Friday, October 29, 2010

அம்பேத்கரின் உறுதிமொழிகள்

1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து 
மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தோழர்கள் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் தலைமையில் பவுத்த மார்க்கம் தழுவினார்கள்.அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள்:-

1.பிரம்மனையோ விஷ்ணுவையோ சிவனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

2.இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

3.இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

4.கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

5.பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப் பிரச்சாரம் செய்வது விஷமத்தனமானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

6.சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒரு போதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

7.பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

8.பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

9.அனைவரும் சமம் என்ற கொள்கையே நான் நம்புகிறேன்.

10.சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

11.பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

12.தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

13.எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்
அவைகளைக் காக்க முயலுவேன்.

14.நான் பொய் சொல்லமாட்டேன்.

15.நான் திருட மாட்டேன்.

16.காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.

17.போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

18.ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

19.பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர் களின் விடுதலைக்குக் கேடாக இருப்பது மான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக்கொள்ளுகிறேன்

20.புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

21.இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

22.புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

பெரியாருக்கு எடைக்கு எடை வழங்கிய பொருட்கள்


தந்தை பெரியார் அவர்களுக்குத் தமிழர்கள் போட்டி போட்டுக் கொண்டு அன்பளிப்புகளைக் குவித்தனர். எடைக்கு எடை எத்தனை எத்தனை வகையான பொருள்களை எல்லாம் வாரி வழங்கினர்! இறைவனுக்குத் தான் துலாபாரம் என்ற நிலையைத் துடைத்தெறிந்து இறைவன் ஏதடா? என்ற பகுத்தறிவு வினா எழுப்பிய ஈரோட்டு இறைவனுக்குத்தான் தமிழ் நாட்டு மக்கள் இத்தனை இத்தனை வகையான அன்பளிப்புகள்.
எடைக்கு எடை வெள்ளி ரூபாய் (தஞ்சை, 6.11.1957), எடைக்கு எடை நவதானியம் (லால்குடி, 24.9.1963), கார் டயர் - ட்யூப்புகள் (கள்ளப்பெரம்பூர், 2.11.1963), எடைக்கு எடை மிளகாய் (பெருவளப்பூர், 10.6.1964), எடைக்கு எடை எண்ணெய் (இடைப்பாடி, 11.9.1964), எடைக்கு எடை மஞ்சள் (ஈரோடு, 3.10.1964), துவரம்பருப்புத் துலாபாரம் (திருச்செங்கோடு, 17.10.1964), எடைக்கு எடை காய்கறி (திருவள்ளூர், 21.10.1964), எடைக்கு மேல் ஒன்றரை மடங்கு படுக்கை விரிப்புகள் (பெட் ஷீட்டுகள்) (கரூர், 25.10.1964), எடைக்கு எடை திராட்சைப் பழம் (பெங்களூர், 15.11.1964), எடைக்கு எடை இங்கிலீஷ் காய்கறிகள் (பெங்களூர், 6.11.1964), எடைக்கு எடை அரிசி (திருவாரூர், 1.12.1964), பால் துலாபாரம் (திருச்சி, 10.12.1964), எடைக்கு எடை இரண்டு காசுகள் (வ.ஆ., திருப்பத்தூர், 13.12.1964), எடைக்கு எடை சர்க்கரை (திருக்கழுக்குன்றம், 14.12.1964), பெட்ரோல் துலாபாரம் (குளித்தலை, 10.1.1965), எடைக்கு எடை காப்பிக் கொட்டை (சிதம்பரம், 16.1.1965), எடைக்கு எடை பிஸ்கட்டுகள் (பண்ருட்டி, 18.1.1965), எடைக்கு எடை மணிலா எண்ணெய் (அரகண்டநல்லூர், 19.1.1965), எடைக்கு எடை கைத்தறி நூல் (குடியாத்தம், 21.1.1965), எடைக்கு எடை நெல் (செங்கம், 22.1.1965), எடைக்கு எடை நெல் (அனந்தபுரம், 23.1.1965), எடைக்கு எடை இரு மடங்கு வாழைக்காய் (வள்ளியூர், 1.5.1965), எடைக்கு எடை பருப்பு மற்றும் உப்பு (தூத்துக்குடி, 2.5.1965), எடைக்கு எடை சர்க்கரை (அலங்காநல்லூர், 16.2.1970), எடைக்கு எடை நெல், வெங்காயம், உப்பு (பெண்ணாடம், 21.9.1970), நெல் துலாபாரம் (இலந்தங்குடி, 8.7.1972).எடைக்கு எடை கண்ணாடி டம்ளர்(காரைக்குடி என்.ஆர்.சாமி வழங்கியது)
இவை அன்னியில் டயர் வண்டி (லால்குடி), கறவைப் பசு (தஞ்சை).
புளி, பச்சைப் பட்டாணி, மிளகாய், துவரை, கொத்துக்கடலை, உளுந்து, தேங்காய், ஆட்டுக்கிடா, தட்டைப்பயிறு, காளைக்கன்று, ரூ.3500 மதிப்புள்ள தென்னந்தோப்பு பட்டயம், பசுமாடு, எள், பச்சைப்பயறு, கோதுமை, அரிசி, கழகக் கொடிபோட்ட முக்கால் பவுன் மோதிரம், தேங்காய், உப்பு, நெல், கிழங்கு, எலுமிச்சம்பழம், வெங்காயம், ராகி, கம்பு, மலர்கள், முத்துச்சோளம், எருமை மாடு, செங்கல் ஆயிரம், விறகு 5 எடை என்று கொடுக்கப்பட்டது உண்டு.
ஒரு கடவுள் மறுப்பாளருக்கு மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்து, தம் அன்பு வெள்ளத்தால் மூழ்கடித்தது - தந்தை பெரியார் என்ற மாசற்ற மாபெரும் புரட்சியாளருக்கு மட்டும்தான்.
சில இடங்களில் கோயிலில் பயன்படுத்தும் அதே சப்பரத்தில் - தேர்களில் கூட தந்தை பெரியாரை அமர வைத்து வீதி வீதியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றதுண்டு.
தெய்வச் சிலையை தெப்பத்தில் வைத்து அழைத்துச் சென்றதுபோல, தெய்வத்தை சில்லு சில்லாக உடைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கும் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டதுண்டு.

                                      - விடுதலையில்(26-10-2010) `மின்சாரம்’எழுதிய கட்டுரையில் இருந்து...

Thursday, October 14, 2010

ஆணும் பெண்ணும் அறிவிலும் சமம்


லக வரலாற்றில் பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசிய ஆண் ஒருவர் உண்டென்றால் அவர் தந்தை பெரியார் தான்.சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலம் முதலே பெண்ணுரிமை பற்றி பேசத்தொடங்கிவிட்டார். உலகில் பெண்கள், ஆண்களைப்போல சரிபங்கு உடையவர்கள்; ஆண்களுக்குச் சரிசமமானவர்கள்; அறிவு, ஆற்றல், சக்தி அனைத்திலும் ஆண்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல, என்கிறார் பெரியார். இந்தக் கருத்தை அவர் சொன்னது 1930 களில். இப்போது அறிவியல் ஆய்வின் மூலம் இக்கருத்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கார்டிலியா பைன்
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநல நிபுணர் கார்டிலியா பைன் (cordelia fine), டெலுஷன்ஸ் ஆப் ஜென்டர் (delusions of gender) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இதில்,ஆண் பெண் இருவருக்கும் மூளை மற்றும் அதன் நரம்புகள் வளர்ச்சியில் சிறு சிறு வேறுபாடுகளைத் தவிர பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. தோற்றத்தில் மட்டுமே மாற்றங்கள் காணப்படுகின்றன என்று கூறியுள்ளார். இக்கருத்தினை, சிகாகோ மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் லைஸ் எலியட்டும் ஆமோதித்துள்ளார். மேலும் இவர், பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி என்பது மரபு வழியாக வருவது அல்ல; மாறாக, கற்பதன் மூலமே வளர்ச்சி பெறுகின்றனர். சிறுவன், சிறுமி, ஆண், பெண் இவர்களுக்கிடையேயான அறிவுத் திறனில் வேறுபாடு இருக்கலாம். அவர்களுக்கு உள்ள தனித்திறன், சிறப்பியல்பு, ஆளுமைத்திறன் ஆகியவை அவர்களின் வாழ்க்கைச் சூழல் கொடுக்கும் அனுபவம் மூலமே பெறப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் அறிவு வளர்ச்சி மேம்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். பிறப்பினால் ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல் உறுப்புகளைத் தவிர வேறு எந்த வேறுபாடும் இல்லை.உலக நடப்புகளில் எல்லாவற்றிலும் பெண்கள் ஈடுபட்டுவிட்டால், அவர்களும் ஆண்களைப்போலவே எல்லாத்துறைகளிலும் வெற்றிக் கொடிநாட்டுவார்கள். இதை பெரியார் அன்று சொன்னார்; அறிவியல் இன்று சொல்கிறது.

வந்தாச்சு செயற்கைக் கருப்பை
முட்டையிலிருந்து கருவை உருவாக்கும் இயற்கையான கருப்பை பழுதடைந்து விட்டால், அதற்கு மாற்றாகச் செயற்கைக் கருப்பை ஒன்றை அறிவியல் உலகம் கண்டுபிடித்துவிட்டது.
அமெரிக்க நாட்டின் பிரவுன் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் செயற்கைக் கருப்பையை (Ovary) உண்டாக்கியுள்ளனர். மருத்துவமனை நோயாளிகள் அன்பளிப்புச் செய்த உயிர் அணுக்களில் (செல்களில்) இருந்து இதைச் செய்திருக்கிறார்கள். முட்டைகளை வளர்த்து, உண்மையான கருப்பையைப் போன்றே, அவை முழுமை பெறுவதற்கு இந்தச் செயற்கைக் கருப்பை உதவக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை டெலகிராஃப் இதழ் வெளியிட்டிருக்கிறது.
சான்ட்ரா கார்சன்
பிரவுன் பல்கலைக் கழகத்தின் பிள்ளைப் பேறு இயல் பேராசிரியர் சான்ட்ரா கார்சன், சில பெண்கள் கருவுறுவதற்கு ஏன் இயலுவதில்லை என்பதை அறியவும் இந்தச் செயற்கைக் கருப்பை பயன்படும் என்று கூறுகிறார்..
கொடையாளிகளின் உயிர் அணுக்களை தேன் கூட்டுத் துளைகளின் வடிவில் வளர்க்கிறார்கள். பின்பு மனித முட்டையின் உயிர் அணுக்களை (செல்களை) அவற்றில் இடுகிறார்கள்.
சில நாள்களில் உயிர் அணுக்கள், வளராத முட்டைகளை மூடிக்கொள்கின்றன. பின்பு அம்முட்டைகள் முழுமையாக வளர்கின்றன. இக்கட்டத்தில் அவற்றைக் கருப்பையில் செலுத்தி கருவுறச் செய்யலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு கருவகம் முக்கியமாக மூன்று உயிரணு (செல்) வகைகளால் ஆனது. மூன்று வகை செல்களைக் கொண்டு முப்பரிமாண (3டி) திசு அமைப்பை இப்பொழுதுதான் உண்டாக்கியுள்ளனர். இது மிக மிகப் புதுமையானது. முப்பரிமாண (3டி) பொறியியல் கொள்கைகளை பயன்படுத்தி முதன்முறையாக வெற்றி பெறப்பட்டிருக்கிறது, என சான்ட்ரா கார்சன் குறிப்பிட்டுள்ளார்.
முட்டைகளை நம்பகத் தன்மையுடன் முழுமை அடையச் செய்து, செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதில், இந்தக் கண்டு பிடிப்பு பெரிய நடைமுறைப் பயனளிக்க வல்லது. கடினமான ஒரு பாத்திரத்தில் முட்டைகளை வளர்த்தெடுத்தால், அவற்றின் வடிவம் சிதையக்கூடும். ஆனால், செயற்கைக் கருவகத்தில் அவற்றை வளர்க்கும் பொழுது அவை முழுமையாக வளர்வதற்கு வாய்ப்பு அதிகம், என கிளாஸ்கோ, ஜி.சி.ஆர்.எம் கருவுறச் செய்யும் மய்யத்தின் இயக்குநர் ரிச் சர்டு ஃபிளமிங் கூறுகிறார்.
அதிகப் பிரசங்கி
திகப் பிரசங்கிகள் என்ற சொல்லை நாம் சிறுவயதில் இருந்தே கேட்டிருக்கிறோம். வயதை மீறிய வார்த்தைகளைப் பேசுவதுஎதையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பேசுவது,தகவல்களைசெய்திகளைத் தெரிந்துகொள்ளாமல் பேசுவது என இந்த அரைகுறைப் பேச்சைத்தான் அதிகப்பிரசங்கித் தனம் என்று சொல்வார்கள்.
இப்படித்தான் அதிகப் பிரசங்கியாகப் பேசியுள்ளார் புதிய அரசியல்வாதி கார்த்தி சிதம்பரம்.கல்யாண வயதுவரை வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டுபொழுதைப் போக்க அரசியலில் ஈடுபட்டுள்ள இவர்தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்து பேசுவதில்லைஎல்லை தாண்டிப் பேசினால் ஒன்று நதிநீர்ப் பிரச்சினையாக இருக்கும் அல்லது இலங்கைப் பிரச்சினையாக இருக்கும் என்று உளறியுள்ளார். காஷ்மீர் பிரச்சினைபொருளாதார தாராளமயமாக்கல்உலக வங்கி பற்றியெல்லாம் பேசுவதில்லை என்று கார்த்தி குறைபட்டுள்ளார்.
மக்களின் வாழ்வுரிமைமாநிலத்தின் நிருவாக உரிமைகள்தமிழ் மொழி உரிமைசமூக நீதி,கல்வி உரிமை என இவைகள் தான் ஒரு மாநிலக் கட்சிக்கான முதன்மைத்திட்டங்களாக இருக்கமுடியும்.இவற்றை சரியாகவே திராவிட இயக்கம் செய்துள்ளது. இன்னும் சொல்லப்-போனால் இந்தக் கொள்கைக.ளில் பலவற்றை வட இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஆளும் காங்கிரசும்பா.ஜ.க வும் பின்பற்றியுள்ளன.
சமூக நீதி என்பது இந்தியாவிற்கே தேவைப்படும் கொள்கை. அதை அளித்தது தமிழகத்தின் திராவிட இயக்கம்தான். இப்படி இந்தியாவிற்கான கொள்கையை மட்டுமல்லஅண்டை நாடுகளுடனான உறவுகள்தேசிய நதிநீர்ப் பிரச்சினைஉலகப் பிரச்சனைகள் பற்றியெல்லாம் அண்ணா தொடங்கி கனிமொழி வரை பல திராவிட இயக்கத் தலைவர்கள் பல முறை இந்திய நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்கள். படிக்கும் பழக்கம் இருந்தால் கார்த்திஅண்ணாவின் நாடாளுமன்ற உரைத் தொகுப்பை படித்துப் பார்க்கட்டும்.
அதுமட்டுமல்ல மாநில சுயாட்சி என்ற கருத்தாக்கத்தை அளித்ததே தி.மு.க தான். கார்த்தி கூறும் காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மாநில சுயாட்சியில் பதில் இருக்கிறது. அண்மையில் அணுக் கொள்கை மீதான சட்ட வரைவின் மீது கனிமொழி ஆற்றிய உரைகாஷ்மீர் சிக்கல் குறித்து கலைஞரின் கருத்துஅனைத்துக் கட்சிக் குழுவில் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் பங்கேற்பு என இந்திய அரசியல் சிக்கல்களில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்றும் இருந்தே வந்துள்ளது. பத்திரிக்கையில் செய்தி வருவதற்காக கார்த்தி இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் பேசக்கூடாது.
அயோத்தியில் பாபர் மசூதியை இந்துத்துவாக்கள் இடித்தபோது வட இந்தியா பற்றி எரிந்ததுஆனால்தமிழகம் அமைதியாக இருந்ததே அதற்கு திராவிட இயக்கம் தானே காரணம்! கார்கில் போரின்போது அதிக நிதி அளித்தவன் தமிழன் அல்லவா!
தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளம்தான் முக்கியமாம்இந்தியா செழித்தால் தான் தமிழகம் செழிக்குமாம்சொல்கிறார் கார்த்தி. முதலில் தமிழனை இந்தியனாக என்றாவது தேசியம் மதித்ததுண்டாமதித்திருந்தால் ஈழப்பிரச்சினையில் சிங்களவனுக்கு துணைபோயிருப்பார்களா?
காவேரிப் பிரச்சினைஎப்போதே தீர்ந்திருக்குமே! தமிழகம் போன்ற பல மாநிலங்களின் ஒன்றிணைவு தான் இந்தியா. தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களும் செழித்தால்தான் இந்தியா செழிக்கும்.இந்தியா என்று ஒன்று தனியாக இல்லைஒரு முறை மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ்மாநிலத்திற்குத்தான் ஆள்வதற்கு மக்கள் இருக்கிறார்கள்;மத்திய அரசு ஆள்வதற்கு மக்கள் இல்லை என்றார்.
இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லா மக்களையும் இந்தியர்களாக மத்திய அரசு கருதியிருந்தால் மாநிலக் கட்சிகள் தோன்றியிருக்குமாசரி நாங்கள் பேசுவதெல்லாம் இருக்கட்டும். வெளியுறவுக்கொள்கைஉலகவங்கிபொருளாதார தாராளமயமாக்கல்காஷ்மீர் சிக்கல் போன்றவற்றை கடந்த 60 ஆண்டுகளாகக் கையாளுவது காங்கிரஸ்தானேஏன் இன்னும் இவை எல்லாம் சிக்கல்களாகவே நீடிக்கின்றனதீர்வு வந்தபாடில்லையே ஏன்பதில் சொல்வாரா கார்த்தி...

Sunday, October 10, 2010

நமக்கும் பொறுப்பு இருக்கிறது நண்பர்களே...


இன்று, 2010 ஆம் ஆண்டு, 10 மாதம், 10 ஆம் நாள், இரவு 10 மணி 10 நிமிடத்தில் இருந்து, 10 நிமிடம் 10 மணித்துளி அளவுக்கு எனது இல்லத்தில் மின் பயன்பாட்டை நிறுத்திவைத்தேன்.உலக வெப்ப மயம் குறித்த விழிப்புணர்வுக்காக மின்சாரப் பயன்பாட்டை நிறுத்திவையுங்கள் என்ற வேண்டுகோள் செய்தியை, காலை நாளிதழில் படித்த  எனது மகள் தமிழீழம் எனக்கு நினைவுபடுத்தி மின்சாரத்தை நிறுத்தச் செய்தார்.சென்ற ஆண்டு 2009 செப் 9 இல் இதேபோல மின்சாரத்தை நிறுத்தினோமே நினைவில்லையா என்று கேட்டார்.ஆஹா...பரவாயில்லையே நம்மள மாதிரியே நம்ம பொண்ணும் வரும்போலயே என்று மகிழ்ந்தவாறு இந்தப் பதிவை இடுகிறேன்.
அறிவியல் வளர்ச்சியைப் பெருமளவு பயன்படுத்திக் கொண்ட தலைமுறை நாம்தான்.நமக்கு முன்னாட்களில் பிறந்து மறைந்தவர்கள் பலருக்கு கணினியும்,செல்பேசியும் தெரியாது.நினைத்தவுடனே இப்படி செய்தியை நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளமுடிகிறதே நம்மால்!அவர்களுக்கு அது வாய்க்கவில்லையே!ஆக,இந்த அனுபவிப்புகள் எல்லாம் மின்சாரத்தால் கிடைத்தது என்பதை மறக்கமுடியுமா? மின்சாரம் தேவையின்றி வீணாவதை பொறுத்துக்கொண்டிருக்கலாமா! இயன்றவரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்திலும், உலக வெப்பமயமாவதைத் தவிர்க்கும் பொருட்டும், இந்த 10 நிமிட மின் பயன்பாட்டு நிறுத்தத்தை நான் எடுத்துக்கொண்டேன்.

நண்பர்களே..உங்களில் பலர் இதுபோல செய்திருக்கக் கூடும்.அவர்களையெல்லாம்.பாராட்டுகிறேன்,நன்றி செலுத்துகிறேன்.இதனை மறந்தவர்கள் 2011 க்காக் காத்திருக்க வேண்டாம்.நாளையே கூட சில மணித்துளிகள் மின்பயன்பாட்டை நிறுத்திவைக்கலாம்.நம்மைப் போல சமூகம் குறித்து பேசுபவர்கள்,எழுதுபவர்கள்தான் முன் மாதிரியாக இருக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

நமது வசிப்பிடங்கள்,பணியிடங்களில் மின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம்.உலகை வெப்ப மயத்திலிருந்து காக்க நம்மால் இயன்ற இந்தத் தொண்டைச் செய்வோம்.