Sunday, March 10, 2013

மகளிர் பெருமை மணியம்மையார்


வரலாற்றை ஆழ்ந்து படித்தால் ஆதிச் சமூகம் என்பது தாய் வழிச்சமூகமாகத்தான் இருந்ததுள்ளது என்பதைஅறியமுடியும்.ஆனால்,
காலப் போக்கில் பெண்களை இல்லத்தரசி(?)ஆக்கிவிட்டு குடும்பத்தலைவர்கள் ஆளுமை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள்.பொருள் தேடல் பின்னால் வருவாய் ஈட்டல் என்கிற முக்கியப் பணியை மட்டும் ஆண்கள் எடுத்துக்கொண்டனர்.அதேநேரம் குழந்தைகளை ஈன்றல்,வளர்த்தல்,சமைத்தல்,பெரும்பகுதி நேரம் பராமரித்தல் என பல பணிகள் பெண்களுக்கென ஆனது.பெண்ணுரிமைக் குரல் ஒலிக்கத் தொடங்கிய காலத்தில்கூட பொது வாழ்க்கைக்குப் பெண்கள் வராமலேயே இருந்தனர்.விதி விலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம்;அவையும் அரச மரபுப் பெண்களாக இருந்தனர்.இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் சில பெண்கள் ஈடுபட்டதுண்டு.அவர்களும் முழுமையாக ஈடுபட்டதாகச் சொல்லமுடியாது.


        அக்காலகட்டத்தில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில்,வைக்கம் சத்யாகிரகத்தில் ஈடுபட்டவர்கள் பெரியாரின் மனைவி நாகம்மையாரும்,கண்ணம்மையாரும்தான் தீவிரமாகக் களத்தில் குத்தித்தவர்கள் என்பதற்கு காந்தியாரின் வாக்குமூலமே ஆதாரம்.
இத்தகைய பின்புலத்தில் தமிழக வரலாற்றில்...அல்ல...அல்ல...இந்திய வரலாற்றிலேயே ஒரு பெண் தன்னை முழுமையாக பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்தார் என்றால்,அவர் அன்னை மணியம்மையார்தான் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

          இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் ஒன்றுபட்ட உணர்வின் அடிப்படையில் அமைந்த சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர் என்பது அதிசயமல்ல;ஏனென்றால்,உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த சுதந்திரப் போராட்டங்களிலும் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆனால்,பெரும்பான்மை மக்கள் ஏற்காத சமூகப் புரட்சி இயக்கத்தில் ஒரு பெண் தனது 23 ஆம் வயதில் இணைத்துக் கொண்டார் என்பது உலகில் வேறெங்கும் காணமுடியாத தனிச் சரித்திரம்.
கடவுள் ஒழிக,மதம் ஒழிக,ஜாதி ஒழிக என ஆயிரங்காலத்து மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடும் ஓர் இயக்கத்தில் இணைகிறார்;மூடநம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் பெண்ணினத்திலிருந்து ஒருவர் மட்டும் வருகிறார் என்பதைத் தமிழக வரலாறு அப்போதுதான் பதிவுசெய்கிறது.
            மணியம்மையாரின் பொதுவாழ்க்கை நுழைவு மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது.இளம்வயதிலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர் மணியம்மையார்.தன் தந்தை வழியாக பெரியாரின் கொள்கைகளை அறிந்த அவர், அந்தக் காலப் பெண்கள் எவருக்கும் நாட்டம் இருந்திராத சமுதாயப் பணிக்குத் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்தார் என்பதும் இதற்கு முன் தமிழகம் காணாதது. மணியமையாரின் தந்தையார் கனகசபை சுயமரியாதை இயக்கத்தவர்.எனவே,அவர் அடிக்கடி பெரியாருக்கு கடிதம் எழுதுவது வழக்கம்.பெரியாரின் 54 ஆம் வயதில் தனது உடல்நிலை குறித்து சலிப்புடன் இருந்த காலம்.அப்போது கனகசபை எழுதிய கடிதம் ஒன்றில் தங்கள் உடம்பை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் என்று எழுதியுள்ளார்.அதற்கு பதில் எழுதிய பெரியார்,``எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் மீஎன்கிறார்கள்.ஆனால்,கூட இருந்து உதவி செய்ய யாரும் இல்லை.என்னவோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்”,என்று தனது மனநிலையை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தியிருக்கிறார்.
      பெரியாரின் மனநிலையை அறிந்த கனகசபை,மணியம்மையாரை(அப்போது அவரது பெயர் காந்திமதி)அழைத்துச் சென்று`இந்தப் பெண் தங்கள் கூட இருந்து தொண்டு செய்ய்யட்டும்’என்று கூறினார்.பெரியாரிடம் இப்படி வந்தவர்தான் மணியம்மையார்.
        பெரியாரிடம் தான் கொண்டிருந்த ஈடுபாட்டை அன்னை மணியம்மையாரே சொல்கிறார் கேளுங்கள்.`` எனது இளம் வயதிலிருந்து அதாவது எனக்குப் புத்தி தெரிந்த நாளிலிருந்து அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதே பைத்தியமாகிப் பள்ளிப் படிப்பையும் செம்மையுற முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு என் தந்தை இறந்த சிறிது நாள் களுக்குள்ளாகவே அய்யா அவர்களிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன். அவர் தொண்டுக்கு முழுக்க முழுக்க ஆளாக்கி அவர் நலத்தைக் கண் எனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனத்தில் இறுத்தி அக்குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன். அவரும் என்னை ஒரு நாளும் பெயரிட்டு அழைக்காமல் அவர் உயிர் பிரியும் வரையிலும் அம்மா! அம்மா! என்று ஆயிரம் அம்மாக்களாய்த் தினமும் அழைத்த வண்ணமே இருப்பார். அந்த மழலை மொழியைத்தான் இனி நான் கேட்க முடியாதே தவிர, என் உள்ளம் மட்டும் மானசீகமாக கேட்டுக் கொண்டே இருக்கிறது.
        அவரோடு நான் 30 ஆண்டு 3 மாதம் 13 நாள்கள் அவரை விட்டுப் பிரியாது இருந்தேன். 1943 செப்டம்பர் 11ஆம் நாள் வந்தடைந்த நான் அன்று முதல் இன்று வரை ஒரு நாளும் விட்டுப் பிரியாது மகிழ்ந்த நான் ஓர் ஆண்டாக இயற்கையின் கொடுமைக்கு ஆளாகி நடுநடுவே பிரிய நேர்ந்தது. 1972 செப்டம்பர் 17-ஆம் நாள் ஈரோட்டிலே அவர் பிறந்து வாழ்ந்த ஊரிலே என்றும் இல்லாத அளவுக்கு வெகுசிறப்புடன் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி அவரது திரு உருவச் சிலையையும் திறந்து, கடலென மக்கள் திரண்டு வந்திருந்து மகிழ்ந்திருந்த வேளையிலே அம்மகிழ்ச்சியில் பங்கு கொண்டு நானும், அது முடிந்ததும் அம்மகிழ்ச்சியின் வேகத்தைத் தாங்கும் சக்தி இல்லாததனாலோ என்னவோ அன்று இரவு 11 மணியளவில் இருதய வலி முதன் முதலாக ஏற்பட்டுப் படாதபாடுபட்டு அவதியுற்ற வேளையில், அய்யா அவர்கள் பயந்து துடித்த துடிப்பும் என் துடிப்பைவிட அதிகமாய் இருந்ததாகவும் அன்று வந்திருந்த நமதியக்க அன்புத் தோழர்கள் பட்டபாட்டையும், பின்னர் உடல் நலம் தேறியவுடன் ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்டு ஒருபுறம் வேதனையும் அதே நேரத்தில் பூரிப்பும் அடைந்து அய்யா அவர்களிடம் சென்று, “நீங்கள் பயந்து விட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத் தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விட மாட்டேன்.  எத்தனையோ ஏளனப் பேச்சுகளையும், தூற்றுதலையும் கேட்டுத் தாங்கிய இந்த உள்ளம், உங்களுக்கு இன்று ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல் போய்விட்டது. அவ்வளவுதான் வேறில்லை’’ என்று கூறி அவரை மகிழ்வித்தேன்.
         அய்யா அப்பொழுது சொன்னது இன்னமும் என் மனத்தில் அப்படியே இருக்கின்றன. “இயற்கையை, வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக, என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் - வெறுப்புக்கும் ஆளாகி) செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய் விடுவாயோ என்றுதான் கலங்கினேன்’’ என்று கூறிக் கண்ணீரை உதிர்த்தார். அப்போது நான் அவரை ஊக்கப்படுத்துவதற்காகச் சொன்னேன்: “இதென்ன நீங்கள் இவ்வளவு பலவீனமானவரா, எல்லோருக்கும் மரணத்தைப் பற்றித் தத்துவம் பேசுவீர். இயற்கையின் நியதியைப் பற்றி வண்டிவண்டியாய்ச் சொல்வீர். கடைசியிலே நீங்களே இப்படி இருந்தால் மற்றவர்களுக்கு மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது; எனக்கு ஒன்றும் புரியவில்லையே உங்கள் பேச்சு’’ என்று சற்றுப் பொய்க் கோபத்துடன்  கடினமாகச் சொன்னேன். உடனே தமக்கே உரிய சிரிப்புச் சிரித்து ஏதோ சமாதானம் செய்தார். உண்மையிலே அந்நிகழ்ச்சி எங்கள் இருவரையும் மிகவும் நெகிழ வைத்த ஒன்றாகும். மறக்க முடியாததும்கூட.
       சில சமயங்களிலே எனக்கும் அய்யா அவர்களுக்கும் சிறு சிறு சம்பவங்களுக்கெல்லாம்கூடச் சங்கடம் ஏற்படுவதுண்டு. அதுவும் அவர் நலத்தைப் பற்றிய அக்கறையினால் கடுமையாகக் கூட நடந்து கொள்வேன். அது தவிர அவர் மனது நோகும்படியாகவோ துயரம் தரும்படியாகவோ ஒன்றும் பெரிதாக இருக்காது. ஒன்று, இரண்டு சம்பவங்கள் நேர்ந்ததுண்டு. உடனே ஒரு சிறிது நேரத்தில் அய்யா அவர்களே முதலில் முந்திக் கொண்டு நான் கொண்டிருந்த வருத்தத்தைக் களைய முன் வந்து விடுவார். மற்றபடி பெரும்பாலும் அவர் குறிப்பறிந்து நடந்து கொண்டு அவர் தம் வேலைகளுக்கு எந்தவிதமான இடையூறும் தொந்தரவும் இன்றி கவனித்துத் தான் வந்தேன்.(‘விடுதலை’ 4.1.1974)”
இந்தியா போன்ற ஆணாதிக்க சமுதாயச் சூழலில் பொது வாழ்வுக்கு வரும் பெண்கள் மீதான விமர்சனம் நேர்மையாக இருப்பதில்லை; நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே இதே நிலைதான்.சமுதாய,அரசியல் பணிகளின் மீதோ,சொல்லப்படும் கருத்துகள் மீதோ விமர்சனங்களை வைக்காமல்,தனிப்பட்ட வாழ்வின் மீது வைக்கப்படும் விமர்சனங்களே அதிகமுள்ளன.(ஆண்களின் மீதும் இதே பார்வையில் விமர்சனக்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், ஒப்பீட்டளவில்  குறைவு.)நடுநிலை என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிகைகளும் மக்களின் பொதுப் புத்திக்குத் தீனி போடும் வன்மத்தில் ஈடுபட்டு, தனி மனித தாக்குதல்களைத் தொடுக்கின்றன.இந்தச் சூழ்நிலை சென்ற நூற்றாண்டில் அதிகம் இருந்திருக்கும்.காரணம் அப்போது பெண்கள் பொது வாழ்க்கைக்கு வரத் தயங்கிய காலம்.அந்நிலையில் ஒரு பெண் தன்னைவிட 42 வயது அதிகமுள்ள ஒரு ஆணுடன் இணைந்து சமுதாயப் பணியாற்ற ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்துவந்த காலத்தில் அப்பெண் எத்தகைய இழிவுகளைத் தாங்கியிருக்கவேண்டும். ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கொண்ட கொள்கைக்காக சளைக்காமல் போராடி வந்துள்ளார் என்பதே மணியம்மையாரின் சிறப்பு.
எலிகளுக்குக் கூட பூனையிடமிருந்து விடுதலை கிடைக்கலாம்.ஆனால்,பெண்களுக்கு ஆண்களால் ஒரு போதும் விடுதலை கிடைக்காது என்ற பெரியாரின் கருத்து.தமக்காக ஆண்கள் போராடவரமாட்டார்கள் என்ற கருத்து, பெரியாரின் இடையறாத பிரச்சாரத்தால் தமிழ் மண்ணில் விதைக்கப்பட்டதன் விளைவே அரசியல் சமுதாயக் களங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதற்குக் காரணமாகும்.இத்தகைய சூழலில் பெண்கள் எப்படி இயங்க வேண்டும்-யாரை தமது முன்னோடியாகக் கொள்ளவேண்டும் என்பது முக்கியமாகும்.வெறுமனே தமது கணவருக்கு பதிலாளாக உள்ளாட்சிப் பொறுப்புகளில் வெற்றிபெறும் பெண்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதைப் பார்க்கிறோம்.வெற்றிச் சான்றிதழ் பெற்ற கையோடு வீட்டிலேயே முடங்கிவிடுவதும்,கூட்டங்களில் மட்டும் பெயருக்குப் பங்கேற்றுத் திரும்புவதுமாக இத்தகையவர்கள்  இருக்கிறார்கள்.இந்தநிலை பெண்களின் சமுதாயப் பணிகளை வளர்க்க உதவாது.
தொடர்களுக்காக,ஆன்மீக மற்றும் சமையல் நிகழ்ச்சிகளுக்காக தொலைக்காட்சிகளைப் பார்ப்பவர்களாகவும்,சினிமா செய்திகளைக் காண பத்திரிகைகளைப் புரட்டுபவர்களாகவும் பெண்கள் இருப்பது இன்னும் எத்தனைக் காலத்திற்கு நீடிக்கப்போகிறது?
முகநூல்களிலும்,இணையப் பொழுது போக்குகளிலும் தமது நேரத்தைத் தொலைக்கும் இளம் தலைமுறைப் பெண்களின் நிலை மாறுவது எப்போது?
நம்மைச்சுற்றியுள்ள சமூகத்தின் சிக்கல்களை அறிந்துகொள்ளாமலும்,நம் இனத்தின் எதிர்காலம்,நம்மை உயர்த்திய இயக்கங்களின் வரலாறு,நம்முடைய இன்றைய உயர் நிலைக்குக் காரணமான தலைவர்களின் போராட்டங்கள் போன்றவற்றின் மீது கவனம் கொள்ளாமல் இருப்பதும் சரியா?
சினிமா நடிகைகளின் வாழ்வை அறிந்துள்ளதில் நூறில் ஒரு பங்காவது மணியம்மையார் போன்ற தலைவர்களின் சமுதாயப் பணியை அறிந்ததுண்டா?ஒரே ஒரு மாற்றுடையோடு,ஒரு குண்டுமணி அளவுத் தங்கத்தைக் கூட அணிந்துகொள்ளாமல்,தமது தனி வாழ்க்கைக்கு என எழுதிவைக்கப்பட்ட சொத்தினைக் கூட தம் உறவினர்க்கு அளிக்காமல் பொதுவுக்கு என ஆக்கி,தம் மீதான இழிவுகளையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு துறவிக்கும் மேலாக  வாழ்ந்து மகளிர் இனத்துக்கே பெருமை சேர்த்த மணியம்மையாரின் வாழ்க்கையே பெண்ணினத்தின் விடியலுக்குப் பயன்படும் பாடமாகும்
                                                                                                        unmai march 1-15/2013

Tuesday, November 6, 2012

கழிப்பறையா? கோவிலா?


சென்னை அண்ணா சாலை,பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை,கடற்கரைக் காமராஜர் சாலை,தியாகராயர் நகர் தியாகராயர் சாலை,உஸ்மான் சாலைகள்,சவுந்திரபாண்டியனார் அங்காடிச் சாலை,உயர்நீதிமன்ற பிராட்வே சாலை ....இப்படி சென்னையின் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகளில் நீங்கள் ஒரு கழிப்பறையையாவது பார்த்திருக்கிறீர்களா?ஆனால்,சாலையோரங்களில் நடைபாதையை மறைத்துக்கொண்டிருக்கும் கோவில்களை நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.
நெருக்கடி மிகுந்த சென்னையின் கிட்டத்தட்ட எல்லாத் தெருக்களிலும் ஒரு இந்துக் கோவிலாவது இருக்கும்.அதுவும் போக்குவரத்தை தடை செய்வதாக இருக்கும்,அல்லது நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.சில இடங்களில் இந்தக் கோவிலுக்குப் போட்டியாக மாதா சிலைகள் அமைத்து சிறு வழிபாட்டுத்தலங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.இது தமிழகத் தலைநகர் சென்னையின் நிலை.மாநிலம் முழுதும் உள்ள நிலைகளை வாசகர்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.உங்கள் ஊர்களிலேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
முதலில் இந்தக் கோவில்கள் எல்லாமே சட்டவிரோதமானவை.எந்தவித நில உரிமையும் இல்லாதவை.ஆங்காங்கே சிலரால் சுய நலத்துக்காக அரசின் நிலத்தில்,பொதுச் சொத்தினை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பவை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மதுரையில் பொது இட்த்தில் ஆக்கிரமித்துக் கட்டிய கோவில்களை அகற்ற உத்தரவிட்டது.அப்போது சில கோவில்கள் அகற்றப்பட்டன.அதன்விளைவாக சாலைகள் விரிவாயின.போக்குவரத்து சீரானது.
அதனைத் தொடர்ந்த சில ஆண்டுகளில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பொது இடங்களில் ஆக்கிரமித்து அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றவும் ஆணையிட்டது.மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்பியது.குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.ஆனால்,அது இன்னமும் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.
மதச்சார்பற்ற இந்திய அரசின் சட்டமும் அதனை செயல்படுத்தும் நீதிமன்றங்களும் இந்த விஷயத்தில் நடுநிலையோடு தீர்ப்புக் கூறுகின்றன என்பது ஆறுதலான செய்திதான்.ஆனால்,மதத்தை வைத்தே பிழைத்துவரும் சங்பரிவார்கள்தான் சட்டத்தையும் மதிப்பதில்லை,நீதிமன்றத்துக்கும் மதிப்பளிப்பதில்லை.பொது ஒழுக்கத்தையும் பேணுவதில்லை.
பாபர் மசூதியை இடித்த சங்பரிவார்கள் இந்துக்கோவிலென்றால் கொதித்துப் போகிறார்கள்.
அண்மையில் இப்படித்தான் குய்யோ...முறையோ என்று குமுறினார்கள்.மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ்.இவர் ஒன்றும் நாத்திகரோ அல்லது இந்து மதத்தினைச் சாராதவரோ அல்ல.இவர் இந்துதான் என்பதை அவரது பெயரே சொல்லும்.நெற்றியில் குங்குமம் இட்டபடியே இவர் தெரிவித்த ஒரு கருத்துக்குத்தான் சங்பரிவார்கள் சாடித்தீர்த்தன.அக்டோபர் 6 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பொது சுகாதாரத்தை வலியுறுத்திப் பேசியபோது"நமது நாட்டில் கழிப்பறைகளை விட கோவில்களே அதிகமுள்ளன. கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம். நாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. கழிப்பறைகளுக்கும், சுகாதாரத்துக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்என்று பேசிவிட்டார்.இந்த உரையை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.அதைப் பார்த்தபோது அவர்
திட்டமிட்டுப் பேசவில்லை என்பதை உணரமுடிகிறது.பொதுச் சுகாதாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர் இயல்பாக நாட்டு நடப்பை எடுத்துக் காட்டும் விதமாக கழிப்பறைகளைவிடக் கோவில்கள் அதிகமுள்ளன என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.அவ்வளவுதான் சங்பரிவாரின் அரசியல் முகமாக பா.ஜ.க.வின்செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி,`` மத நம்பிக்கையின் அடிப்படையில் கோயில்களைக் கட்டுவது என்பதும், கழிவறைகளை அமைப்பது என்பதும் வெவ்வேறு விஷயங்கள்.

இந்தியா பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு. கோயில், மசூதி, குருத்வாரா, தேவாலயம் ஆகிய மக்களால் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களை தொடர்புபடுத்தி அமைச்சர் பேசியிருப்பது பெரும் தவறுஎன்று கூறியுள்ளார்.

வழக்கம்போல காங்கிரஸ் வழவழா மறுப்பைக் கூறியுள்ளது.அதன் தொடர்பாளர் மணீஷ் திவாரி,``எங்கள் கட்சி அனைத்து மதங்களின் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. எந்த சூழ்நிலையில், எதை வலியுறுத்துவதற்காக ஜெய்ராம் ரமேஷ் அப்படி பேசினார் என்பது சரியாகத் தெரியவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கின்றோம்,என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்ராம் ரமேஷ் வீட்டுக்கு முன்பாக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து, தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தினார்களாம்.
எதற்காக ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்கவேண்டும்?அவர் சொன்னதை துணிவோடு மறுக்க சங்பரிவார்களால் முடியுமா?அது உண்மையில்லை என்றுதான் அவர்களால் கூறமுடியுமா?நாட்டில் சரி பகுதிக்கு மேல் ஒரு வேளை உணவே உண்ணும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல்,கடவுளையும் மதத்தையும் பற்றி மட்டுமே கவலைகொள்ளும் காவிகளுக்கு மக்களின் பொதுச்சுகாதாரம் பற்றிப் பேசத்தான் அருகதை உண்டா?

இதற்கு முன் நாட்டை ஆண்ட பா.ஜ.கவுக்குத் தெரியாதா இந்தியாவின் பொதுச் சுகாதார நிலை?புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன? 

நாட்டில் 18 விழுக்காட்டினருக்கு தண்ணீருடன் கூடிய அய்ரோப்பிய மாதிரிக் கழிப்பறைகளும்,11.5 விழுக்காட்டினருக்கு சாதாரண குழிக் கழிப்பறைகளும்,6.9 விழுக்காட்டினருக்கு பிறவகைக் கழிப்பறைகளும் மட்டுமே உள்ளன.எஞ்சிய 63.6 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் கிடையாது.இதில் கிராமப்புரங்களில் வாழும் மக்களே அதிக அளவில் கழிப்பறைகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.இது 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்த தகவல்.
அதாவது இந்தக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 70 கோடி மக்கள் திறந்தவெளிகளில்,வயல்வெளிகளில்,சாலை ஓரங்களில் மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள மக்கள் நகராட்சிப் பூங்காக்களில் மலம் கழிக்கின்றனர்.தொற்றுநோய் பரவுவதற்கு இவையே முக்கியக் காரணியாக உள்ளதாக சுகாதாரம் குறித்த ஆய்வு கூறுகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 49.8 விழுக்காட்டினர் திறந்தவெளிகளிலும்,3.2 விழுக்காட்டினர் மட்டுமே பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர்.

இதுபோக பள்ளி செல்லும் 3 கோடி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கிடையாது.இந்நிலையில் பள்ளிகளில் கட்டாயம் கழிப்பறைகளும் குடிநீர்வசதிகளும் செய்துதரப்படவேண்டும் என்றும் அது மாணவர்களின் உரிமை என்று 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.
-
இந்தக் கணக்கோடு நாட்டில் உள்ள கோவில்களின் கணக்கையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.தெருவுக்குத் தெரு கோவில்கள் உண்டு.ஆனால்,எல்லாத்தெருக்களிலும் கழிப்பறைகள் உண்டா?கோவில்கலக் கட்ட ஒரு கூட்டம் எப்போதும் வசூல் நோட்டைத்தூக்கிக் கொண்டு காசு பார்ப்பது உண்டு.ஆனால்,சாலையோரங்களில்,சந்துபொந்துகளில்,வெட்டவெளிப்பொட்டல்களில் மலம்-சிறுநீர் கழிப்பதை நிறுத்தி,பொதுக்கழிப்பிடம் கட்ட வசூல் நோட்டைத்தூக்கியதுண்டா?கோவிலுக்காக சண்டைபோடும் பக்த சிரோன்மணிகள் கழிப்பறைகளுக்காக வாய் திறந்ததுண்டா?அப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் கட்டிக்கொடுத்துள்ள கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிப்பதுதான் உண்டா?சாலைப் போக்குவரத்தை ஆக்கிரமித்துள்ள கோவில்களை இடிக்க அரசு முனையும்போது அதனை எதிர்த்து மறியல் செய்யும் மதவெறி மாக்கள்,எங்கள் தெருவுக்கு கழிப்பறை வேண்டும் என மறியல் நட்த்தியதுதான் உண்டா?
நாட்டின் நிலை இவ்வாறிருக்க அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியது சரிதானே!
அன்றாடம் இரண்டு வேளை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவைப்படும் கழிப்பறை அவசியமா?மனித அறிவை மழுங்கடித்து  பணத்தையும் பறிக்கும் கோவில்கள் அவசியமா?

                                                                            ***

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வினோத யதார்த்தம் இது.இந்தியாவில் 49.8 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் இல்லை.ஆனால்,63.2 விழுக்காட்டினர் தொலைபேசியும்,53.2 விழுக்காட்டினர் செல்பேசியும் வைத்துள்ளனர்.

                                                                            ***

இந்துத்துவ சோதனைக் களமான குஜராத்தில் நவீன ஹிட்லர் நரேந்திரமோடி சாலைகளை அகலப்படுத்த முனைந்தார்.அப்போது சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றவேண்டிவரும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.சத்தமில்லாமல் அதற்கு ஒப்புதல் கொடுத்தார் மோடி.அங்கு இந்துத்துவ வியாபாரத் தலங்களான கோவில்கள் பலநூறு இடிக்கப்பட்டன.அங்குமட்டுமல்ல,இந்தியாவின் வேறு எங்கும் இந்துத்துவாக்கள் இதுபற்றி மூச்சுவிடவில்லை.மோடி இடித்தால் குட்டிச்சுவர்;மற்றவர் இடித்தால் கோவிலோ?

                                                                           *** 
நாத்திகக் கலைஞானி கமல்ஹாசனின் `நம்மவர் என்ற படத்தில் ஒரு காட்சி.கமல் அவர்களே அக்காட்சியில் பேசுவார்.``எனக்கு அவசரமா பக்தி வந்திருச்சு;பக்கத்தில கோவில் எங்க இருக்கு ன்னு யாராவது கேக்குறாங்களா?அவசரமா யூரின் வருது;கக்கூஸ் எங்க இருக்குன்னுதானே கேக்குறாங்க...அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுனது ஒரு வகையில இதுமாதிரிதானே!
                                                    உண்மை அக்டோபர் 16-31,2012

Saturday, July 7, 2012

சிங்கள மயமாக்கலில் சிக்கிய புத்தர்




ஈழச்சிக்கல் தற்போது உலகின் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில் புதிதாக சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். 1980களில் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு அகதிகளாக உலகின் பல நாடுகளுக்கும் தப்பி ஓடியபோது கண்ணையும் காதையும் மூடிக்கொண்டிருந்த இந்துத்துவ அரசியல் வியாபாரிகள் இப்போது, கோவாவில் நடந்த இந்து மாநாட்டில் ஈழச்சிக்கலைப் பற்றிப் படம் காண்பித்திருக்கிறார்கள். "இங்கே 'தமிழன்’ மாமிசம் கிடைக்கும்” என்று சிங்கள இனவெறியர்கள் கொக்கரித்தபோது கோபப்படாதவர்கள் இப்போது கோவாவில் கூடிய மாநாட்டில் 'பிரபாகரன் வாழ்க' என்று கோஷம் போட்டார்களாம். இந்து முன்னணியிலிருந்து பிரிந்து வேறு பெயரில் மதவெறி வணிகம் செய்யும் ஒருவர் இந்த வேலையைச் செய்துள்ளார். இப்போதுதான் வட இந்திய இந்துத்துவாக்களுக்கு ஈழப்போர் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாம். 32 ஆண்டுகாளாகக் கேட்காத காதுகளுக்கு இப்போதுதான் ஈழச் செய்தி எட்டியிருக்கிறது.
இதுவரை ஈழத்தமிழர்களை தமிழர்களாக மட்டுமே தமிழகமும், உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களும் பார்த்து வருகின்றனர். உலகமும் அப்படித்தான் பார்க்கிறது. அதனால்தான் பல்வேறு நாடுகளிலும் தமிழர் புனர் வாழ்வுக்கழகம் என்றும் தமிழ் மொழி அடிப்படையிலான பெயர்களிலும் ஈழத்தமிழ் அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஈழத்தில் சாகின்றவன் தமிழன் என்ற உணர்வின் அடிப்படையிலேயே தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்றபடி, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் என்றால் இந்து மதம் ஏற்ற தமிழர்கள் மட்டுமல்ல, கிறித்துவ, இஸ்லாமியத் தமிழர்களும்தான். ஈழத்தமிழர்களும் தம்மைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி வந்தமையால் அவர்களை இந்துப் பார்ப்பனீயம் எதிரிகளாகவே பார்த்தது; இன்னும் பார்த்துவருகிறது. தமிழகத்தில் இயங்கிவரும் பார்ப்பனப் பத்திரிகைளும் ஈழ விடுதலைக்கு எதிராக எழுதுகின்றன. சிங்கள ரத்னாக்களாக வலம் வருகின்றன. தமிழீழம் என்ற சொல்லே அவாளுக்கு எரிச்சல் மூட்டுவதாக இருக்கின்றது. அதனால்தான் ஆரியமூலத்திலிருந்து வந்த சிங்களவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது பார்ப்பனீயம். சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து சென்ற ஆரிய இனத்தவர் என்பதற்கு வேறு எங்கும் போகவேண்டாம். 1980களில் கொத்துக்கொத்தாகத் தமிழர்களைக் கொன்றுகுவித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனே சொல்வதைக் கேளுங்கள்:
இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை மேற்கு வங்க மாநில பத்திரிகையாளர் ஒருவர் (அமிர்த பசார் பத்திரிகை தொகுதி) பேட்டி கண்டார்.
அவரிடம் ஜெயவர்த்தனே கீழ்க்கண்டவாறு கூறினார்:
“நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியிலிருந்து வந்திருக்கிறீர்கள். எனவே சிங்களவர்களுக்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள மைனாரிட்டிகள் (தமிழர்கள்) திராவிட இனத் தொடர்புடையவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” என்று ஜெயவர்த்தனே கூறினார். (31-8-1983-தி இந்து நாளேட்டில் அதன் செய்தியாளர் எஸ்.பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து...)
சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமிழர் சிங்களர் போராட்டத்தை ஆரிய - திராவிடர் போராட்டமாகவே கூறுகிறார்கள். படித்த சிங்களவர்களின் எண்ணம் கூட எந்த வழியில் செல்கிறது என்பதற்கு இதுவே சரியான எடுத்துக்காட்டு.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இந்துத்துவாக்கள் இப்போது ஈழத்தமிழர்களை இந்துக்களாக முன்னிறுத்தும் வேலையைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
அண்மைக்காலமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் ஈழப் பகுதிகளில் ராஜபக்சேவின் சிங்கள இனவெறி அரசு சிங்களர்களைக் குடியேற்றி வருகிறது. இப்பகுதிகளில் உள்ள இந்துக் கோவில்களை அகற்றிவிட்டு அங்கே புத்த விகாரங்களை அமைக்கிறது. சிங்கள இனவெறி அரசு இந்துக் கோவில்களை மட்டும் அகற்றவில்லை; கிறித்துவ தேவாலயங்களையும், இஸ்லாமிய மசூதிகளையும் கூட அகற்றிவருகிறது. தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள் அவை எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அகற்றப்படுகின்றன. இது எதைக் காட்டுகிறது? தமிழர் பகுதிகளை முற்றிலும் ஆக்கிரமித்து அதில் சிங்களர்களை குடி அமர்த்தும் அப்பட்டமான சிங்கள இனவெறியே தவிர, இந்து மதத்துக்கு மட்டுமே எதிரான செயல் அல்ல; ஈழத்தில் தமிழர்கள் பின்பற்றும் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களை அகற்றுவதன் மூலம் சிங்கள இனவெறி ராஜபக்சேவின் அரசு தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதே தவிர, இந்துக்களுக்கு மட்டுமே எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாகச் சொல்லமுடியுமா?
இந்த ஆக்கிரமிப்புகளை ஒருபோதும் ஏற்க முடியாது. இது அப்பட்டமான இனவெறி அல்லாமல் வேறல்ல. ஒரு மத வழிபாட்டுத்தலத்தை அகற்றி அந்த இடத்தில் இன்னொரு மத வழிபாட்டுத்தலத்தை அமைப்பது கடும் கண்டனத்திற்குரியதுதான். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால், உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
 
இலங்கையில் ராஜபக்சேவுக்கும் சிங்கள இனவெறியர்களுக்கும் மத அடையாளமாக பவுத்த மதம் இருக்கிறது; பவுத்த நெறி அல்ல. மதச் சின்னமாக புத்தர் சிலைகள் இருக்கின்றன. அதனால் அவர்கள் சிங்களக் குடியேற்றப் பகுதிகளில் புத்தர் சிலைகளை நிறுவி, விகாரங்களை அமைக்கிறார்கள். இதனை எடுத்துச் சொல்லும் ஈழத்தமிழர்கள் சிலரும், ஈழத்தமிழர் ஊடகங்களும் ’ஈழத்தில் பவுத்தமயமாக்கல்’ என்று எழுதுகின்றனர். ஆனால்,உண்மை என்ன? ஆரிய மதவெறியர்களான சிங்களர்களுக்குக் கிடைத்த முகமூடிதான் புத்தரே தவிர உண்மையிலேயே அவர்கள் பவுத்தர்கள் அல்ல. அதாவது உண்மையான பவுத்தத்தை ஒழிக்க ஆரியம் ஊடுருவி உருவாக்கிய பவுத்தம். இது இந்துத்துவக் கலவை. ஆரியத்தை ஒழிக்கப் புறப்பட்ட புத்தரை உள்வாங்கி செரிமாணம் செய்து, அவரையே அவதாரமாக்கி பவுத்தத்தை அழிக்க ஆரியம் செய்த சதி. இதுதான் வரலாற்று உண்மை. ஆரிய மூலம் இன்னும் சிங்களத்துடன் ஒட்டிக்கொண்டு இருப்பதால்தான் ராஜபக்சேயும், ரணில் விக்ரமசிங்கேவும் ஆண்டுக்கு ஒரு முறையாவது திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வருகிறார்கள்; இன்னும் சில இந்துக் கடவுள்களை வணங்க தமிழகம், கேரளம் வந்து செல்கின்றனர். இந்தக் கோவில்களில் இருக்கும் அவாளும் தீபாராதனை, சிறப்பு பூஜை உள்ளிட்ட அனைத்தையும் செய்து மகிழ்விக்கின்றனர். இங்கு மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக்கோவில்களிலும் ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதைதான்.
உண்மையான பவுத்தனுக்கு ஜாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு(புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். ஜாதிகளுக்கு எதிரானவர்.
ஒரு பைசாத்தமிழன் என்ற இதழ் நடத்திய அயோத்திதாசர் தமிழகத்தில் பவுத்தம் பரப்பினார். "புத்தம் என்பதுமதமல்ல; அது ஒரு நெறி” என்பார் தந்தை பெரியார். "இந்துவாகப் பிறந்த நான் இந்துவாகச் சாகமாட்டேன்” என்று உறுதியேற்ற அம்பேத்கர் பவுத்தம் தழுவினார். 'புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலை எழுதினார்.
அன்பைப் போதிக்கும் புத்தரின் போதனைகளை சிங்களவர்கள் உள்ளபடியே ஏற்றிருந்தால் தமிழர்களைக் கொன்று குவித்திருப்பார்களா? ஒரு புத்த பிக்குவின் போதனையால் போர்களே வாழ்க்கையாய் இருந்த அசோகன் இனி போர் புரியமாட்டேன் எனச் சபதம் ஏற்று பவுத்தம் தழுவினான். இதனால் புத்தரின் கொள்கையை உலகம் வியந்து வரவேற்றது புத்தருக்குப் பெருமை சேர்த்தது. ஆனால், சிங்கள புத்த பிக்குகளின் போதனையால் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். மனித மாமிசம் கேட்பவன் எப்படி புத்தரைப் பின்பற்றுபவனாக இருக்க முடியும்? இலங்கை மண்ணில் தமிழர்களின் ரத்தத்தால் புத்தர் களங்கப்படுத்தப்பட்டார். சிங்கள புத்த பிக்குகளின் இனவெறிக்கு புத்தரா பொறுப்பாக முடியும்? ஆரிய இனவெறிதான் உலகிலேயே மிகக் கொடூரமானது. மற்ற இனத்தவர் மீது வெறுப்பை உமிழ்வது. வேதங்கள் முழுதும் ஆரிய இன வெறிதானே விரவிக் கிடக்கின்றன.
அன்றைய இட்லர் 'ஆரியனே உலகை ஆளப்பிறந்தவன்’ என்று கொக்கரித்து பல இலட்சம் யூதர்களைக் கொன்றான். இன்றைய இட்லர் ராஜபக்சே 'சிங்களனே சிறீலங்காவை ஆள்வான்' என்று கொக்கரித்து தமிழர்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிடுகிறான். எனவே,ஈழ மண்ணில் நிகழ்த்தப்படும் சிங்கள மயமாக்கலுக்கு புத்தர் பயன்படுத்தப்படுகிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
ஈழத்தில் நிலவும் இச்சூழலில்தான் இந்துத்துவாக்கள் தங்கள் மூக்கை திடீரென இப்போது நுழைக்கின்றனர். தமிழர்கள் உயிர்களை இழக்கும் போதெல்லாம் கண்டுகொள்ளாதவர்கள், தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களான இந்துக் கோவில்கள் அகற்றப்படும் போது அலறுகிறார்கள். மனித உயிர்களைக் காப்பாற்றக் குரல் கொடுக்காதவர்கள் மத நிறுவனங்களைக் காக்க குரல் எழுப்புகின்றனர். இந்துக்கோவில்களை அகற்றுவதைக் கண்டிக்க நம்மைப் போன்ற மதமற்ற மனிதநேயர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமையில் ஒரு விழுக்காடாவது இந்துத்துவ வெறியர்களுக்கு இருக்கமுடியுமா? இந்தியாவில் இஸ்லாமியர்களின் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு சிங்களர்களின் இந்துக்கோவில் இடிப்பைக் கண்டிக்கும் தார்மீக உரிமைதான் உண்டா?
இந்த சூட்சுமத்தை ஈழத்தமிழர்களும் புதிய தமிழ் தேசியங்களும் புரிந்துகொள்ளவேண்டும். 'ஈழச்சிக்கலை தமிழர்களின் சிக்கல் என்ற அளவில் சுருக்கப்பட்டுவிட்டது; அதனை மனிதநேய அடிப்படையில் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லாததால்தான், அது போதுமான கவனம் பெறமுடியாமல் போய்விட்டது' என்பது பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்து என்பதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இந்நிலையில் இப்போதுதான் ராஜபக்சே மீதான போர்க்குற்றம் அய்.நா. அவைக்குச் சென்றுள்ளது. 21 ஆம் நூற்றாண்டு ஆரிய இட்லராக ராஜபக்சே பார்க்கப்படுகிறார். உலகின் பல நாடுகளும் இப்போதுதான் ஈழச்சிக்கலை மனிதப் படுகொலையாகப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்நிலையில் அதனை மத ரீதியாக மாற்றி முன்னெடுக்க முயல்வது எந்தவகையிலும் சரியாக இருக்க முடியாது. பட்டது போதும் சிங்களனால், இனி அவர்களுடன் இணைந்து வாழமுடியாது என்ற நிலையில் தமிழீழமே தீர்வு என்ற முடிவுக்கு ஈழத்தமிழர்களும், அவர்களை ஆதரிக்கும் தமிழகத் தமிழர்களும் வந்துவிட்டனர். ஆனால், இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவரான சுஷ்மா சுவராஜின் இந்துத்துவ பா.ஜ.க., ஒன்றுபட்ட இலங்கையே நீடிக்கவேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. தமிழீழம் என்ற வார்த்தையே இந்துத்துவாக்களின் வாயிலிருந்து வராது. அரசியலுக்காக பா.ஜ.க. அவ்வப்போது பட்டும் படாமலுமே ஈழச்சிக்கலில் பங்கெடுத்துள்ளது. ஏனென்றால் சிங்களவர்கள் எனப்படுவோர் இந்தியாவின் வட பகுதியில் இருந்து ஈழ மண்ணில் குடியேறிய ஆரிய வம்சாவழியினர் என்பது அவர்களுக்குத் தெரியும். ஸ்ரீலங்கா என்ற வார்த்தையே சமஸ்கிருத மூலச்சொல்லில் இருந்து பிறந்ததுதான். இந்நிலையில் புதிய பார்ப்பன அடிவருடிகள் மேலும் குட்டையைக் குழப்பி ஈழச்சிக்கலில் மதத்தை நுழைத்து மேலும் சிக்கலை ஏற்படுத்தாமல் இருப்பதே நல்லது.
இன்னொரு செய்தியையும் நாம் ஈழத்தமிழர்களுக்குச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்நாளும் குரல் கொடுத்துவரும் திராவிட இயக்கத்துடன் இணைந்து தமிழகத்தில் வாழும் தாழ்த்தப்பட்டோரும் ஈழ விடுதலைக்கு என்றென்றும் ஆதரவானவர்கள். இங்கே இந்து மத ஜாதி இழிவைச் சுமந்து கொண்டு வாழும் அவர்கள், இப்போது பல பகுதிகளில் தம்மை இந்து மதத்திலிருந்து விடுவித்துக் கொண்டு பவுத்தத்தில் இணைந்து வருகிறார்கள்.
இச்சூழலில் சிங்களத்தில் நடக்கும் இனவெறி ஆக்கிரமிப்பை, தவறாக பவுத்தமயமாக்கல் என்ற பெயரால் அழைப்பது புத்தரையே ஆக்கிரமிப்பாளராகச் சித்தரிப்பதாகும். தமிழக சமூக அரசியல் வரலாறு கடந்த நூறாண்டுகளாக ஜாதி இழிவுக்கு எதிரான போராட்டங்கள் நிரம்பியது. அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஜாதி இழிவுக்கு எதிராக மாற்று வழியாக புத்தரே இங்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். பண்டிதர் அயோத்திதாசர் தொடங்கி தந்தை பெரியார் வரை பவுத்தநெறியைப் பரப்பி வந்திருக்கிறார்கள். எனவே, பவுத்தமயமாக்கல் என்ற சொல்லாடல் தவிர்க்கப்படவேண்டும். சிங்கள மயமாக்கல் என்பதே சரியானது. சிங்கள இனவெறியில் புத்தரை சிக்க வைக்க வேண்டாம்.

Friday, October 14, 2011

தீபாவளி : கொண்டாடத்தான் வேண்டுமா?


தீபாவளிப் பண்டிகை வரப்போகிறது. (ஆம்,பண்டிகைதான்; திருநாள் அல்ல) பெயரிலேயே தமிழ் இல்லை. ஆகவே இது நம்முடைய விழா அல்ல என்பது தெளிவாகிறது.
"நம்ம விழாவா இல்லைன்னா என்ன சார், மக்களுக்குக் கொண்டாட்டம் வேண்டாமா? அதுனால தீபாவளியக் கொண்டாடுறதா வச்சுக்குங்களேன்" என்கிறான் நவீனத்தமிழன்.
கொண்டாட்டம் தேவைதான், ஆனால் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டாமா? கொண்டாட்டத்திற்காக நம்மை இழிவு செய்யும் கதையை மய்யமாகக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடலாமா? இந்தக் கதைகள் ஒரு புறம் இருக்கட்டும். தீபாவளி என்பது நகர மக்களின் கேளிக்கைகளுக்கான விழாவாகத்தான் முக்கியத்துவம் பெற்றது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாக நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தீபாவளி புகுந்தது. புதுத் துணி எடுப்பது, புது விதமான பலகாரங்கள் செய்து உண்பது, பட்டாசுகள் கொளுத்துவது போன்ற அதுவரை தமிழ்நாட்டில் இல்லாத புதுவிதங்கள் வந்ததால் அன்று தீபாவளி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அக்காலக்கட்டத்தில் ஒரு சராசரிக் குடும்பம் துணி எடுப்பதற்காக தீபாவளி வரை காத்திருக்கும். கடைகளிலும் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்புதான் புதிய வண்ணங்களில், வடிவமைப்புகளில் துணி ரகங்கள் விற்பனைக்கு வரும்.
எனவே, தீபாவளி மாதமான அய்ப்பசி மாதத்திற்கு முன்பு வரும் ஆடியில் தள்ளுபடி வியாபாரம் செய்வார்கள்.
குறைந்த விலைக்கு முந்தைய ஆண்டு வாங்கிய துணிகளை விற்றுவிடுவார்கள். ( தை முதல் நாள்தான் பொங்கல் என்பது போல தீபாவளிக்கு குறிப்பிட்ட ஒரே நாள் எல்லாம் இல்லை. அய்ப்பசியில் எந்த நாளாவது வரும். அதாவது இங்கிலீஷ் மாதங்களில் அக்டோபரில் அல்லது நவம்பரில் வரும். அது எந்த நாள் என்பது சிவகாசியில் பஞ்சாங்கம் தயாரிக்கும் பார்ப்பானுக்கு மட்டும்தான் தெரியும்.
இப்படி ஒரு விஷேஷம்(?) இந்தப் பண்டிகைக்கு...) ஆனால், இன்றைய நிலை என்ன? ஆண்டு முழுதும் துணி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆடியில் மட்டுமல்ல எல்லா மாதங்களும் தள்ளுபடி வியாபாரம் நடக்கிறது. ஆண்டுக்கு 365 நாட்களும் தியாகராயர் நகரின் உஸ்மான் சாலையில் மக்கள் திரள்தான். தமிழ்நாட்டின் பெருநகரங்களிலும் இதே நிலைதான். ஆக, தீபாவளிக்குத்தான் துணி எடுப்பது என்பது கிட்டத்தட்ட மாறிவிட்டது.
அடுத்து இப்போது யாரும் வீட்டில் பலகாரங்கள் செய்வது இல்லை. காரணம் முன்பு பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்தனர். இப்போது அப்படி இல்லை; வெளியில் வேலைக்குச் செல்கின்றனர். எனவே வீட்டில் அன்றாட சமையலே வாரத்திற்கு சில நாட்களுக்கு இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இந்நிலையில் தீபாவளிக்கு எங்கே பலகாரங்கள் செய்வது? கடைகளில் வாங்கிவந்து விடுகிறார்கள். எஞ்சி இருப்பது பட்டாசு கொளுத்தி காசைக் கரியாக்குவது மட்டும்தான்.
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பட்டாசு வாங்க வேண்டியுள்ளது. அவர்கள் அதனைக்  கொளுத்தி மகிழ்வதில் பெற்றோருக்கு ஒரு மகிழ்ச்சி. முன்பெல்லாம் பட்டாசு கொளுத்துவது தீபாவளிக்கு மட்டும்தான்; ஆனால், இப்போது இந்திய முதலாளிகளின் கஜானாவை நிரப்பும் பன்னாட்டு நட்சத்திர வீரர்கள் விளையாடும்  கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வென்றாலே பட்டாசுச் சத்தம் காதைப் பிளக்கிறது. ஆக பட்டாசும் தீபாவளிக்கு மட்டும்தான் என்பதற்கும் வேட்டு வைத்தாகிவிட்டது. இப்படி தீபாவளியைப் பிரபலப்படுத்த கொண்டுவரப்பட்ட அத்தனை அம்சங்களும் இப்போது பிரபலமில்லாமல் போய்விட்டன.
அந்தக்கால பக்தி வணிகர்களின் தீபாவளி, இந்தக் காலத்தில் இப்படி மதிப்பிழந்தாலும், இந்தக் கால வணிகர்கள் சும்மா இருப்பார்களா? விடுமுறை நாளிலாவது  வெளியில் வந்து சக சமூகத்தைக் கண்டு வந்த மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும் தொலைக்காட்சி வந்துவிட்டதே.
அது சும்மா இருக்குமா? தீபாவளியை ஒட்டி இரண்டு மூன்று நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி சினிமாக்காரர்களின் அடுப்பங்கரையிலிருந்து படுக்கையறைவரை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறார்கள். விடுமுறை சுகம் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறது.
இந்நிலையில் இன்னொரு பக்கம் நம் சமூகத்தில் சில பத்து ஆண்டுகளாக வளர்ந்துவரும் குடும்ப விழாக்களையும் குறிப்பிட வேண்டும். அவற்றில் குறிப்பாக இரண்டு விழாக்களைச் சொல்லலாம். முதலாவதாக, முன்பு நம்மிடம் இல்லாத பிறந்தநாள் விழாக்கள் இப்போது வந்துவிட்டன. இது ஒரு வகையில் வரவேற்க வேண்டிய அம்சம்.
குழந்தைகளுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதன் மூலம் உறவினர்களை, நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியாக அமைந்திருப்பது சமூக உறவைப் பலப்படுத்தும் நல்ல அம்சம்.
இன்னொரு விழா திருமண நாள் கொண்டாட்டம். இது குடும்பத்திற்குள் கொண்டாடும் விழாவாக அமைந்துள்ளது. இந்த நாளில் வாழ்க்கை இணையர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் வாங்கிக் கொடுத்தல், குடும்பத் துடன் வெளியில் சென்று அந்த நாளை மகிழ்ச்சி யாகச் செலவழித்தல் என வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் புதிய விழாவும் திருமண உறவை, வாழ் விணையரின் புரிதலை மேம்படுத்துகிறது எனலாம்.
இப்படி, தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் சூழலில் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளுமே தங்களது வணிகத்திற்காகவும் மற்றும் இந்த இரண்டு துறைகளிலும் பெரும்பாலும் பார்ப்பன மேல் ஜாதிக்காரர்கள் இருப்பதாலும் இன்னும் அர்த்தமற்ற தீபாவளியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. வியாபாரத்திற்கு அடிப்படையான விளம்பரத்தால் எப்படி கடவுளும் மதமும் வாழவைக்கப்படுகிறதோ அதுபோலவே இந்தப் பண்டிகையும் வாழவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம் மொழியைப் பேசாத, நம் உணவை உண்ணாத, நம் உடையை அணியாத வட இந்திய உயர்ஜாதி வர்க்கம் கொண்டாடும் தீபாவளி எப்படி நம்முடைய விழாவாக இருக்க முடியும்?
தீபாவளியின் கதையும் அது எங்கிருந்து வந்தது என்பது பற்றியும் தந்தை பெரியாரும் தமிழறிஞர்களும் தந்துள்ள ஆய்வுக் கருத்துகள் அடுத்தடுத்த பக்கங்களில் தரப்பட்டுள்ளன. அந்தக் கருத்துகளின்படி தீபாவளி நமக்குத் தொடர்புடையதல்ல; நடப்பிலும் தீபாவளிக்காக உருவாக்கப்பட்ட சிறப்புகளும் இன்று காலாவதியாகிவிட்டன.
உழைத்துக் களைத்த மனிதர்கள் ஓய்வெடுக்கத்தான் வாரத்தின் இறுதி நாள் ஓய்வுக்காக ஒதுக்கப்பட்டது. ஆண்டு முழுதும் பணிசெய்வோர் தமது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கத்தான் சுற்றுலா செல்லும் வழக்கம் உருவானது.
அறிவு வளர்ச்சி பெறாத அந்நாளைய சமூகத்தின் மீது தமது மதக் கருத்துகளைத் திணித்து அதில் கேளிக்கைகளைப் புகுத்தி  உருவாக்கப்பட்டவைதான் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள். ஆனால், இன்றைய சமூகத்தின் ஓய்வும், விடுமுறைகளும், குடும்ப விழாக்களும் புதிய வடிவமெடுத்துவிட்டன. என்று கையில் பணம் கிடைக்கிறதோ அன்று புதுத் துணி எடுத்துக் கொள்கிறார்கள்; இன்னும் பணம் இருந்தால் அந்த நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவழிக்கிறார்கள்.
விழாக் கொண்டாடித்தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கொரு அர்த்தம் இருக்கவேண்டும் பொங்கல் விழாப்போல.
அர்த்தமும் இல்லாமல் நடைமுறையிலும் மாறிவிட்ட தீபாவளியைக் கொண்டாடத்தான் வேண்டுமா?
- மணிமகன்
(படங்கள் : வடஇந்தியாவில் திராவிடன் நரகாசுரனை மிகக் கோரமாக சித்தரிக்கும் உருவ பொம்மைகள்)

Sunday, September 11, 2011

ஊசலாடும் மதம்



கடவுள், மத நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்வி எழுப்பிவிட்டால் அதற்கு நேர்மையாக, நேரடியாக மதவாதிகள் பதில் சொல்வதில்லை. சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவார்கள். மக்கள் ஒழுக்கத்துடன் வாழத்தான் மதங்கள் உருவானது என்று சொல்வார்கள். மதக்கடவுள்களின் கதைகளில் உள்ள ஒழுக்கச் சிதைவுகளையோ,  மதவாதிகளின் ஒழுக்கக் கேட்டைப் பற்றியோ எடுத்துக்காட்டுகளுடன் கேள்வி கேட்டுவிட்டால் சப்பைக்கட்டுக் கட்டுவார்கள்.

தம் இளம்பருவத்திலிருந்தே மத நம்பிக்கை திணிக்கப்பட்ட நிலையில், சுயஅறிவை முன்னிறுத்தி கேள்வி கேட்டுப் பழக்கப்படாத மத நம்பிக்கையாளர்களால் பகுத்தறிவுக் கேள்விகளை எதிர்கொள்ள இயலாது. மதம் என்பது பெரும்பான்மை மக்களைச் சிந்திக்கவிடாமல் மயக்கி வைத்திருக்கும் ஒரு கருத்தியல் என்பதை ஏற்க மறுப்பார்கள். தம்மைக் காட்டிலும் தமது மதத்திற்கும் கடவுளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மூர்க்கமான மனநிலை கொண்டவர்களும் உண்டு.
கடவுள் நம்பிக்கை மீதான எதிர்க் கேள்விகள் கேட்கப்படும் போது நான் நம்பும் ஒன்றை நீ இல்லை என்பதா? என்ற எண்ணம் மேலோங்குவதால்தான் அவர்களுக்குக் கோபம் வருகிறது. இங்கே கடவுள், மதம் மீதான பற்று என்பது நான் என்கிற மனிதனின் தன் முனைப்பு(தன் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் காணும் நிலை)க்குள் வந்துவிடுகிறது. அதனால்தான், கடவுள் நம்பிக்கை மீதான கேள்வி என்பது தன்மீதான கேள்வியாகி கோபத்தைத் தூண்டுகிறது.
இந்த அளவுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இடைவிடாது பரப்பப்பட்ட மதத்தின், கடவுளின் இன்றைய நிலை அய்ரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் எப்படி இருக்கின்றது? மிக வழுவாகக் கட்டி எழுப்பப்பட்ட கிறித்துவ மதம் இருக்கும் இந்த நாடுகளில் இப்போது மதத்தின் மீதான பிடிப்பு குறைந்து கொண்டே போவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா பற்றி, இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம் பற்றிய செய்திகளையெல்லாம் உலகச் செய்திகளாகத் தரும் முன்னணி இதழ்கள் இந்த ஆய்வு பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை, இணையதள செய்தி ஊடகங்கள்கூட வெளியிடவில்லை. அவர்களுக்கு வணிகம் செய்ய மதமும் கடவுளும் வேண்டுமே? தமிழில் ஒரே ஒரு ஆறுதல், தினகரன் நாளிதழ் தலையங்கம் தீட்டியது. தி இந்து இங்கிலீஷ் நாளிதழ் போப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகம் மற்றும் வடமேற்குப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் சமூகவியல் ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வு இன்னும் சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு, ஃபின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து  ஆகிய ஒன்பது நாடுகளில் மதங்கள் அடியோடு அழிந்து போகும் என்கிறது.
இதற்கு என்ன காரணம் என்பதையும் அந்த ஆய்வு மாணவர்கள் கூறுகின்றனர். மதத்தைச் சார்ந்திருப்பதால் நமக்கு நன்மை உண்டாகிறது என்ற எண்ணம் மக்களிடம் குறைந்து வருகிறது. மதத்தைச் சார்ந்திருந்து, அதன் போதனைகளைப் பின்பற்றாமலேயே நல்ல வாழ்க்கை வாழலாம் என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செக் குடியரசில்  நடந்த கணக்கெடுப்பில் அறுபது சதவீதம் பேர் தாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். மதத்தின் பெயரால் நடக்கும் நல்ல காரியங்களைக் காட்டிலும் அநீதிகள் அதிகம் நடக்கின்றன என்பது இவர்களின் எண்ணம் என்று அந்த மாணவர்கள் கூறுகின்றனர்.
மதத் தலைவர்களின் முரண்பாடுகளும் இதற்கு ஓரளவு  காரணமாக இருக்கலாம். மதத் தலைவர்கள், மத அமைப்புகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது; நான் சொல்வது போல நட, கடவுளுக்கு இதுதான் பிடிக்கும் என்று கட்டளையிடுவது இன்றைய புதிய தலைமுறைக்குப் பிடிக்கவில்லை என்பதும் இந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. நான் நல்லது செய்தால் எனக்கு நல்லது நடக்கும்; நான் ஏன் ஒரு மதத்தைப் பிடித்துக் கொண்டு அலைய வேண்டும் என்பதும் இந்த இளைய தலைமுறையின் எண்ணம் என்கிற கருத்தும் வெளிவந்திருக்கிறது.
இந்த ஆய்வு முடிவுகளை ஒத்துக் கொள்வதுபோல உள்ளது போப் பெனடிக்டின் பேச்சு. கடந்த மாதம்  கத்தோலிக்க கிறித்துவ மதத் தலைவர் போப் பெனடிக்ட் 16, ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றிருந்தார். ஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னமான, எல் எஸ்கோரியல் துறவிகளின் மடத்தில் சில நூறு இளம் கன்னித் துறவிகளிடம் பேசும் போது, மேற்கு நாடுகளில் மதச்சார்பின்மை பலமான பிடிமானத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது, கடவுளைப் பற்றி நமது நவீன சமூகத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நினைவு மறதி ஏற்பட்டிருக்கிறது என்று  போப் பெனடிக்ட் 16 தமது கவலையை வெளியிட்டுள்ளார். மேற்சொன்ன அந்த 9 நாடுகளைப் போலவே ஸ்பெயினிலும் கடந்த பத்து ஆண்டுகளில் கிறித்துவ மத நிறுவனங்களான தேவாலயங்களின் செல்வாக்குக் குறைந்துவருவதே போப்பின் இந்தப் பேச்சுக்குக் காரணம் என்று அந்நாட்டுச் சமூக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடவுள் நம்பிக்கை மனிதனின் தன்னம்பிக்கைக்கு எதிராக உள்ளது. மத நம்பிக்கை அடுத்த  மனிதனைத் தன்னிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. மத ஆதிக்கங்களும், மத வெறியும் தலைதூக்கும்போதுதான்  மனிதம் உணரப்படுகிறது. மதம் என்பது அபின் போன்றது என்று காரல் மார்க்ஸ் சொன்னதும், மதம் மக்களுக்கு விஷம் என்று பெரியார் சொன்னதும் மனிதநேயத்தின் அடிப்படையில்தான்.
அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தல் ஒழிய கடவுள் ஒழிவதைத் தடுக்க முடியாது என்றார் பெரியார். இன்றைய அறிவியல் அற்புதமான இணையம் உலகைச் சுருக்கி நம் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.
உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் மனித இனம் தம்மை முதலில் மனிதராக உணரும் எண்ணம் தொடங்கிவிட்டது. மனிதன் மகிழ்ச்சியாக வாழ வேண்டியவன் என்கிற உணர்வு வந்துவிட்டால் தேவையற்ற கட்டுக்களான கடவுளும், மதமும் மாளவேண்டியதுதான். அதன் தொடக்கப் புள்ளிதான்  இந்த ஆய்வு முடிவுகள்.
நன்றி:உண்மை செப் 1-15,2011

Sunday, July 31, 2011

குதிப்பதுதான் குண்டலினியா?



திருவண்ணாமலை ராஜசேகரன் என்ற ஒரு இளைஞன்.சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான்.அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு,நான் தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூடிக்கோண்டான்;ஆசிரமம் அமைத்தான்.சாமியார் தொழில்தான் எப்போதும் நல்லாக் கல்லாக் கட்டும் தொழில் ஆயிற்றே.கல்லாப் பெட்டி நிரம்பியது.பக்தி வியாபாரம் படு ஜோர்.காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார்.பேச்சில் வல்லவாரகப் பேசப்பட்டார்.அப்படிப் பேச இவரே பணம் கொடுத்து பலரையும் கிளப்பிவிட்டார்.புத்தகங்கள் போட்டார்.பல எழுத்து வியாபாரிகள் பணம் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்ததையெல்லாம் இவரது பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார்.கதவைத் திறகாற்று வரும் என்று முன்னணி ஏட்டில் தொடரும் வந்தது.

உடல் உழைப்பில்லாதவர்கள்,மனம் சோர்ந்தவர்கள்,குடும்பத்தோடு,குழந்தைகளோடு வீட்டில் அளவலாதவர்கள்,தனிமையில் இருப்பவர்கள்,கணவனை அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவர்கள்,முதியவர்கள் என வாழ்க்கையை ரசிக்கத்தெரியாத ரகத்தினர்,சமூகச் சிந்தனை இல்லாதவர்கள் இந்த மாதிரிச் சாமியார்களைச் சரணடைவதுதான் சில ஆண்டுகளாக ஒரு பேஷன்.அந்த பேஷன் இந்தச் சாமியாருக்கும் கை கொடுக்க கூட்டம் கூடியது.பணமும் சேர்ந்தது.கீதா உபதேசத்திலிருந்து பிரம்மச் சரியம் வரை வாய் கிழியப் பேசுவது நித்யானந்தாவின் சிறப்பு.கூடவே தியானம்,யோகம் போன்ற எளிதான உடற்பயிற்சிகளும் சொல்லித்தரப்பட்டன.ஊர் ஊருக்கு அமைப்புகள் உருவாயின.உபதேசங்களுக்குப் பயணமும் சென்றார்.சகல வசதிகளுடன் வாழ்க்கை முறை அமைந்தது.மனிதனின் உடல் தேவையும் ஏற்பட்டது சாமியாருக்கு.

ஒரு மார்க்கெட் இழந்த நடிகை ஆசிரமத்தில் அடைக்கலமானார்.அவரே சாமியாருக்குப் பணிவிடைகள் செய்தார்.இது நித்யானந்தாவே  சொல்லிய வாக்குமூலம்.ஆசிரமத்துக்குள் சிக்கல் உருவாக சாமியாரின் அந்தரங்கம் சி.டி.பதிவாகி இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பானது.நக்கீரன் பத்திரிக்கையில் நித்யானந்தாவின் உண்மை முகத்தை அவரது சீடர் லெனின் கருப்பன் என்ற தர்மானந்தா வெளிக்கொணர்ந்தார்.
ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை தேவைதான்.அதனை உலகம் ஏற்றுக்கொள்ளும்.ஆனால்,பிரமச்சரியம் பற்றிப் பேசியவர் அப்படி இருக்கலாமா என இந்து மதத்தினரே கேள்வி எழுப்பினர்.நித்யான்ந்தா மீது பாலியல் குற்றச் சாட்டுகள் எழ இவரது பிட்தி ஆசிரமம் கர்நாடகாவில் இருப்பதால் வழக்குப்பதிவானது.சில நாள் வட மாநிலங்களில் ஓடி ஒழிந்து பின் கைது செய்யப்பட்டு சாமியார் கம்பி எண்ணினார்.அவருடன் இருந்த நடிகை ரஞ்சிதாவோ தலைமறைவானார். வழக்கில் ஜாமீன் பெற்று ஆசிரம் திரும்பியவருக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தைரியம் இங்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்தது.

கடந்த ஜீலை 13 அன்று எல்லா பத்திரிகையளர்களையும் அழைத்து தனது தரப்பு கருத்துகளைச் சொல்லிய நித்யான்ந்தா அந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை;அது முழுக்க போலியானது;என்னிடம் பணம் பெற பேரம் பேசப்பட்டது;இதையெல்லாம் காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளேன் என்று கூறினார்.இவ்வளவு பேசியவர் நமது உண்மை நிருபரின் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கவில்லை.இன்னும் சிலர் கேட்ட தனது சொத்து விவரம் குறித்த கேள்விக்கும் விடை சொல்லவில்லை.ஆதராத்தை தருகிறேன் என்று கூறியவர் அதனைத் தராமலேயே பேட்டியை முடித்தார்.(பேட்டி முழு விவரம் பெரியார் வலைக்காட்சியில் காணலாம்: http://viduthalai.in/new/videos.html)

நித்யனந்தா ரஞ்சிதாவுடன் உள்ள வீடியோவை உலகமே பார்த்துவிட்டது.youtube இணையத்தளத்தில் ஒரு பகுதியை மட்டுமே பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.டெல்லியில் உள்ள ஆய்வு மையம் அந்த வீடியோவில் இருப்பது நித்யானதாவும் ரஞ்சிதாவும்தான் என்று சான்றிதழும் அளித்துவிட்டது. ஆனால்,அப்பட்டமாகப் பொய் கூறும் இவர், இழந்த மதிப்பை மரியாதையைத் திரும்ப மீட்க குண்டலினி யோகம் செய்யப்போவதாக அந்தப் பேட்டியின் போது கூறினார்.  அதன்படியே ஜூலை 15 அன்று அந்த நாடகத்தை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றினர்.

பக்தர்களைக் கூட்டிவைத்துக் கொண்டு குண்டலினி யாகம் என்று கூறி மந்திரங்கள் ஜெபித்து கையை உயர்த்தி சைகை காட்டினார்.ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்ட சிலர் கால்களை மடக்கி உட்கார்ந்தவாறே குதித்தனர்.தவளை போலத் தவ்வினார்கள்.இதுதான் குண்டலினி சக்தி என்பதுபோல நித்தியானந்தாவும் சிரித்தபடியே உஷ்..உஷ்..என்றார்.ஆனால்,சர்வ சக்தி உள்ளதாகவும்,த்மக்கு எல்லா யோகாசனங்களும் தெரியும் என்று புற்று நோயையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற வித்தைகள் தெரியும் என்று பேட்டியி பீற்றிக்கொண்ட நித்தியானந்தா குண்டலினியைச் செய்துகாட்டவில்லை.குறைந்தபட்சம் அந்த பக்தர்கள் குதித்ததுபோலக் கூடக் குதிக்கவில்லை.சிறிது நேரம் குதித்த அந்தபக்தர்கள் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டனர்.

இந்த நிகழ்ச்சியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க அமெரிக்காவில் இருந்தும் டெல்லியில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் ஆய்வு நிறுவன்ங்கள் வர இருக்கின்றன.அவர்களின் முன்னிலையிலும்,பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் செய்துகாட்டப்போவதாகச் சொன்னார்.எந்த நிறுவனத்தினரும் வந்த்தாகத் தெரியவில்லை.அந்த தகவலை நித்தியான்ந்தா தரப்பும் அறிவிக்கவில்லை.ஆனால்,அந்த நிகழ்ச்சிக்கு சில பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர்.இவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த கிரண் என்ற பத்திரிகையாளரும் ஒருவர். இவர் அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார்.
கடந்த 15ம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செய்தி சேகரிக்க சென்றேன். அப்போது, நித்தியானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.
உடனே அவரிடம், எனக்கு பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா, கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். எனது உடல் அமைப்புதான் இளைஞனை போன்றது. உணர்வுகள் 6 வயது சிறுவனை போன்றது. எனவே, எனது சக்தி அபிரிமிதமானது என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார். இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்தியானந்தா போலி சாமியார் என்பதை தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனி மேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

யோகாசங்களில் பல வகை உண்டு.அதில் குண்டலினி யோகாசனமும் ஒன்று என்று ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாகச் செய்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால் நித்யானந்தா சொல்வதுபோல புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலை சில அடிகள் உயர்த்தி அந்தரத்தில் பறப்பதுதான் குண்டலினி.இது சாத்தியமா என்பதே அந்தக் கேள்வி ?யோகாசன வகுப்பு நடத்துபவர்களும் இதுவரை இப்படிச் செய்து காட்டியதில்லை.அதுவே முழு வேலையாக இருப்பவர்களுக்கே இன்னும் சாத்தியப்பாடாதபோது இந்த மோசடிப்பேர்வழிக்கு எப்படி சாத்தியப்படும் என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
காவி அணிந்து கொண்டு ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்து வெட்டவெளிச்சமான ஒரு ஆபாசக்கூத்தை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி ஒருவரால் வெளிப்படையாக வந்து போலியாக மறுக்கமுடிகிறது என்றால் மக்கள் எவ்வளவு மடையர்களாக இருக்கிறார்கள் என்றல்லாவா நினைத்துக் கொண்டிருக்கவேண்டும்? இதுவே காவி அணியாத வேறு ஒரு துறையச் சேர்ந்தவராக இருந்தால் இப்படிப் பேசியிருக்க முடியுமா?வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேட்டி கொடுக்கமுடியுமா?இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்தக் காலிகள் ஏமாற்றுவார்கள்?