடுமுறை நாளிலாவது  வெளியில் வந்து சக சமூகத்தைக் கண்டு வந்த மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும் தொலைக்காட்சி வந்துவிட்டதே.
அது சும்மா இருக்குமா? தீபாவளியை ஒட்டி இரண்டு மூன்று நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி சினிமாக்காரர்களின் அடுப்பங்கரையிலிருந்து படுக்கையறைவரை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறார்கள். விடுமுறை சுகம் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறது.
இந்நிலையில் இன்னொரு பக்கம் நம் சமூகத்தில் சில பத்து ஆண்டுகளாக வளர்ந்துவரும் குடும்ப விழாக்களையும் குறிப்பிட வேண்டும். அவற்றில் குறிப்பாக இரண்டு விழாக்களைச் சொல்லலாம். முதலாவதாக, முன்பு நம்மிடம் இல்லாத பிறந்தநாள் விழாக்கள் இப்போது வந்துவிட்டன. இது ஒரு வகையில் வரவேற்க வேண்டிய அம்சம்.
குழந்தைகளுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதன் மூலம் உறவினர்களை, நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியாக அமைந்திருப்பது சமூக உறவைப் பலப்படுத்தும் நல்ல அம்சம்.
இன்னொரு விழா திருமண நாள் கொண்டாட்டம். இது குடும்பத்திற்குள் கொண்டாடும் விழாவாக அமைந்துள்ளது. இந்த நாளில் வாழ்க்கை இணையர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் வாங்கிக் கொடுத்தல், குடும்பத் துடன் வெளியில் சென்று அந்த நாளை மகிழ்ச்சி யாகச் செலவழித்தல் என வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் புதிய விழாவும் திருமண உறவை, வாழ் விணையரின் புரிதலை மேம்படுத்துகிறது எனலாம்.
இப்படி, தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் சூழலில் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளுமே தங்களது வணிகத்திற்காகவும் மற்றும் இந்த இரண்டு துறைகளிலும் பெரும்பாலும் பார்ப்பன மேல் ஜாதிக்காரர்கள் இருப்பதாலும் இன்னும் அர்த்தமற்ற தீபாவளியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. வியாபாரத்திற்கு அடிப்படையான விளம்பரத்தால் எப்படி கடவுளும் மதமும் வாழவைக்கப்படுகிறதோ அதுபோலவே இந்தப் பண்டிகையும் வாழவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம் மொழியைப் பேசாத, நம் உணவை உண்ணாத, நம் உடையை அணியாத வட இந்திய உயர்ஜாதி வர்க்கம் கொண்டாடும் தீபாவளி எப்படி நம்முடைய விழாவாக இருக்க முடியும்?
தீபாவளியின் கதையும் அது எங்கிருந்து வந்தது என்பது பற்றியும் தந்தை பெரியாரும் தமிழறிஞர்களும் தந்துள்ள ஆய்வுக் கருத்துகள் அடுத்தடுத்த பக்கங்களில் தரப்பட்டுள்ளன. அந்தக் கருத்துகளின்படி தீபாவளி நமக்குத் தொடர்புடையதல்ல; நடப்பிலும் தீபாவளிக்காக உருவாக்கப்பட்ட சிறப்புகளும் இன்று காலாவதியாகிவிட்டன.
உழைத்துக் களைத்த மனிதர்கள் ஓய்வெடுக்கத்தான் வாரத்தின் இறுதி நாள் ஓய்வுக்காக ஒதுக்கப்பட்டது. ஆண்டு முழுதும் பணிசெய்வோர் தமது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கத்தான் சுற்றுலா செல்லும் வழக்கம் உருவானது.
அறிவு வளர்ச்சி பெறாத அந்நாளைய சமூகத்தின் மீது தமது மதக் கருத்துகளைத் திணித்து அதில் கேளிக்கைகளைப் புகுத்தி  உருவாக்கப்பட்டவைதான் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள். ஆனால், இன்றைய சமூகத்தின் ஓய்வும், விடுமுறைகளும், குடும்ப விழாக்களும் புதிய வடிவமெடுத்துவிட்டன. என்று கையில் பணம் கிடைக்கிறதோ அன்று புதுத் துணி எடுத்துக் கொள்கிறார்கள்; இன்னும் பணம் இருந்தால் அந்த நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவழிக்கிறார்கள்.
விழாக் கொண்டாடித்தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கொரு அர்த்தம் இருக்கவேண்டும் பொங்கல் விழாப்போல.
அர்த்தமும் இல்லாமல் நடைமுறையிலும் மாறிவிட்ட தீபாவளியைக் கொண்டாடத்தான் வேண்டுமா?
- மணிமகன்
(படங்கள் : வடஇந்தியாவில் திராவிடன் நரகாசுரனை மிகக் கோரமாக சித்தரிக்கும் உருவ பொம்மைகள்)

Sunday, September 11, 2011

ஊசலாடும் மதம்



கடவுள், மத நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்வி எழுப்பிவிட்டால் அதற்கு நேர்மையாக, நேரடியாக மதவாதிகள் பதில் சொல்வதில்லை. சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவார்கள். மக்கள் ஒழுக்கத்துடன் வாழத்தான் மதங்கள் உருவானது என்று சொல்வார்கள். மதக்கடவுள்களின் கதைகளில் உள்ள ஒழுக்கச் சிதைவுகளையோ,  மதவாதிகளின் ஒழுக்கக் கேட்டைப் பற்றியோ எடுத்துக்காட்டுகளுடன் கேள்வி கேட்டுவிட்டால் சப்பைக்கட்டுக் கட்டுவார்கள்.

தம் இளம்பருவத்திலிருந்தே மத நம்பிக்கை திணிக்கப்பட்ட நிலையில், சுயஅறிவை முன்னிறுத்தி கேள்வி கேட்டுப் பழக்கப்படாத மத நம்பிக்கையாளர்களால் பகுத்தறிவுக் கேள்விகளை எதிர்கொள்ள இயலாது. மதம் என்பது பெரும்பான்மை மக்களைச் சிந்திக்கவிடாமல் மயக்கி வைத்திருக்கும் ஒரு கருத்தியல் என்பதை ஏற்க மறுப்பார்கள். தம்மைக் காட்டிலும் தமது மதத்திற்கும் கடவுளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மூர்க்கமான மனநிலை கொண்டவர்களும் உண்டு.
கடவுள் நம்பிக்கை மீதான எதிர்க் கேள்விகள் கேட்கப்படும் போது நான் நம்பும் ஒன்றை நீ இல்லை என்பதா? என்ற எண்ணம் மேலோங்குவதால்தான் அவர்களுக்குக் கோபம் வருகிறது. இங்கே கடவுள், மதம் மீதான பற்று என்பது நான் என்கிற மனிதனின் தன் முனைப்பு(தன் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் காணும் நிலை)க்குள் வந்துவிடுகிறது. அதனால்தான், கடவுள் நம்பிக்கை மீதான கேள்வி என்பது தன்மீதான கேள்வியாகி கோபத்தைத் தூண்டுகிறது.
இந்த அளவுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இடைவிடாது பரப்பப்பட்ட மதத்தின், கடவுளின் இன்றைய நிலை அய்ரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் எப்படி இருக்கின்றது? மிக வழுவாகக் கட்டி எழுப்பப்பட்ட கிறித்துவ மதம் இருக்கும் இந்த நாடுகளில் இப்போது மதத்தின் மீதான பிடிப்பு குறைந்து கொண்டே போவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா பற்றி, இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம் பற்றிய செய்திகளையெல்லாம் உலகச் செய்திகளாகத் தரும் முன்னணி இதழ்கள் இந்த ஆய்வு பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை, இணையதள செய்தி ஊடகங்கள்கூட வெளியிடவில்லை. அவர்களுக்கு வணிகம் செய்ய மதமும் கடவுளும் வேண்டுமே? தமிழில் ஒரே ஒரு ஆறுதல், தினகரன் நாளிதழ் தலையங்கம் தீட்டியது. தி இந்து இங்கிலீஷ் நாளிதழ் போப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகம் மற்றும் வடமேற்குப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் சமூகவியல் ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வு இன்னும் சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு, ஃபின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து  ஆகிய ஒன்பது நாடுகளில் மதங்கள் அடியோடு அழிந்து போகும் என்கிறது.
இதற்கு என்ன காரணம் என்பதையும் அந்த ஆய்வு மாணவர்கள் கூறுகின்றனர். மதத்தைச் சார்ந்திருப்பதால் நமக்கு நன்மை உண்டாகிறது என்ற எண்ணம் மக்களிடம் குறைந்து வருகிறது. மதத்தைச் சார்ந்திருந்து, அதன் போதனைகளைப் பின்பற்றாமலேயே நல்ல வாழ்க்கை வாழலாம் என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செக் குடியரசில்  நடந்த கணக்கெடுப்பில் அறுபது சதவீதம் பேர் தாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். மதத்தின் பெயரால் நடக்கும் நல்ல காரியங்களைக் காட்டிலும் அநீதிகள் அதிகம் நடக்கின்றன என்பது இவர்களின் எண்ணம் என்று அந்த மாணவர்கள் கூறுகின்றனர்.
மதத் தலைவர்களின் முரண்பாடுகளும் இதற்கு ஓரளவு  காரணமாக இருக்கலாம். மதத் தலைவர்கள், மத அமைப்புகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது; நான் சொல்வது போல நட, கடவுளுக்கு இதுதான் பிடிக்கும் என்று கட்டளையிடுவது இன்றைய புதிய தலைமுறைக்குப் பிடிக்கவில்லை என்பதும் இந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. நான் நல்லது செய்தால் எனக்கு நல்லது நடக்கும்; நான் ஏன் ஒரு மதத்தைப் பிடித்துக் கொண்டு அலைய வேண்டும் என்பதும் இந்த இளைய தலைமுறையின் எண்ணம் என்கிற கருத்தும் வெளிவந்திருக்கிறது.
இந்த ஆய்வு முடிவுகளை ஒத்துக் கொள்வதுபோல உள்ளது போப் பெனடிக்டின் பேச்சு. கடந்த மாதம்  கத்தோலிக்க கிறித்துவ மதத் தலைவர் போப் பெனடிக்ட் 16, ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றிருந்தார். ஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னமான, எல் எஸ்கோரியல் துறவிகளின் மடத்தில் சில நூறு இளம் கன்னித் துறவிகளிடம் பேசும் போது, மேற்கு நாடுகளில் மதச்சார்பின்மை பலமான பிடிமானத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது, கடவுளைப் பற்றி நமது நவீன சமூகத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நினைவு மறதி ஏற்பட்டிருக்கிறது என்று  போப் பெனடிக்ட் 16 தமது கவலையை வெளியிட்டுள்ளார். மேற்சொன்ன அந்த 9 நாடுகளைப் போலவே ஸ்பெயினிலும் கடந்த பத்து ஆண்டுகளில் கிறித்துவ மத நிறுவனங்களான தேவாலயங்களின் செல்வாக்குக் குறைந்துவருவதே போப்பின் இந்தப் பேச்சுக்குக் காரணம் என்று அந்நாட்டுச் சமூக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடவுள் நம்பிக்கை மனிதனின் தன்னம்பிக்கைக்கு எதிராக உள்ளது. மத நம்பிக்கை அடுத்த  மனிதனைத் தன்னிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. மத ஆதிக்கங்களும், மத வெறியும் தலைதூக்கும்போதுதான்  மனிதம் உணரப்படுகிறது. மதம் என்பது அபின் போன்றது என்று காரல் மார்க்ஸ் சொன்னதும், மதம் மக்களுக்கு விஷம் என்று பெரியார் சொன்னதும் மனிதநேயத்தின் அடிப்படையில்தான்.
அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தல் ஒழிய கடவுள் ஒழிவதைத் தடுக்க முடியாது என்றார் பெரியார். இன்றைய அறிவியல் அற்புதமான இணையம் உலகைச் சுருக்கி நம் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.
உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் மனித இனம் தம்மை முதலில் மனிதராக உணரும் எண்ணம் தொடங்கிவிட்டது. மனிதன் மகிழ்ச்சியாக வாழ வேண்டியவன் என்கிற உணர்வு வந்துவிட்டால் தேவையற்ற கட்டுக்களான கடவுளும், மதமும் மாளவேண்டியதுதான். அதன் தொடக்கப் புள்ளிதான்  இந்த ஆய்வு முடிவுகள்.
நன்றி:உண்மை செப் 1-15,2011

Sunday, July 31, 2011

குதிப்பதுதான் குண்டலினியா?



திருவண்ணாமலை ராஜசேகரன் என்ற ஒரு இளைஞன்.சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான்.அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு,நான் தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூடிக்கோண்டான்;ஆசிரமம் அமைத்தான்.சாமியார் தொழில்தான் எப்போதும் நல்லாக் கல்லாக் கட்டும் தொழில் ஆயிற்றே.கல்லாப் பெட்டி நிரம்பியது.பக்தி வியாபாரம் படு ஜோர்.காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார்.பேச்சில் வல்லவாரகப் பேசப்பட்டார்.அப்படிப் பேச இவரே பணம் கொடுத்து பலரையும் கிளப்பிவிட்டார்.புத்தகங்கள் போட்டார்.பல எழுத்து வியாபாரிகள் பணம் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்ததையெல்லாம் இவரது பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார்.கதவைத் திறகாற்று வரும் என்று முன்னணி ஏட்டில் தொடரும் வந்தது.

உடல் உழைப்பில்லாதவர்கள்,மனம் சோர்ந்தவர்கள்,குடும்பத்தோடு,குழந்தைகளோடு வீட்டில் அளவலாதவர்கள்,தனிமையில் இருப்பவர்கள்,கணவனை அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவர்கள்,முதியவர்கள் என வாழ்க்கையை ரசிக்கத்தெரியாத ரகத்தினர்,சமூகச் சிந்தனை இல்லாதவர்கள் இந்த மாதிரிச் சாமியார்களைச் சரணடைவதுதான் சில ஆண்டுகளாக ஒரு பேஷன்.அந்த பேஷன் இந்தச் சாமியாருக்கும் கை கொடுக்க கூட்டம் கூடியது.பணமும் சேர்ந்தது.கீதா உபதேசத்திலிருந்து பிரம்மச் சரியம் வரை வாய் கிழியப் பேசுவது நித்யானந்தாவின் சிறப்பு.கூடவே தியானம்,யோகம் போன்ற எளிதான உடற்பயிற்சிகளும் சொல்லித்தரப்பட்டன.ஊர் ஊருக்கு அமைப்புகள் உருவாயின.உபதேசங்களுக்குப் பயணமும் சென்றார்.சகல வசதிகளுடன் வாழ்க்கை முறை அமைந்தது.மனிதனின் உடல் தேவையும் ஏற்பட்டது சாமியாருக்கு.

ஒரு மார்க்கெட் இழந்த நடிகை ஆசிரமத்தில் அடைக்கலமானார்.அவரே சாமியாருக்குப் பணிவிடைகள் செய்தார்.இது நித்யானந்தாவே  சொல்லிய வாக்குமூலம்.ஆசிரமத்துக்குள் சிக்கல் உருவாக சாமியாரின் அந்தரங்கம் சி.டி.பதிவாகி இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பானது.நக்கீரன் பத்திரிக்கையில் நித்யானந்தாவின் உண்மை முகத்தை அவரது சீடர் லெனின் கருப்பன் என்ற தர்மானந்தா வெளிக்கொணர்ந்தார்.
ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை தேவைதான்.அதனை உலகம் ஏற்றுக்கொள்ளும்.ஆனால்,பிரமச்சரியம் பற்றிப் பேசியவர் அப்படி இருக்கலாமா என இந்து மதத்தினரே கேள்வி எழுப்பினர்.நித்யான்ந்தா மீது பாலியல் குற்றச் சாட்டுகள் எழ இவரது பிட்தி ஆசிரமம் கர்நாடகாவில் இருப்பதால் வழக்குப்பதிவானது.சில நாள் வட மாநிலங்களில் ஓடி ஒழிந்து பின் கைது செய்யப்பட்டு சாமியார் கம்பி எண்ணினார்.அவருடன் இருந்த நடிகை ரஞ்சிதாவோ தலைமறைவானார். வழக்கில் ஜாமீன் பெற்று ஆசிரம் திரும்பியவருக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தைரியம் இங்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்தது.

கடந்த ஜீலை 13 அன்று எல்லா பத்திரிகையளர்களையும் அழைத்து தனது தரப்பு கருத்துகளைச் சொல்லிய நித்யான்ந்தா அந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை;அது முழுக்க போலியானது;என்னிடம் பணம் பெற பேரம் பேசப்பட்டது;இதையெல்லாம் காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளேன் என்று கூறினார்.இவ்வளவு பேசியவர் நமது உண்மை நிருபரின் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கவில்லை.இன்னும் சிலர் கேட்ட தனது சொத்து விவரம் குறித்த கேள்விக்கும் விடை சொல்லவில்லை.ஆதராத்தை தருகிறேன் என்று கூறியவர் அதனைத் தராமலேயே பேட்டியை முடித்தார்.(பேட்டி முழு விவரம் பெரியார் வலைக்காட்சியில் காணலாம்: http://viduthalai.in/new/videos.html)

நித்யனந்தா ரஞ்சிதாவுடன் உள்ள வீடியோவை உலகமே பார்த்துவிட்டது.youtube இணையத்தளத்தில் ஒரு பகுதியை மட்டுமே பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.டெல்லியில் உள்ள ஆய்வு மையம் அந்த வீடியோவில் இருப்பது நித்யானதாவும் ரஞ்சிதாவும்தான் என்று சான்றிதழும் அளித்துவிட்டது. ஆனால்,அப்பட்டமாகப் பொய் கூறும் இவர், இழந்த மதிப்பை மரியாதையைத் திரும்ப மீட்க குண்டலினி யோகம் செய்யப்போவதாக அந்தப் பேட்டியின் போது கூறினார்.  அதன்படியே ஜூலை 15 அன்று அந்த நாடகத்தை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றினர்.

பக்தர்களைக் கூட்டிவைத்துக் கொண்டு குண்டலினி யாகம் என்று கூறி மந்திரங்கள் ஜெபித்து கையை உயர்த்தி சைகை காட்டினார்.ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்ட சிலர் கால்களை மடக்கி உட்கார்ந்தவாறே குதித்தனர்.தவளை போலத் தவ்வினார்கள்.இதுதான் குண்டலினி சக்தி என்பதுபோல நித்தியானந்தாவும் சிரித்தபடியே உஷ்..உஷ்..என்றார்.ஆனால்,சர்வ சக்தி உள்ளதாகவும்,த்மக்கு எல்லா யோகாசனங்களும் தெரியும் என்று புற்று நோயையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற வித்தைகள் தெரியும் என்று பேட்டியி பீற்றிக்கொண்ட நித்தியானந்தா குண்டலினியைச் செய்துகாட்டவில்லை.குறைந்தபட்சம் அந்த பக்தர்கள் குதித்ததுபோலக் கூடக் குதிக்கவில்லை.சிறிது நேரம் குதித்த அந்தபக்தர்கள் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டனர்.

இந்த நிகழ்ச்சியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க அமெரிக்காவில் இருந்தும் டெல்லியில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் ஆய்வு நிறுவன்ங்கள் வர இருக்கின்றன.அவர்களின் முன்னிலையிலும்,பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் செய்துகாட்டப்போவதாகச் சொன்னார்.எந்த நிறுவனத்தினரும் வந்த்தாகத் தெரியவில்லை.அந்த தகவலை நித்தியான்ந்தா தரப்பும் அறிவிக்கவில்லை.ஆனால்,அந்த நிகழ்ச்சிக்கு சில பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர்.இவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த கிரண் என்ற பத்திரிகையாளரும் ஒருவர். இவர் அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார்.
கடந்த 15ம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செய்தி சேகரிக்க சென்றேன். அப்போது, நித்தியானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.
உடனே அவரிடம், எனக்கு பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா, கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். எனது உடல் அமைப்புதான் இளைஞனை போன்றது. உணர்வுகள் 6 வயது சிறுவனை போன்றது. எனவே, எனது சக்தி அபிரிமிதமானது என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார். இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்தியானந்தா போலி சாமியார் என்பதை தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனி மேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

யோகாசங்களில் பல வகை உண்டு.அதில் குண்டலினி யோகாசனமும் ஒன்று என்று ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாகச் செய்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால் நித்யானந்தா சொல்வதுபோல புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலை சில அடிகள் உயர்த்தி அந்தரத்தில் பறப்பதுதான் குண்டலினி.இது சாத்தியமா என்பதே அந்தக் கேள்வி ?யோகாசன வகுப்பு நடத்துபவர்களும் இதுவரை இப்படிச் செய்து காட்டியதில்லை.அதுவே முழு வேலையாக இருப்பவர்களுக்கே இன்னும் சாத்தியப்பாடாதபோது இந்த மோசடிப்பேர்வழிக்கு எப்படி சாத்தியப்படும் என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
காவி அணிந்து கொண்டு ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்து வெட்டவெளிச்சமான ஒரு ஆபாசக்கூத்தை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி ஒருவரால் வெளிப்படையாக வந்து போலியாக மறுக்கமுடிகிறது என்றால் மக்கள் எவ்வளவு மடையர்களாக இருக்கிறார்கள் என்றல்லாவா நினைத்துக் கொண்டிருக்கவேண்டும்? இதுவே காவி அணியாத வேறு ஒரு துறையச் சேர்ந்தவராக இருந்தால் இப்படிப் பேசியிருக்க முடியுமா?வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேட்டி கொடுக்கமுடியுமா?இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்தக் காலிகள் ஏமாற்றுவார்கள்?

Saturday, July 16, 2011

கருப்புப் பணம் எங்கே இருக்கிறது?


இந்தியா ஒரு ஏழை நாடு என்று நீண்ட நாட்களாகச் சொல்லப்படுகிறது.இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள்.வேண்டுமானால் இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள்.இந்தியா ஏழைகள் அதிகம் வாழும் பணக்கார நாடு”.
பணக்காரர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,அதே நேரம் ஏழைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.இங்கே பரம்பரை பணக்காரர்கள் மட்டுமல்ல,புதிய தொழில் அதிபர்கள்,சாமியார்கள்,அரசியல்வாதிகள்;ஏன் சாமிகளும்கூட பணக்காரர்கள்தான்.பின் எப்படி இது ஏழை நாடு.எனவேதான் சொல்லுங்கள் இந்தியா ஏழைகள் வாழும் பணக்கார நாடு.
எல்லோரும் ஒருவரே என்ற சரிநிகர் சமமான நிலையை எட்டவேண்டும் என்பது குறித்துக் கவலைப்பாடாதவர்கள்,கல்வி,வேலை வாய்ப்பில் சமூகநீதி கிடைக்கவேண்டும் என்பது அக்கற கொள்ளாதவர்கள்,சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் ஜாதி,மத பேதம் ஒழிந்து எல்லோரும் சமத்துமாக வாழ  போராடாதவர்கள்,பொருளாதாரச் சமநிலை எய்திட உழைக்காதவர்கள் இவை குறித்தெல்லாம் வாய் திறக்காதவர்கள் இப்போது புதிதாய் கிளம்பியிருக்கிறார்கள்.கருப்புப்பணத்தைக் கண்டுபிடியுங்கள்;அது சுவிஸ் வங்கியில் இருந்தாலும் கொண்டுவாருங்கள் என்கிறார்கள்.நல்ல முழக்கம் தான் வரவேற்போம்.ஆனால்,சுவிஸ் வங்கியை விட அதிகமான பணம் இந்தியாவிலேயே இருக்கிறதே,அது தெரியாதா இவர்களுக்கு?
இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஜூலை 7 அன்று ஒரு கோவிலுக்குச் சென்று வழிபட்ட படங்கள் பத்திரிகைகளில் வந்துள்ளன.அவர் தொட்டு வணங்குவது தங்கத்தகடுகளால் ஆன கோவில் சுவரை.அந்தக் கோவில் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயில்.இவர் மட்டுமல்ல,ஏறக்குறைய இந்திய அரசியல்வாதிகள் பெரும்பகுதியினர் வெங்கடாஜலபதியைப் போல பணக்கார சாமிகள் குடிகொண்டிருக்கும் கோவில்களுக்குச் செல்லும் வழக்கம் உள்ளவர்கள்தான்.இவர்கள்தான் சட்டமன்றங்களில்,நாடளுமன்றங்களில் வறுமையைப் போக்க(?) திட்டம் தீட்டுகிறார்கள்.அந்தத் திட்டங்களில் வரிவசூல் பணங்களும்,வெளிநாட்டுக் கடன்களும்,நிதி உதவிகளும் மட்டுமே இடம்பெறும்.இவர்கள் சென்று வரும் கோவில்களில் உள்ள பணமும் நகையும் இந்த்த் திட்டங்களைத் தீட்டும் போது நினைவில் வராது.
இந்தியாவில் 5 லட்சத்து 74 ஆயிரம் பெரிய கோவில்கள்,2 இலட்சம் நடுத்தரக் கோவில்கள் உள்ளன.இவற்றில் 12 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் தங்கம் இருக்கிறதாம்.ஆண்டுக்கு 12 இலட்சத்து ஓராயிரம் கோடி ரூபாய் தட்சணையாக மட்டும் வருகிறது.இது ஒரு தோராயக் கணக்குதான்.இன்னும் முழுமையாக கோவில்கள் கணக்கெடுப்பு நடைபெறவில்லை.நடந்தால் கணக்கு எங்கேயோ போகலாம்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் ஒரு பாடல்தான் நினைவுக்கு வருகிறது.பகுத்தறிவுக்கவிராயர் உடுமலை நாராயணகவி எழுதிய அந்தப் பாடலில் கலைவாணர் இப்படிப்பாடுவார்..
எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்;
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தெடுவேன்;
சாமிகள் அடிகளில் சரண் புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?  
அவர் பாடியது போலத்தான் இந்தியாவில் சாமிகளின் அடிகளிலும்,சந்நியாசிகளிடமும் பணம் குவிந்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.
அண்மையில் திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது.ஒரு கோவிலிலேயே ஒரு லட்சம் கோடி என்றால் இந்தியா முழுதும் உள்ள கோவில்களில் எத்தனைக் கோடிக் கோடிகள் இருக்கும்?இது யாருடைய சொத்து?இது ஏன் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது?இந்தக் கேள்விகளை ஏன் அரசியல்வாதிகளோ,திடீர் அவதாரப் புருஷர்களான ஊழல் ஒழிப்பு உத்தமர்களோ எழுப்புவதில்லை?
இவர்கள் மட்டுமல்ல அடிக்கடி பீதி கிளப்பும் ஊடகங்களும் இதனைக் கண்டுகொள்வதில்லை.செய்திகள் அடிபடும் போது அதை யும் ஒரு செய்தியாகக் காட்டிவிட்டு அப்படியே விட்டுவிடுகிறார்கள்.தங்களுக்கு வேண்டாத அரசியல்வாதிகள் ஏதேனும் சட்ட்த்துக்கு முரணான காரியங்களில் ஈடுபட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராகக் குதித்து உலக நியாயம் பேசும் இந்த ஊடகங்கள் கோவிலில் குவிந்திருக்கும் பல லட்சம் கோடிகளைப் பற்றி வாய்திறப்பதில்லை.
எங்காவது கிராமங்களில் பழைய வீடுகளைத் தோண்டும்போதோ,ஏரி,குளங்கள் தூர்வாரும் போதோ,வயல்வெளிலோ புதையல் கிடைத்தால் அரசு என்ன சொல்கிறது.இந்தப் புதையல் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்றுதானே சொல்கிறது!பழைய அய்ம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டால் அதனை தொல்லியல் துறையினர் உடனே எடுத்துச் சென்று பொருட்காட்சியில் வைத்து அதனை அரசின் சொத்து ஆக்கிவிடுகிறார்கள் அல்லவா?
ஏழைகள் வாழும் கிராமங்களில்,நடுத்தர மக்கள் வாழும் நகரங்களில் மன்ணுக்கு அடியில் கிடைக்கும் புதையல்களும்,பொன்னும்பொருளும் அரசுக்குச் சொந்தம்;ஆனால்,பணக்கார சாமிகள் இருக்கும் கோவில்களில் உள்ள பொன்னும் பொருளும் அரசுக்குச் சொந்தமில்லையா?
திருப்பதியில் பணக்காரகளால் கொட்டப்படும் பணமும் தங்கமும் சென்ற நூற்றாண்டிலும்,இந்த நூற்றாண்டிலும் வரி ஏய்ப்பு செய்து பாவம் போக்க புண்ணியம் தேடி இந்தியப் பணக்காரர்களால் அளிக்கப்பட்டவை.பத்மனாபசாமி கோவிலில் உள்ள நகைகள் கடந்த 17 ஆம் நூற்றாண்டில் ஆண்ட மன்னர்களின் ஏக போகத்தால் மக்களை வதைத்து அடிமைகளாக நட்த்தப்பட்டு அடக்கி ஆண்டு அடித்த கொள்ளை.இந்த நகைகளும் பொற்காசுகளும் வானத்தில் இருந்து விழுந்துவிடவில்லை.மன்னருக்கு மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இருந்தும் ஆலயத்துக்கு மக்கள் அளித்த நன்கொடைகளில் இருந்தும்தான் உருவாக்கப்பட்டவை.எனவே,மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பணத்தை மக்கள் நலத்திற்குத்தான் பயன்படுத்தவேண்டும்என்று ஏராளமான கடிதங்கள் கேரளாவின் காசர்கோடு பகுதியில் இருந்து கேரள அரசின் தலைமைச் செயலகத்திற்கு குவிந்தவண்ணம் உல்லதாம்.
நாடு சுதந்திரம் பெற்றபோது  மன்னர்கள் ஒழிக்கப்பட்டு அவர்களது சொத்துகள் அரசின் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டன.மன்னர் மானியம்கூட ஒழிக்கப்பட்டுவிட்டது.அப்படி இருக்கையில் பழங்கோவில்களில் உள்ள கணக்கில் அடங்கா நகைகளும் அரசின் சொத்துதானே!
பத்மனாப சாமி கோவில் புதையல் வெளிவரத்துவங்கியவுடன் நாட்டின் பல கோவில்களில் உள்ள புதையல்கள் பற்றிய செய்திகள் வரத்தொடங்கிவிட்டன.
ஆசியாவிலேயே மிகப்பெரிய ராஜகோபுரத்தை கொண்ட சிறீரங்கம் ரெங்கநாதர் கோவிலிலும் தங்க புதையல் இருப்பதாக சிறீரங்கத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமாச்சாரியார் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அதில்,சிறீரங்கம் கோவில் கி.பி.1736ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 48 வரு டங்களாக ஆபத்துகளை சந்தித் தது. 1755ஆம் ஆண்டு பிரெஞ்சு படையினர் சிறீரங்கம் கோவிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொற்காசுகள் இருந்த சிறீபண் டாரத்தை கொள்ளையடிப்பதற் காக வந்தனர். இந்த சம்பவம் நாள் குறிப்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எனவே இந்த குறிப்புகள் மூலம் படையெடுப்பின் போது சிறீரங்கம் கோவிலில் ஆவிநாடன், திருச்சுற்றில் உள்ள கருடன் சன்னதிக்கு பின்புறம் அந்த ஆபரணங்களையும், பொற் காசுகளையும் அப்போதைய ஸ்தல தாரர்கள் (கோவில் நிருவாகத்தினர்) பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகிறது.
இப்போது உள்ள நவீன கருவி கள் மூலம் கருடன் சன்னதிக்கு எந்த வித சேதமும் ஏற்படாமல் சோதனை நடத்தி அந்த புதையல் பற்றி தெரிந்து கொள்ளலாம். எனவே இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூர் கோவிலிலும் புதையல் இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.
கோவில்களில் குடிகொண்டிருக்கும் சாமிகளெல்லாம் கோடீஸ்வரகளாக இருக்கும் நிலையில்,அவர்களைக் கும்பிடும் ஆசாமிகள் கோவணாண்டிகளாக இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
கருப்புப்பணம் என்று அரசு எதைச் சொல்கிறது?அரசின் வருமான வரிக்கணக்கில் வராத பணம்தான் கருப்புப்பணம்.அப்படியானால் இந்தக் கோவில்களில் உள்ள பணமும்,நகைகளும் மட்டுமல்லாமல் சாய்பாபா போன்ற சாமியார்களின் அறைகளில் உள்ள பணமும் அரசின் வருமானவரிக் கணக்கில் வராதவைதான். அரசின் பார்வை சுவிஸ் வங்கியின் மீது மட்டும் அல்லாமல் இந்தப் பக்கமும் திரும்பவேண்டும்.மீடியாக்களும் கருப்பணத்தைக் கைப்பற்றப் புறப்பட்டிருக்கும் புதிய ஊழல் ஒழிப்பு உத்தமர்களும் இந்தக் கோவில்களின் மீதும் கொஞ்சம்  கடைக் கண் பார்வையை வீசட்டும்.
உலகப் பொருளாதார மந்தம்,நாட்டின் பணவீக்கம்,மக்கள் நலம் மற்றும் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களுக்கான பணத்தேவை உள்ளிட்ட பொருளாதாரச் சிக்கல்களைக் களையவும்,வறுமை ஒழிப்புத்திட்டங்களுக்கும் பணத்தைத்தேடி இந்தியா எங்கேயும் அலையவேண்டாம்;எந்த நாட்டிடமும் கையேந்தவேண்டாம்;பன்னாட்டு நிதி நிறுவனத்திடமும் மண்டியிடவேண்டாம்.நம் நாட்டில் உள்ள கோவில்களிலும்,சாமியார்களின் மடங்களிலும் புகுந்தால் போதும்.


திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலில் இதுவரை கிடைத்துள்ள நகைகள்
  • தங்க மணிகள்
  • தங்கக் கயிறு
  • தங்கத்திலான சாமி சிலைகள்
  • தங்கக் கிரீடங்கள்
  • தங்க மாலைகள்
     இவை மூட்டைகளில் கட்டிவைக்கப்பட்டிருந்தவை.இது போக வைரம்,வைடூரியம்,ரத்தினம் ஆகியவை மட்டும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்குமாம்.
·         18 அடி நீளத்தில் 10 கிலோ எடை கொண்ட தங்கச் சங்கிலி.
·         1200 க்கும் மேற்பட்ட சரப்பொலிகள் என்று அழைக்கப்படும் தங்கச் சங்கிலிகள்.இவற்றில் அவல் என்ற வகையைச் சேர்ந்த ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
·         3 மணிமகுடங்கள்
·         தங்கத்தாம்பாளங்களில் தங்க நாணயங்கள்-450 கிலோ
·         சொர்ணத்தண்டு என்று அழைக்கப்படும் தங்கத்தடி.
·         தங்க நெக்லஸ் மற்றும் தங்கப்பதக்கங்கள்.
·         தங்க்க்குடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தங்கக்காசுகள்.
·         பெரிய ரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்ற அரியாசனம்.
·         மன்னர்கள் அணியும் தங்கம் மற்றும் நவரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்ற கிரீடங்கள்.
·         பத்னபசாமி சிலை ஒன்று.
·         2 அடி நீள தங்க விஷ்ணு சிலை
·         18 அடி உயர 35 கிலோ தங்க அங்கி.
·         கிருஷ்ணதேவராயர் காலத்து ராசிக்கல் மோதிரங்கள்
·         கிழக்கிந்தியக் கம்பெனி தங்க நாணயங்கள்.
    இன்னும் திறக்கவேண்டிய அறைகள் உள்ளன.


சாய்பாபாவின் அறையில் இதுவரை...

கடந்த ஏப்ரல் 24ம் தேதி மரணம் அடைந் சத்ய சாய்பாபாவின் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய்பாபா தங்கியிருந்த யஜுர் மந்திர் கட்டடத்தில் உள்ள அவரது தனி அறை கடந்த மாதம் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி, 12  கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது.
பின்னர் சில நாட்கள் கழித்து யஜுர் மந்திர் கட்டடத்தில் சாய்பாபாவின் தனி அறைக்கு அருகே உள்ள ஒரு அறையை அனந்தபூர் மாவட்ட இணை கலெக்டர் அனிதா ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்களும் உடன் இருந்தனர். அந்த அறையில், 116 கிலோ வெள்ளி பொருட்கள், 905 கிராம் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் உட்பட ரூ 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
      இன்னும் தோண்டவேண்டிய அறைகளும் உள்ளன;ஆராயவேண்டிய கணக்குகளும் உள்ளன

இந்தச் சாமியார் மட்டுமல்ல;இன்னும் கணக்குக் காட்டவேண்டிய சாமியார்களும் சோதனையிடவேண்டிய மடங்களும் ஏராளம் உள்ளன.

காசேதான் கடவுளடா....

திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலின் கடைசி ரகசிய அறையைத் திறக்கக் கூடாது என்று ஜூலை 8 அன்று உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.திருவாங்கூர் மன்னர் குடும்பத்தச் சேர்ந்த முன்னாள் இளவரசர் ராஜா மார்த்தாண்ட வர்மா தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ரவீந்திரன்,பட்நாயக் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,”ரகசிய அறைகள் திறக்கப்பட்ட பிறகு பலருடைய பார்வை கடவுள் மீது இல்லை;ரகசிய அறைகளின் மீதுதான் உள்ளதுஎன்று கூறியிருக்கிறார்கள்.

தேசம்,ஞானம்,கல்வி,ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி..... குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே...குதம்பாய் காசுக்குப் பின்னாலே... 

        - இது அன்றே பாடிய குதம்பைச் சித்தரின் பாடல்
                                              நன்றி:உண்மை (ஜுலை 16-31,2011)

Saturday, April 23, 2011

தேர்தல் காட்சிகள் சொல்வதென்ன?



தேர்தல் ஆணையம்

தமிழக சட்டமன்றத்தேர்தல் பரபரப்புகள்(?)ஓய்ந்து வாக்களிக்கும் நேரம் இது.இந்த முறை தேர்தல் ஆணையம் தனது வீரத்தை நிலை நாட்டி மக்களைச் சோதித்தது.வழக்கமாக மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடக்கும் வியாபாரம் இந்த தேர்தல் காலத்தில் இல்லை என்பது வணிகர்களின் குற்றச்சாட்டு.திருமணத்திற்கு நகை வாங்க கடைக்குச் சென்றாலே சோதனை.திருமண வீடுகளில் கறி சோறு போட்டால் அது குற்றம்;சில இடங்களில் கறி கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு விருந்து சாப்பிட வந்தவர்களின் வயிர்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டது தேர்தல் ஆணையம்.தமிழகத்தின் ஊர்ப்புறங்களில் வணிகத் தெருக்களில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.இவ்வளவு அமர்க்களங்களையும் தேர்தல் ஆணையம் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் செய்யவில்லையே ஏன் என்ற கேள்வி  நியாயமாக எழவேண்டும்.ஆனால்,நடுநிலை(?)நாயகர்களான பத்திரிகைகள் அப்படிக் கேட்கவில்லை.அவர்களும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு லாலி பாடினார்கள்.ஏன் தெரியுமா இந்தக் கெடுபிடிகள் எல்லாம் தி.மு.க.வுக்கு எதிராக மறைமுகமாக செய்யப்பட்டவை.ஏனென்றால் எப்போதுமே தேர்தல் என்றால் அது எத்தகைய சூழல் என்றாலும் களத்தில் முனைப்போடு இருப்பவன் தி.மு.க.தொண்டன் தான்.அவனை மனரீதியாக முடக்கும் செயலே இது.பிரச்சாரம் செய்ய தி.மு.க.ஆட்சியில்தான் சாதனைகள் ஏராளம் செய்யப்பட்டன. அதனை முழுமையாக மக்களிடம் எடுத்துச் செல்லக் கூட கால அவகாசம் இல்லாமல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.எதிர்க்கட்சிகளிடம் எந்த சரக்கும் இல்லை;கலைஞரின் குடும்பத்தை விமர்சிப்பதைத் தவிர."தேர்தல் என்றாலே அது ஒரு திருவிழா போல நடக்கும்;அதனை இழவு வீடாக மாற்றிவிடாதீர்கள்"என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே ஒரு கட்டத்தில் கூறினார்.மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.தி.மு.க.தரப்பில் தரப்பட்ட புகார்கள் சரிவர விசாரிக்கப்படவில்லை.தேர்தல் மேடைகளில் தனிப்பட்ட மனிதர்களைத் தாக்கிப் பேசக்கூடாது என்பது தேர்தல் விதிமுறை.ஆனால்,கலைஞரைத் தனிப்பட்ட முறையில் மிக மோசமாக விமர்சித்து ஜெயலலிதாவும்,விஜயகாந்தும்,இன்னும் அந்த அணிக்காகப் பேசும் பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.இது குறித்த புகார் மீது மிகத் தாமதமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.அதற்குப் பின்னரும் அவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஜெயலலிதா பேசினார்;தன்னுடைய வேட்பாளரையே விஜயகாந்த பொது இடத்தில் அடித்தார். தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.விஜயகாந்த மீது மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து அந்த ஆணையம் நோட்டீச் அளித்துள்ளது.சரி இவ்வளவு நியாயம் பேசிய தேர்தல் ஆணையம் தன்னுடைய வேலையை ஒழுங்காகச் செய்ததா? பூத் சிலிப்புகளை தேர்தல் ஆணையமே கொடுக்கும்,கட்சிகள் கொடுக்கக்கூடாது என்றார்கள்.ஆனால்,தேர்தல் பணியாளர்களால் சரிவர கொடுக்கமுடியவில்லை.பல இடங்களில் கீழே கொட்டப்பட்டிருந்தன.இதற்குப் பின்னர் கட்சிகள் புகார் அளித்தவுடன் கட்சிகளும் கொடுக்கலாம்,ஆனால்,சின்னம் இருக்கக் கூடாது என்றார்கள்.இதன் பின்னர் கட்சிகள் அவசர அவசரமாக பூத் சிலிப்புகளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் ஆணையத்தின் நிபந்தனையை மீறி இரட்டை இலை சின்னம் பொறித்த பூத் சிலிப்புகளை பல தொகுதிகளில் அ.தி.மு.க.வினர் அளித்துவருகின்றனர்,அது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.திடீரெனெ ஒரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஏப்ரல் 8 அன்று வெளியிட்டது.அது என்ன தெரியுமா?கலைஞர் கொண்டுவந்த 108 உயிர் காக்கும் இலவச மருத்துவ ஊர்தியை தேர்தல் நாளன்று வக்குச் சாவடிக்கு முன்பாக நிறுத்திவைக்கக் கூடாதாம்.அந்தப் பக்கம் போகக் கூடாதாம்.இதுதான் அந்த மனிதநேயத்தை வெளிப்படுத்தும்(?)உத்தரவு. 108 என்ற எண்ணைப் பார்த்தாலே மக்களுக்கு உடனே கலைஞரின் நினைவு வந்துவிடுகிறது.இதனைத் தடுக்கத்தான் இந்த நடவடிக்கை.யார் கண்டார்கள் தேர்தல் நாளன்று யாருக்கு அவசர மருத்துவ உதவி வேண்டுமென்றாலும் 108 இக்கு தொலைபேசியே செய்யக்கூடாது என்று இன்னொரு திடீர் அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியமில்லை.பல இடங்களில் தேர்தல் ஆணையத்தின் சோதனைகள் நடக்கும் போது ஜெயா டி.வி.யை.மட்டுமே தேர்தல் அலுவலர்கள் அழைத்துச் செல்கின்றனராம்.தமிழகத்தேர்தல்களுடன் இணைந்து நடக்கும் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் சுவர் விளம்பரங்களும் சுவரொட்டிகளும் தாராளமாகக் காணப்படுகின்றன;ஆனால்,தமிழ்நாட்டில் மட்டும் அந்தப் பிரச்சாரமுறைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.ஏன் இந்த் பாரபட்சம் என்று எந்த ந்டுநிலை யோக்கியசிகாமணிகளும் கேள்வி எழுப்பவில்லை. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, வாக்காளர் பட்டியலில் வழக்கம் போல பெயர்க் குழப்பங்கள்;பாலினம் தவறாக குறிக்கப்பட்டிருந்தது.இப்படி அடிப்படைப் பணிகளில் கோட்டை விட்டு விட்டு ஆர்ப்பாட்ட வேலைகளில் ஈடுபட்டது.பொதுவாக பெரிய அளவுக்கு தகராறுகள்,அடிதடிகள்,வன்முறைகள் இல்லாமல் நடக்கும் தமிழக தேர்தல் களத்தில் இந்த முறை கடந்த ஒரு மாதமாகவே வட நாட்டில் இருந்து துணை ராணுவத்தைக் கொண்டுவந்து இறக்கியுள்ளனர்.மொழி தெரியாத அய்.பி.எஸ்.அதிகாரிகளால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன.தேர்தல் ஆணையம் நியமித்த போலீஸ் டி.ஜி.பி.போலோநாத்,பொறுப்பேற்ற நாளில் தமிழகத்தின் எல்லா வாக்குச் சாவடிகளும் பதற்றம் நிறைந்தவை என்றார்.ஆனால்,அவரே சில நாட்கள் கழித்து எந்த ஒரு வாக்குச் சாவடியும் பதற்றமானவை அல்ல என்றார். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்,யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் அதிகார வர்க்கத்திற்கு சுதந்திரம் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த தேர்தல் கெடுபிடிகளே நல்ல சாட்சியாக அமைந்துவிட்டது.

பத்திரிகைகள்

தேர்தல் ஆணையம் இப்படியென்றால்,பத்திரிகைகளோ இதைவிட இன்னும் ஒரு படி மேலே போய் பகிரங்கமாகவே ஒரு சார்பு நிலை எடுத்தன.ஆனால்,இவை தம்மை நடுநிலை என்று வெட்கமில்லாமல் கூறிக்கொள்பவை.கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க.ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி துளியேனும் பாராட்டாத நல்ல மனம் கொண்டவை.தேர்தல் அறிக்கைகள் ஒரு தேர்தல் சம்பிரதாயமாகத்தான் இதுவரை இருந்துவந்தது. தேர்தல் நேர வாக்குறுதிகளை எந்த அரசியல்வாதியும் நிறைவேர்றியதில்லை என்ற விமர்சனம்தான் இதுவரை எல்லோராலும் பேசப்பட்டது;எழுதப்பட்டது.ஆனால்,கடந்த 2006 தேர்தலில் தி.மு.க.அளித்த தேர்தல் அறிக்கை,வாக்குறுதிகள் அனைத்தையும் (கிட்டத்தட்ட 95 சதவீதம்)நிறைவேற்றிவிட்டது.
அந்த சாதனைகளைச் சொல்லி தி.மு.க.வாக்குக் கேட்கிறது.ஆனால்,அ.தி.மு.க.அணியோ கலைஞரின் குடும்பத்தைக் குறைசொல்லி வாக்குக் கேட்கிறது.தினமணி,தினமலர்,துக்ளக்,ஆனந்த விகடன்.ஜூனியர் விகடன்,கல்கி,குமுதம் ரிப்போர்டர் ஆகிய ஆரிய ஏடுகள் பகிரங்கமாக பார்ப்பன அம்மையாரை அரியணையில் அமர்த்தத் துடிக்கிறார்கள்.மின்சார உற்பத்திக்கு ஜெயலலிதாவின் ஆட்சியில் ஒரு திட்டம் கூட தீட்டப்படவில்லை.அதன் காரணமாகத்தான் தற்போதைய மின்வெட்டு.ஆனால்,தி.மு.க.ஆட்சி அமைந்தபின்பு 4 மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.அது நடைமுறைக்கு வர இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம்.இந்த உண்மை ஓரளவு படித்த அனைவருக்கும் புரியும்.அறிவுஜீவிகள்,பத்திரிகை ஜாம்பவான்களுக்கும் இது புரியாமல் இல்லை.ஆனால்,என்ன எழுதுகிறார்கள்?தி.மு.க.ஆட்சியில் மின்வெட்டு என்று பொத்தாம் பொதுவாக எழுதி புழுதி வாரி இறைக்கிறார்கள்.தி.மு.க.ஆட்சிக்கு எதிராக எழுதவேண்டும் என்பதற்காகவே செய்திகளைத் தேடுகிறார்கள்.கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் தமது ஆசையை வெளியிடுகிறார்கள்.
தம்மிடம் பேனா இருக்கிறது,வெளியிட்டு விற்க பத்திரிகை இருக்கிறது என்பதற்காக எதைவேண்டுமானாலும் எழுதுவது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.தம்மை யார் என்று காட்டிக் கொள்ளாமல் நடுநிலை என்ற முகமூடி அணிந்துகொண்டு எழுதுகிறார்கள்.தலைவர் கலைஞரோடு ஒப்பிடத்தக்க அளவுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லாத ஜெயலலிதாவையும்,விஜயகாந்தையும் தூக்கிப்பிடிக்கிறார்கள்.பிரசாரத்தில் நாகரிகமில்லாமல் தனி மனித தாக்குதல்களைக் கடைபிடிக்கும் ஜெயலலிதாவையோ,குடித்துவிட்டு பண்பாடு இல்லாமல் பேசுவதோடு தனது கட்சிக்காரர்களையே அடிக்கும் விஜயகாந்தையோ பற்றி ஒப்புக்குக் கூட கண்டிக்காதவர்கள் இந்த நடுநிலை வேடதாரிகள் .  இவர்கள்தான் கருத்துக் கணிப்பு என்ற பெயரிலும் பொய்யையும் புரட்டையும் வாரி இறைக்கிறார்கள்.இது ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கிறது.நாம் தான் மறந்துவிடுகிறோம்.இதற்கு முன்பு நடந்த 2009 நாடாளுமன்றத்தேர்தலிலும் இப்படித்தான் ஒரு கருத்துக் கணிப்பு விளம்பரப்படுத்தப்பட்டது.40 தொகுதிகளின் நச் நிலவரம் என்று கலைஞரின் குடும்பத்தையே குறி வைத்துத் தாக்கிவரும்  ஒரு வாரமிருமுறை ஏடு தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு  தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டது.அதில் 26 தொகுதிகள் அ.தி.மு.க அணிக்கும்,14  தொகுதிகள் தி.மு.க அணிக்கும் கிடைக்கும் என்று தனது மதிநுட்பமான(?)புலனாய்வுப் புள்ளிவிவரத்தை வெளியிட்டது.ஆனால்,நடந்தது என்ன? நாடே அறிந்தததுதான்.அப்படியே தலைகீழாக இருந்தது.அதாவது தி.மு.க.அணி 28 இடங்களையும்,அ.தி.மு.க.அணி 12 இடங்களையும் பெற்றது.இது தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகள்,ஊடகங்கள் எப்படி இருக்கின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.இதேபோலத்தான் டெல்லியில் இருந்து ஒளிபரப்பாகும் டி .வி.களும் கருத்துக் கணிப்புகளை  வெளியிட்டன.
இந்த தேர்தலிலும் இப்படித்தான் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள்.இந்தக் கணிப்புகள் சென்ற முறை மட்டுமல்ல பல முறைகள் பொய்யாகி  உள்ளன.
சரியில்லாதவற்றை ஏன் எழுதவேண்டும்,அது பத்திரிக்கை தர்மமா என்று சிந்திப்பதில்லை.மாறாக இதன் மூலமாகவாவது நடுநிலை வாகாளர்களையும்,இன்னும் முடிவெடுக்காமல் உள்ள வாக்காளர்களையும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகத்திருப்பிவிடலாம் என்ற நப்பாசைதான் காரணம்.மேலும் களத்தில் நிற்கும் தி.மு.க.கூட்டணியினரை மன ரீதியாக பலவீனப்படுத்திவிடலாம் என்று கருதுகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக ம.தி.மு.க.வை நடத்திவரும் வைகோ வை அவமானப்படுத்தி அம்மையார் வெளியேற்றினார்.தேர்தல் களமே காணமுடியாத நிலைக்கு வைகோ தள்ளப்பட்டார்.ஆனால்,அது குறித்து இந்தப் பத்திரிகைகள் ஒரு வார்த்தை ஜெயலலிதாவைக் கண்டித்து எழுதியதா?ஜெயலலிதாவின் நம்பிக்கை துரோகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதா?இதைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை.தினமலர் என்ன செய்தது தெரியுமா?ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினத்துக்கு வைகோ வைப் பயன்படுத்திக் கொண்டது.அவரைக் கேலிப் பொருள் ஆக்கியது.”ஜெ யுடன் வைகோ சந்திப்பு! சிக்கல் தீர்ந்தது” என்று வெட்கமில்லாமல் பொய்ச்செய்தியை வெளியிட்டு கடைசியாக சிறிய எழுத்துகளில் ஏப்ரல் 1 என்று எழுதியது.எப்படியாவது அவாளைக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற ஆரிய வெறியைத்தவிர வேறு எது இப்படி செய்தி எழுதுவதற்குக் காரணமாக இருக்க முடியும்?

அரசியல் கட்சிகள்

இடதுசாரிகள் என்ற இரு கட்சிகள் இருக்கின்றன தமிழ்நாட்டில்.அவர்களாவது வைகோவுக்காக ஜெயலலிதாவிடம் பேசியிருக்கலாம்.அவர்களும் அவரைக் கைவிட்டார்கள்.இரண்டுஆண்டுகளாக வைகோவைச் சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தமக்கு வேண்டியது கிடைத்தவுடன் வைகோ பக்கம் தலை வைத்துப்படுக்கவில்லை.விஜயகாந்த் என்று ஒருவர்.சினிமா வியாபாரம் போனியாகாமல் போகவே,அரசியல் வியாபாரத்துக்கு வந்தவர்.நான் தான் முதலமைச்சர் என்றார்;தெய்வத்தோடும்(?)மக்களோடும்தான் கூட்டணி என்றார்.ஆனால்,ஜெ.யின் காலில் போய் விழுந்துவிட்டார்.இந்தத் தேர்தலின் கதாநாயகனே..இல்லை இல்லை காமடியனே இவர்தான்.மது போதையில் பிரசாரம் செய்து வேட்பாளரையே அடித்து,தப்புத் தப்பாக உளறி,இதுவரை தமிழக தேர்தல் களம் காணாத காட்சிகளை அரங்கேற்றினார்.இவரைச் சுற்றியும் சில இளைஞர்கள் சென்றூகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் தமிழ் நாட்டின் வேதனை.இனிமேலும் ஒரு சினிமாக்காரன் இந்த நாட்டு அரசியலுக்குத் தேவையில்லை என்பதற்கு இவரே நல்ல உதாரணமாககிப் போனார்.
 
இன உணர்வாளர்கள்--அறிவுஜீவிகள்

கடந்த தேர்தலில் இலவசங்கள் அளிப்பதாக கலைஞர் வாக்குறுதி அளித்தார். இரண்டு ரூபாய்க்கெல்லாம் அரிசி கொடுக்கமுடியாது என்று அறிவுஜீவிகள் கூறினார்கள்.ஆனால்,ஒரு ரூபாய்க்கே கலைஞர் அரிசியை வழங்கிக் காட்டினார்.இலவச தொலைக்காட்சிப் பெட்டி,எரிவாயு அடுப்புகள் அளித்துவிட்டார்.அவ்வளவுதான் இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுக்கிறார் கலைஞர் என்று சோ உள்ளிட்ட அறிவுஜீவிகள் புலம்பினார்கள்.இந்த முறை கிரைண்டர் அல்லது மிக்சி,மடிக்கணினி வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார்.அக்கிரகாரத்திருமேணிகளும் சில ஆழ்வார்களும் கேலி பேசினார்கள்.ஆனால்,தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைக் காப்பியடித்து அம்மையார் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்கள்.என்ன நடந்தது?கலைஞருக்கு எதிராக எழுதிய சோ வின் பேனா அம்மையாரை எதிர்க்குமா?அந்த அறிக்கை அக்கிரகாரத்தின் அறிக்கையாயிற்றே.”ஜெயலலிதாவைப் பொறுத்தவரை செய்யமுடியாத காரியங்களைச் சொல்லிப் பழக்கமில்லை.(2001 தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா சொன்னவற்றை நிறைவேற்றியிருக்கிறார் என்று சோ வால் பட்டியல் போடமுடியுமா?)ஜெ.அறிவித்திருக்கும் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படக்கூடியவைதான்”என்று வெட்கமில்லாமல் கூறுகிறார் சோ.2ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்தபோது கலைஞரைப் பாராட்டிய இந்திய கம்யூனிஸ்டு கள் 1 ரூபாய்க்கு அரிசி கொடுத்தபோது எதிர்த்தார்கள்(என்ன கம்யூனிசமோ?) இந்தக் கட்சிகள் ஆளும் கேரளாவில் 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்தை கொண்டுவந்துவிட்டன.இதன் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன்,’’மக்கள் நலனை முன் வைத்து அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’’,என்கிறார்.காலகாலமாக கதர்ச் சட்டைக்குள் கரைந்து போய்விட்டு திடீர் இன உணர்வு ஏற்பட்டிருக்கும் தமிழருவி மணியன் கலைஞரைக் கொச்சைப் படுத்துவதே தனது தொழிலாகக் கொண்டவர்.இலவசத் திட்டங்கள் குறித்து அவர் எழுதாத எழுத்து இல்லை.அப்படியே காந்தியின் அடிப்பொடி.அவர் ”ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை சமூக நலன் சார்ந்ததாக இருக்கிறது”என்ற புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்.இவர் மட்டுமல்ல இன்னும் சில இன உணர்வு வியாபாரிகள் இருக்கிறார்கள்.ஒருவர் தினமணியில் பக்கம் பக்கமாக கலைஞரை எதிர்த்து எழுதுபவர்.இன்னொருவர் சில அப்பாவி இளைஞர்களிடம் நன்றாக நடித்துப் பேசுபவர்.காங்கிரஸை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு கலைஞரை வசைபாடி வருகிறார்கள்.பொருத்தமில்லாமல் ஈழத்தமிழர் பிரச்சனையை தமிழகத் தேர்தலோடு போட்டுக் குழப்பி பார்ப்பனீயத்திற்குத் துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
*****
இந்தத் தேர்தலில் காணும் இவ்வளவு காட்சிகளும் என்ன சொல்கின்றன?
ஒற்றுமை இல்லாத தமிழினத்தின் தன் முனைப்பு அரசியல்....
ஒட்டு மொத்த இனத்தின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் ஒற்றை மனிதரையே குறி வைத்து அரசியல் நடத்தும் ஈன நிலை...
இதுவரை இல்லாத மக்கள் நலத்திட்டங்களைத் தந்து,
பஞ்சம்,பசி,பட்டியைப் போக்கியதோடு,தொழில் திட்டங்கள் ,வேலை வாய்ப்புகள்,மகளிர் முன்னேற்றம்,
சிறந்த சுகாதார வசதிகள்,மருத்துவ வசதிகள்,உள் கட்டமைப்புகள்,சமூகநீதிக்கண்ணோட்டத்தோடு கல்விப் பணி இத்தனையும் செய்த ஆளுமையைப் பெற்ற திராவிட இயக்க ஆட்சியை
வீழ்த்த நினைக்கும் ஆரியம்...
அதற்குத் துணை போகும் துரோகம்...
இன்னும் எத்தனைக் காலத்திற்கு இந்த நிலை?
சுய நலன் தவிர்த்து பொது நலன் சார்ந்த அரசியல் எண்ணங்களை எப்போது பெறப்போகிறோம் என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது.

Sunday, February 27, 2011

சபரிமலையில் இருப்பது அய்யப்பனா?அய்யனாரா?



இந்தியாவைப் பொருத்தவரை பன்னாட்டு வியாபாரத்தைவிட படு ஜோராக நடப்பது பக்தி வியாபாரம்தான்.சுர்றுலா செல்வதுபோல அடிக்கடி கோயில்களுக்குக் கிளம்பி விடுவது இந்துப் பக்தப் பெருமக்களின் பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.இந்த மன நிலையைப் புரிந்து கொண்டுதான் இங்கே புதுப்புது சாமிகளும்,கோயில்களும் தோன்றிவருகின்றன. சாமியார்கள் ஒரு பக்கம் கல்லாக்கட்டுகின்றனர்.ஒரு காலகட்ட்த்தில் இப்படித் தோன்றிய ஒரு கோயில்தான் சபரிமலை அய்யப்பன்(?)கோயில்.கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள இந்தக் கோயிலுக்கு அந்த மாநில பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.(அவர்களுக்கு கோயிலின் ரகசியம் தெரியும் என்பதாலோ?) பெரும்பாலும் தமிழ்நாடு,ஆந்திரா ,கர்நாடகா பக்தர்களே இருமுடி கட்டி அய்யனை தரிசிக்கிறார்கள்(கவனிக்கவும் `அய்யன்’- இதுக்குப் பின்னாடி ஒரு கதை ஒளிஞ்சிருக்குங்க...).

ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை மாதம் செல்லவேண்டும் என்று தொடங்கி,இப்போது மகரஜோதி தரிசனம்,பிறகு விசு தரிசனம் என்று தொடர்ந்து கல்லா நிரம்புகிறது.கேரள அரசுக்கு பெரிய வருமானம் இல்லை என்பதால்,இந்த அய்யப்பன் கோயில் வருமானத்தை அங்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனை ஊக்குவிக்கின்றன.கோயிலின் சுற்றுப்புறம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதை பலமுறை பக்தப் பெருமக்கள் உணர்ந்திருந்தாலும் பக்தி என்னவோ இன்னும் குறையவில்லை.மிக மோசமான குப்பைக் கழிவுகளும்,அசுத்தமடைந்த பம்பை ஆறும் மாலையிட்டு சுத்த பத்தமாக கோயிலுக்குச் செல்வோரை அசுத்தப்படுத்திவிடுகிறது.

இந்த சுகாதாரக் கேடுகள் இந்த ஆண்டு ஊடகங்களால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டாலும் அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் அய்யப்ப பக்தர்கள் சொல்லும் குறை.ஆனாலும் கட்டி ஏறிக் கொண்டுள்ள பக்தர்கூட்டத்தால் நெரிசல் ஏற்படுவதும்,விபத்துகள் ஏற்படுவதும் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகிப் போன நிலையில் இந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் விபத்து பல நாள் மோசடியை வெளிக்கொண்டு வந்துவிட்டது.


சபரிமலையில் 2011 ஜனவரி மாதம் 14ஆம் தேதி புல்லுமேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிய அய்யப்ப பக்தர்கள் 110 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கேரளா உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்தவிசாரணையின்போது உயர்நீதிமன்றம் துணிச்சலான சில கேள்விகளை முன் வைத்த்து.இவ்வளவு நாளும் பகுத்தறிவாளர்களால் கேட்கப்பட்ட அந்தக் கேள்வியை உயர்நீதி மன்றம் கேட்டது.(இப்படியெல்லாம் இந்தியாவில் எப்போதாவதுதான் கேட்கப்படும்)
மகரஜோதி என்பது தானாகத் தெரிவதல்ல,அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான்,சபரிமலை தேவசம்போர்டே இந்தக் காரியத்தை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது என்பது பகுத்தறிவாளர்களின் ஆதாரபூர்வ குற்றச்சாட்டு.ஆனால்,இதற்கு இதுவரை நேர்மையாக எந்த பதிலையும் அய்யப்பன் வியாபாரிகள் சொன்னதில்லை.இந்நிலையில் இப்போது நடந்த விபத்து தொடர்பான விசாரணையில்

, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்திரமா? என்பதை திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டது.நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டயத்தில் தள்ளப்பட்டதால்
 
திருவாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் அதன் தலைவர் எம்.ராஜகோபாலன் நாயர் தலைமை யில் ஜனவரி 31 அன்று நடந்தது. இதில் சபரிமலை அய்யப்பன் கோயில் மேல் சாந்தி கண்டரரு ராஜீவரருகன்னிபையூர் நாராயணன் நம்பூதிரி (வாஸ்து) மற்றும் பல உயர் பூசாரி கள், திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப்பன் கோவில் நிருவாகிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர்
நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த அந்த ரகசியத்தை(?)உடைத்தே விட்டார்.
’’பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர்கள்தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவசம் போர்டும் அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி ஏற்றப்படும் விஷயத்தில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.

அந்த நம்பிக்கையில் தேவசம் போர்டு தலையிட விரும்பவில்லை. மனிதர்களால்தான் மகர ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரசாரம் செய்யவும் தேவசம் போர்டு விரும்பவில்லை.

மகர ஜோதி பிரச்சினை பற்றி விவாதிக்க மட்டும் இன்றைய கூட்டம் கூட்டப்பட வில்லை. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களான நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் அய்யப் பனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாகஉள்ளது.

ஆகவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வருடம் முழுவதும் கோவிலைத் திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாமா என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வருடம் முழுவதும் கோவிலை திறந்து வைப் பது சம்பிரதாயத்துக் கும், வழக்கத்துக்கும் மாறானது. ஆகவே ஆண்டு முழுவதும் கோவிலைத் திறக்க வேண்டாம் என்று ஏக மனதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதே போல், பக்தர் களின் நெரிசலைக் குறைப்பதற்காக புனிதமான 18-ஆம் படியை அகலப் படுத்தலாம் என்ற யோசனைக்கும் அனைத்து தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். புனித 18ஆம் படியை அகலப்படுத்துவது, கோவில் கட்டப்பட்ட ஆகம விதிக்கு விரோதமானது. அத்து டன் 18ஆம்படி சன்னி தானத்துடன் புனிதம் வாய்ந்ததும் ஆகும். ஆகவே 18ஆம் படியை அகலப்படுத்துவது சரியல்ல என்றும் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது’’. என்று தெரிவித்அவர், இந்த விவரங்களை பதில் மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகரஜோதி என்பது அய்யப்பனின் அருளால் தானாக எரிவது என்று பரப்பித்தான் இவ்வளவுநாளும் கூட்டத்தைக் கூட்டியிருந்தனர்.அந்த தலபுராணத்தை நம்பித்தான் ஏராளமான பக்தர்களும் இருமுடி கட்டிக் கிளம்பிச்சென்றனர். ஜோதி தரிசனத்தைக் காணச்சென்ற பலர் நேராக பரலோகத்துக்கும் சென்றதுண்டு.சாலைவிபத்துகளாலும்,கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தவர்கள் ஏராளம். எதார்த்தம் இப்படி இருக்கையில் மகரஜோதி மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்று இப்போது தேவசம் போர்டு சொல்கிறது.அப்படியானால் இவ்வளவு காலமும் பக்தர்களை அது ஏமாற்றியிருக்கிறது.இந்தப் பொய்யை நம்பிச் சென்ற பக்தர்களிடம் அது மன்னிப்புக் கேட்கவேண்டாமா?இனிமேலாவது மகரஜோதி ஏற்றப்படமாடாது என்று அறிவிக்குமா?
கடவுளும் கோயில்களும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் முயற்சி என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா? மகரஜோதி கட்டுக்கதை இப்போது வெளிவந்து நீண்ட நாட்களாக பகுத்தறிவாளர்கள் சொல்லிவந்ததுதான் உண்மை என்பதை வேறு வழியில்லாமல் சபரிமலை தேவசம் போர்டும் உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டிய அவசியம் வந்துவிட்டது.
இதேபோல அய்யப்பன் கடவுளுக்கும் அந்தக்கோயிலுக்கும் சொல்லப்படும் வரலாறும் பொய்யானது என்பதை பகுத்தறிவாளர்கள் சொல்லிவருகிறார்கள்.பகுத்தறிவாளர்கள் மட்டுமல்லாமல் இந்து மத வேத புராணங்களில் வல்லவரான ஒருவரும் அய்யப்பனின் வரலாறைப் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.  
மகர ஜோதி தோன்றிய வரலாற்றையும்,அய்யப்பன் யார் என்பதையும் அவர் விளக்கியிருக்கிறார்.அந்த மனிதர் வேத விற்பன்னரான அமரர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.இவர் எழுதிய இந்துமதம் எங்கே போகிறது?’ என்ற நூலில் (நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு) சில பகுதிகளை நமது உண்மை வாசகர்களுக்காகத் தருகிறோம்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்றைய மலையாள தேசத்தில் இருக்கும் மலைக்கிராமம். அங்கே கொள்ளையடிக்க வந்த மிலேச்ச சிப்பாய்கள் சற்றே நிமிர்ந்தனர். சுற்றிலும் 5 குன்றுகள் அழகழகாய் இருந்தன. கஷ்டப்பட்டு மேலே ஏறினார்கள். காந்தமலை என்ற அந்தக் குன்றை அடைந்த அந்த சிப்பாய்களின் கண்கள் கூசின. தங்கச்சிலை தகதகவென மின்னிய தங்கச் சிலையை அடித்தார்கள் கொள்ளை.
தாங்கள் வழிபட்ட சிலை களவாடப்பட்டதைக் கண்ட மலை மக்கள் அங்கிருந்து காந்தலையிலிருந்த சற்றே இறங்கி வந்தனர். 5 குன்றுகளுக்கும் நடுப்பட்ட அந்த ஸ்தலத்தில் இன்னொரு சிலையை உருவாக்கினார்கள். கிராமத்து தெய்வமாக விளங்கியது அய்யனார்.
அய்யனாரை அமர வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். முதலில் பொன் விக்ரகம் இருந்த இடம்தான் பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது. அந்த மக்களின் சிலைதான் இன்று ஜோராக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
இன்று சிலர் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டுமே அந்தச் சிலையைத் திறந்து தங்கள் வசம் வழிபாட்டு லகானை வைத்திருக்கிறார்கள்.
அந்த மலைதேசத்துக்கு, இப்போது ஆந்திரப்பிரதேசமாக இருக்கிறதே... அந்தப் பக்கத்திலிருந்து ஒரு கூட்டம் பிழைப்புக்காக தனியாய் நடந்து வந்தது.
அப்போதுதான் இந்த அய்யனாரையும் மலைமக்களையும் பார்த்தார்கள். அது ராத்திரி நேரம் மலைமக்கள் ஒரு கையில் தீப்பந்தத்தையும் மறுகையில் மாம்ஸத்தையும் வைத்திருந்தார்கள். அய்யனாருக்கு எதிரே தீப்பந்தத்தைக் கொளுத்தி வைத்துவிட்டுவேட்டையாட்டி வந்த உடல்களை அய்யனாருக்குப் படைக்க ஆரம்பித்தார்கள்.
இன்றைய ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்தேறிய நம்பூதிரிகள் தங்கள் பூணூலை முறுக்கிக்கொண்டு இக்காட்சியைப் பார்த்தனர். தீவிர வைதீகர்களான நம்பூதிரிகள்இந்த அய்யனார் வழிபாட்டை கொஞ்சநாள் கவனித்தபடியே இருந்தார்கள்.
திடீரென ஒருநாள்புது ஐதீகத்தைக் கிளப்பினார்கள்.
இது உங்க அய்யனார் இல்லப்பாஎங்க அய்யப்பன். இவன் இங்க வந்த கதை உங்களுக்குத் தெரியாதா?
தெரியுமே! ரெண்டு மூணு தடவ உடைச்சிட்டாங்க. அப்புறம் நாங்களே கஷ்டப்பட்டு இந்தச் சிலையைச் செஞ்சோம். காவலுக்கு வச்சிருக்கோம்.இதுதான் மலைமக்களின் பதில்.
நம்பூதிரிகளாக வந்த பிராமணர்கள் பதில் சொன்னார்கள். தப்புதப்பு.. இவன் எப்படி இங்கே வந்தான்னு பெரிய ஐதீகமே இருக்கு.என்றபடி சிவனுக்கும் திருமாலுக்கும் அய்யப்பன் பிறந்த கதையை ஆரம்பித்தார்கள்.
அய்யப்பன் பிறந்த கதையை நம்பூதிரிகள் மலைவாசிகளிடம் சொல்ல... மலைமக்கள் திகைத்துவிட்டார்கள்.
அப்படியா? எங்கள் அய்யனார் இப்படியா பிறந்தார்?” என்றார்கள்.
ஆமாம்... அய்யப்பனை இதுபோல நீங்கள் வழிபடக் கூடாது. அய்யப்பனை வழிபடும் வேலையை எங்களிடம் விட்டுவிடுங்கள்.
நம்பூதிரிகள் சென்ன புராணக் கதைகளை மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தார்கள் மலைமக்கள்.
மலைப்பகுதியில் இருந்த தங்கள் அய்யனாரை அருகே சென்று பூக்கள் போட... சில படிகளைக் கட்டி வைத்திருந்தார்கள் மலைவாசிகள். இதைப் பார்த்த நம்பூதிரிகள்...
இந்த 18 படிகளில்... நீங்கள் இனிமேல் சாதாரணமாக ஏறமுடியாது. விரதம் இருந்து... சும்மா இல்லை ஒரு மண்டலம் விரதம் இருந்து... மாம்ஸம் விலக்கி... சுத்தமாக இருந்தால்தான் இங்கே ஏறமுடியும். என்ன புரிகிறதா?” என்றார்கள்.
இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாய்... நாளடைவில் அந்த மலைப்பகுதியின் அய்யனார்... நம்பூதிரிகளால் மணிகண்டனாகவும் அய்யப்பனாகவும் மாறினார்.
மலைமக்கள் படிகளின் கீழே நின்றனர். பிராமணர்கள் மேலே சென்றனர். மேலே சென்றவர்களின் கண்களில்... திகு திகுவென ஒரு ஜோதிப் பிரகாசம் ஜொலித்தது.
என்ன அது?” ஆச்சரியமாய்க் கேட்டனர்.
மலைமக்களோ அதைப் பார்த்துச் சிரித்தனர்.
நாங்கள் ஆச்சர்யப்படுகிறோம். பயப்படுகிறோம், பெரிதாக எரிகிறதே என்று. நீங்கள் எவ்வித முகபாவமும் காட்டாமல் இருக்கிறீர்களே!
மறுபடியும் கேட்டார்கள் பிராமண நம்பூதிரிகள்.
அதுவாநீங்கள் எங்களைப் பார்த்தபோது அன்று ராத்திரி நேரம்நாங்கள் தீப்பந்தம் கொளுத்தி வைத்திருந்தோமேகவனித்தீர்களா?”
ஆமாம்…”
இன்று எங்கள் திருவிழா. நாங்கள் தீப்பந்தத்தைக் கொளுத்தி திருவிழா கொண்டாடுகிறோம். அதுதான் அந்த காந்த மலைமேல் ஜொலிக்கிறதுஎன்றார்கள் மலைவாசிகள்.
கொஞ்ச நாள் ஆனது. மலைமக்களின் தீப்பந்தத் திருவிழாவைத் தங்களது திருவிழாவாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தனர். அட, அசடுகளேஅது உங்களின் திருவிழா மட்டுமல்ல.. அய்யப்பனுக்கு சபரி என்னும் காட்டுவாசி பக்தை இருந்தாள். அவளுக்கு மோட்சம் தந்தார் அய்யப்பன். புஷ்ப மரங்கள் பூக்களை இறைக்கதேவர்கள் எல்லாம் வந்திருந்து வாழ்த்தஒரு ஜோதி பெரிய அளவில் தோன்றியது. அதிலே சபரி கலந்து மோட்சம் அடைந்தாள். அந்த மோட்ச ஜோதி அது.
நீங்கள் அதன்பிறகு திருவிழாவை ஆரம்பித்திருக்கிறீர்கள். புரிகிறதா? இந்த மலைப் பகுதிக்குக் கூட சபரிமலை என்று பெயர். இப்படித்தான் பெயர் வந்ததுஎன்று தீப்பந்தத் திருவிழாவுக்குப் புது வெளிச்சத்தைகொடுத்தார்கள்.
தை மாதம் மகர நட்சத்திரத்தில்இன்றும் அந்த காந்த மலை மேலே ஒரு ஜோதி தெரிகிறது. திடுதிப்பென மறைகிறது. இப்போதும் மலைமக்கள் தீப்பந்தத் திருவிழா கொண்டாடுகிறார்களா? இல்லையோ? பிறகெப்படி…?
நம்பூதிரிகளின் ரகசிய ஏற்பாடு. அங்கே தீமூட்டி வருவார்கள். இதுபற்றி பிரபல்யமான கேரளத் தலைவர்கள் பலருமே சொல்லியிருக்கிறார்கள். மகரஜோதி என்பது மலைமக்கள் ஜோதி. அதை இப்போது நம்பூதிரிகள்தான் ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
- இதுதான் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அய்யப்பன் குரித்தும் மகரஜோதி குறித்தும்  கூறியுள்ள அசைக்கமுடியாத செய்தி. இதுவரை இந்த வரலாற்றுச்  செய்திக்கு இந்துத்துவவாதிகள் எவராலும் பதில் சொல்லமுடியவில்லை.
அவர்களால் நேர்மையான பதிலைச் சொல்லமுடியாது.ஏனென்றால் இந்த வரலாறுதான் அய்யப்பன் பற்றிய உணமையான வரலாறு.இன்னொரு கதையை வேண்டுமானால் அவர்களால் கட்டிவிட முடியும்.ஆனால்,அதுவும் மகரஜோதி போல சில ஆண்டுகளில் புஸ்...ஆகிவிடும்.அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தல் ஒழிய கடவுள் ஒழிவதைத் தடுக்க முடியாது என்றார் பெரியார்.அறிவியலும் பகுத்தறிவு எண்ணமும் வளர வளர கடவுளின் பெயரால் செய்யப்படும் மோசடிகள் சுக்குநூறாகிப்போகும்.மகரஜோதி ரகசியத்தை இப்போது ஒப்புக்கொண்ட சபரிமலை வியாபார நிறுவனமான தேவசம் போர்டு அய்யப்பனின் உணமைக்கதையை ஒப்ப்ய்க்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.