Friday, October 14, 2011

தீபாவளி : கொண்டாடத்தான் வேண்டுமா?


தீபாவளிப் பண்டிகை வரப்போகிறது. (ஆம்,பண்டிகைதான்; திருநாள் அல்ல) பெயரிலேயே தமிழ் இல்லை. ஆகவே இது நம்முடைய விழா அல்ல என்பது தெளிவாகிறது.
"நம்ம விழாவா இல்லைன்னா என்ன சார், மக்களுக்குக் கொண்டாட்டம் வேண்டாமா? அதுனால தீபாவளியக் கொண்டாடுறதா வச்சுக்குங்களேன்" என்கிறான் நவீனத்தமிழன்.
கொண்டாட்டம் தேவைதான், ஆனால் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டாமா? கொண்டாட்டத்திற்காக நம்மை இழிவு செய்யும் கதையை மய்யமாகக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடலாமா? இந்தக் கதைகள் ஒரு புறம் இருக்கட்டும். தீபாவளி என்பது நகர மக்களின் கேளிக்கைகளுக்கான விழாவாகத்தான் முக்கியத்துவம் பெற்றது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாக நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தீபாவளி புகுந்தது. புதுத் துணி எடுப்பது, புது விதமான பலகாரங்கள் செய்து உண்பது, பட்டாசுகள் கொளுத்துவது போன்ற அதுவரை தமிழ்நாட்டில் இல்லாத புதுவிதங்கள் வந்ததால் அன்று தீபாவளி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அக்காலக்கட்டத்தில் ஒரு சராசரிக் குடும்பம் துணி எடுப்பதற்காக தீபாவளி வரை காத்திருக்கும். கடைகளிலும் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்புதான் புதிய வண்ணங்களில், வடிவமைப்புகளில் துணி ரகங்கள் விற்பனைக்கு வரும்.
எனவே, தீபாவளி மாதமான அய்ப்பசி மாதத்திற்கு முன்பு வரும் ஆடியில் தள்ளுபடி வியாபாரம் செய்வார்கள்.
குறைந்த விலைக்கு முந்தைய ஆண்டு வாங்கிய துணிகளை விற்றுவிடுவார்கள். ( தை முதல் நாள்தான் பொங்கல் என்பது போல தீபாவளிக்கு குறிப்பிட்ட ஒரே நாள் எல்லாம் இல்லை. அய்ப்பசியில் எந்த நாளாவது வரும். அதாவது இங்கிலீஷ் மாதங்களில் அக்டோபரில் அல்லது நவம்பரில் வரும். அது எந்த நாள் என்பது சிவகாசியில் பஞ்சாங்கம் தயாரிக்கும் பார்ப்பானுக்கு மட்டும்தான் தெரியும்.
இப்படி ஒரு விஷேஷம்(?) இந்தப் பண்டிகைக்கு...) ஆனால், இன்றைய நிலை என்ன? ஆண்டு முழுதும் துணி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆடியில் மட்டுமல்ல எல்லா மாதங்களும் தள்ளுபடி வியாபாரம் நடக்கிறது. ஆண்டுக்கு 365 நாட்களும் தியாகராயர் நகரின் உஸ்மான் சாலையில் மக்கள் திரள்தான். தமிழ்நாட்டின் பெருநகரங்களிலும் இதே நிலைதான். ஆக, தீபாவளிக்குத்தான் துணி எடுப்பது என்பது கிட்டத்தட்ட மாறிவிட்டது.
அடுத்து இப்போது யாரும் வீட்டில் பலகாரங்கள் செய்வது இல்லை. காரணம் முன்பு பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்தனர். இப்போது அப்படி இல்லை; வெளியில் வேலைக்குச் செல்கின்றனர். எனவே வீட்டில் அன்றாட சமையலே வாரத்திற்கு சில நாட்களுக்கு இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இந்நிலையில் தீபாவளிக்கு எங்கே பலகாரங்கள் செய்வது? கடைகளில் வாங்கிவந்து விடுகிறார்கள். எஞ்சி இருப்பது பட்டாசு கொளுத்தி காசைக் கரியாக்குவது மட்டும்தான்.
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பட்டாசு வாங்க வேண்டியுள்ளது. அவர்கள் அதனைக்  கொளுத்தி மகிழ்வதில் பெற்றோருக்கு ஒரு மகிழ்ச்சி. முன்பெல்லாம் பட்டாசு கொளுத்துவது தீபாவளிக்கு மட்டும்தான்; ஆனால், இப்போது இந்திய முதலாளிகளின் கஜானாவை நிரப்பும் பன்னாட்டு நட்சத்திர வீரர்கள் விளையாடும்  கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வென்றாலே பட்டாசுச் சத்தம் காதைப் பிளக்கிறது. ஆக பட்டாசும் தீபாவளிக்கு மட்டும்தான் என்பதற்கும் வேட்டு வைத்தாகிவிட்டது. இப்படி தீபாவளியைப் பிரபலப்படுத்த கொண்டுவரப்பட்ட அத்தனை அம்சங்களும் இப்போது பிரபலமில்லாமல் போய்விட்டன.
அந்தக்கால பக்தி வணிகர்களின் தீபாவளி, இந்தக் காலத்தில் இப்படி மதிப்பிழந்தாலும், இந்தக் கால வணிகர்கள் சும்மா இருப்பார்களா? விடுமுறை நாளிலாவது  வெளியில் வந்து சக சமூகத்தைக் கண்டு வந்த மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும் தொலைக்காட்சி வந்துவிட்டதே.
அது சும்மா இருக்குமா? தீபாவளியை ஒட்டி இரண்டு மூன்று நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி சினிமாக்காரர்களின் அடுப்பங்கரையிலிருந்து படுக்கையறைவரை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறார்கள். விடுமுறை சுகம் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறது.
இந்நிலையில் இன்னொரு பக்கம் நம் சமூகத்தில் சில பத்து ஆண்டுகளாக வளர்ந்துவரும் குடும்ப விழாக்களையும் குறிப்பிட வேண்டும். அவற்றில் குறிப்பாக இரண்டு விழாக்களைச் சொல்லலாம். முதலாவதாக, முன்பு நம்மிடம் இல்லாத பிறந்தநாள் விழாக்கள் இப்போது வந்துவிட்டன. இது ஒரு வகையில் வரவேற்க வேண்டிய அம்சம்.
குழந்தைகளுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதன் மூலம் உறவினர்களை, நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியாக அமைந்திருப்பது சமூக உறவைப் பலப்படுத்தும் நல்ல அம்சம்.
இன்னொரு விழா திருமண நாள் கொண்டாட்டம். இது குடும்பத்திற்குள் கொண்டாடும் விழாவாக அமைந்துள்ளது. இந்த நாளில் வாழ்க்கை இணையர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் வாங்கிக் கொடுத்தல், குடும்பத் துடன் வெளியில் சென்று அந்த நாளை மகிழ்ச்சி யாகச் செலவழித்தல் என வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் புதிய விழாவும் திருமண உறவை, வாழ் விணையரின் புரிதலை மேம்படுத்துகிறது எனலாம்.
இப்படி, தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் சூழலில் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளுமே தங்களது வணிகத்திற்காகவும் மற்றும் இந்த இரண்டு துறைகளிலும் பெரும்பாலும் பார்ப்பன மேல் ஜாதிக்காரர்கள் இருப்பதாலும் இன்னும் அர்த்தமற்ற தீபாவளியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. வியாபாரத்திற்கு அடிப்படையான விளம்பரத்தால் எப்படி கடவுளும் மதமும் வாழவைக்கப்படுகிறதோ அதுபோலவே இந்தப் பண்டிகையும் வாழவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம் மொழியைப் பேசாத, நம் உணவை உண்ணாத, நம் உடையை அணியாத வட இந்திய உயர்ஜாதி வர்க்கம் கொண்டாடும் தீபாவளி எப்படி நம்முடைய விழாவாக இருக்க முடியும்?
தீபாவளியின் கதையும் அது எங்கிருந்து வந்தது என்பது பற்றியும் தந்தை பெரியாரும் தமிழறிஞர்களும் தந்துள்ள ஆய்வுக் கருத்துகள் அடுத்தடுத்த பக்கங்களில் தரப்பட்டுள்ளன. அந்தக் கருத்துகளின்படி தீபாவளி நமக்குத் தொடர்புடையதல்ல; நடப்பிலும் தீபாவளிக்காக உருவாக்கப்பட்ட சிறப்புகளும் இன்று காலாவதியாகிவிட்டன.
உழைத்துக் களைத்த மனிதர்கள் ஓய்வெடுக்கத்தான் வாரத்தின் இறுதி நாள் ஓய்வுக்காக ஒதுக்கப்பட்டது. ஆண்டு முழுதும் பணிசெய்வோர் தமது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கத்தான் சுற்றுலா செல்லும் வழக்கம் உருவானது.
அறிவு வளர்ச்சி பெறாத அந்நாளைய சமூகத்தின் மீது தமது மதக் கருத்துகளைத் திணித்து அதில் கேளிக்கைகளைப் புகுத்தி  உருவாக்கப்பட்டவைதான் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள். ஆனால், இன்றைய சமூகத்தின் ஓய்வும், விடுமுறைகளும், குடும்ப விழாக்களும் புதிய வடிவமெடுத்துவிட்டன. என்று கையில் பணம் கிடைக்கிறதோ அன்று புதுத் துணி எடுத்துக் கொள்கிறார்கள்; இன்னும் பணம் இருந்தால் அந்த நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவழிக்கிறார்கள்.
விழாக் கொண்டாடித்தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கொரு அர்த்தம் இருக்கவேண்டும் பொங்கல் விழாப்போல.
அர்த்தமும் இல்லாமல் நடைமுறையிலும் மாறிவிட்ட தீபாவளியைக் கொண்டாடத்தான் வேண்டுமா?
- மணிமகன்
(படங்கள் : வடஇந்தியாவில் திராவிடன் நரகாசுரனை மிகக் கோரமாக சித்தரிக்கும் உருவ பொம்மைகள்)

No comments:

Post a Comment