Friday, November 5, 2010

தீபாவளிப் பட்டாசு படுத்தும் பாடுகள்


பொது ஒழுக்கக் கேட்டை உருவாக்கும் பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை இந்து மதத் தீபாவளி இந்த நாட்டிற்குக் கொண்டுவந்தது.ஒய்வைத் தேடும் மனிதனுக்கு விழாக்கள் தேவைதான்.ஆனால்,அது தனக்கும் ,பிற மனிதருக்கும்,சமூகத்திற்கும் துன்பம் தருவதாக அமையலாமா? தீபாவளி அப்படித்தான் அமைந்துள்ளது.பக்கத்து வீட்டுக்காரன் கொண்டாடுவான்,பணக்காரன் கொண்டாடுவான் என்பதற்காக ஏழையும் கொண்டாடுகிறான்.அவனிடம் பணம் ஏது?அது மத வழக்கம் ஆகிவிட்டபடியால்,கடன் வாங்கியாவது கொண்டாடவேண்டும் என்று முடிவெடுக்கிறான்.கடன் படுகிறான்;பட்டாசுகளை வாங்கி காசை இழக்கிறான்.ஒரு நாள் மகிழச்சிக்கு ஊரையே குப்பைகளால் நிறைத்தும்,அளவுக்கு அதிகமான ஓசைகளாலும்,காற்றை மாசுபடுத்தியும் உலக வெப்பமயத்தை அதிகரிக்க இந்த பட்டாசு வெடிப்பும் ஒரு காரணமாக இருக்கிறது.

அறிவுக்குப் பொருத்தமில்லாததுடன்,தமிழினத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல் இழிவுபடுத்தும் இந்த தீபாவளியை பல ஆண்டுகளாக பெரியாரின் தொண்டர்கள் புறக்கணித்து வருகிறார்கள்;தமிழர்களைப் புறக்கணிக்கும்படி வேண்டுகோள்விடுத்தும் வருகிறார்கள்.இதை இன்னொரு கோணத்தில் அண்மைக்காலமாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்  அணுகுவது பாராட்டுக்குரியது. தீபாவளிப் பட்டாசுகளால் ஏற்படும் தீமையை விளக்கி  பூவுலகின் நண்பர்கள், குக்கூ குழந்தைகள் வெளி, பாட்டாளிகள் படிப்பகம் ஆகிய அமைப்புகள் இந்தத் தீபாவளியின் போது நல்ல விழிப்புணர்வைச் செய்துள்ளனர்.சென்னையின் குறுகிய தெரு ஒன்றில் வசிக்கும் என் காதுகளைப் பிளந்து கொண்டிருந்த பட்டாசு சத்தத்துடன் நான் படித்த பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அந்தச்செய்தி:- 

தீபாவளிக்கு எவ்வளவு பட்டாசு வெடிக்கிறோம் என்பதில் குழந்தைகளிடம் மட்டுமின்றி, பெரியவர்களிடையேயும் போட்டி நிலவுகிறது. இதற்காக அதிக பட்டாசுகளை, அதிக சப்தம் தரும் பட்டாசுகளை, வாணவேடிக்கை மத்தாப்புகளை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் ரூ. 700 கோடிக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் தீபாவளிக்காக வாங்கப்படுகின்றன. ஒரு நாள் கூத்துக்காக, ஒரு சில நிமிடங்களில் கரியாவதற்காக இவ்வளவு கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கப்படுகின்றன.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசுபடுத்துகின்றன. தீபாவளி அன்றைக்கு காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் உங்கள் ஊரை புகைமூட்டம் எப்படி சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கும் இல்லாத அந்த புகைமூட்டம் எப்படி உங்களை பாதிக்கப்போகிறது என்று அப்பொழுது புரியும்.எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு அந்த புகைமூட்டம் இருக்கும். நீங்கள் பட்டாசு வெடிக்காவிட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளை தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:

செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்
காட்மியம்:  ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு
காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்
மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்
மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு
சோடியம்: ஈரப்பத காற்றுடன் வினைபுரிந்து தோலை பாதிக்கலாம்
துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்
நைட்ரேட்: மூளை வளர்ச்சியை பாதிக்கலாம்
நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்

உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை.
மேற்கண்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நம்ம ஊர் காவல்துறை இதை நடைமுறைப்படுத்துவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால் சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சப்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. இவை அந்தத் தடையை சாதாரணமாக மீறுகின்றன.
ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல்

இந்தச் சப்தத்தை நீங்கள் கேட்டால் உங்கள் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.

பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைகூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இப்படி நமது குழந்தைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, முகம் தெரியாத எத்தனையோ குழந்தைகள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பட்டாசு தயாரிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் குழந்தைகளும் போராடியபோது, "இதைத் தயாரிப்பதில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை" என்று பட்டாசு, மத்தாப்பு அட்டைகளில் அச்சிடப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. குறைந்த கூலிக்கு, மிக வேகமாக வேலைகளை முடித்துத் தரும் குழந்தைகளை எப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் பேசாமல் விடுவார்கள்.

குட்டி ஜப்பான் என்ற பட்டப் பெயர் கொண்ட சிவகாசி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் இன்றைக்கும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பெற்றோருக்கு இதே வேலையை அந்த முதலாளிகள் தருவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு கூலி அதிகம் தர வேண்டி இருக்கும், கூலிஉயர்வு தராவிட்டால் வேலைநிறுத்தம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்கள் என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக முதலாளிகள் நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், குழந்தைகளோ, பெரியவர்களோ யார் பட்டாசு தயாரித்தாலும், அவர்களுக்கு முறைப்படி கையுறை, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதில்லை.

ஆனால் 100 - 150 ஆண்டுகளுக்கு முன் இன்றைக்கு உள்ளதுபோல் பெரிய அளவில் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இல்லை. அப்போது நம்மிடம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமும் இருந்ததில்லை.” 

பூவுலகின் நண்பர்கள் அளித்த இந்தத் தகவலுடன் இன்னொரு தகவலும் தீபாவளி நாளைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்(05-11-2010)படிக்கநேர்ந்தது.தீபாவளிப் பட்டாசு ஓசைகளால் அதிகம் பாதிக்கப்படுவது வீட்டு விலங்குகள்தானாம்.நாய்,பூனை,மாடு,ஆடு,முயல்உள்ளிட்ட வீட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அதிக ஓலியினால் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.அதாவது,மனிதர்களின் காது கேட்கும் ஒலித் திறனைவிட இவைகளின் காது கேட்கும் ஒலித் திறன் மிகவும் நுண்ணியமானது.எனவே,அதிக ஒலியை அவை தாங்காது.அச்சத்தில் உடல் நடுக்கம் ஏற்படுமாம்;நாய்கள், ஒலியைக் கேட்டமாத்திரத்தில் எங்காவது அமைதியான இடம்தேடி ஓடிவிடுகின்றனவாம்.தீபாவளிக் காலங்களில்,தான் இருந்த இடத்திலிருந்து வேறு இடத்திர்கு ஓடிச் சென்று மீண்டும் தன்னுடைய இடத்திற்கு வரும் வழிதெரியாமல் திரியும் நாய்கள் அதிகம் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 

மனிதர்களை மட்டுமல்லாமல்,விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை தீபாவளி.  தீபாவளி வந்துவிட்டாலே பட்டாசுச் சத்தம் காதைப் பிளக்கிறது.சூழல் கேட்டை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாக இந்தப் பட்டாசுகள் இருக்கின்றன.ஒலி மாசையும்,சுற்றுச் சூழல் மாசையும் ஒருசேரக்கெடுக்கும் தீபாவளிப் பட்டாசுகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வருவதுபோல் தெரிகிறது.சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாலும்,விழிப்புணர்வுப் பிரச்சாரங்களாலும் மாற்றம் தெரிகிறது.இந்த ஆண்டு பட்டாசின் விலைகள் அதிகரித்ததால் பட்டாசுச் சத்தம் சற்றுக் குறைந்ததை சென்னையில் உணரமுடிந்தது.என்றாலும்,பணம் படைத்தவர்கள்,மார்வாரிகள்,புதுப் பணக்காரர்கள் தங்களின் செல்வச் செழிப்பைக் காட்டிக் கொள்ள பட்டாசை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி கொளுத்தினார்கள்.நாம் மேற்சொல்லிய தகவல்கள் வெகு மக்களின் காதுகளை எட்டும்போது ஏதாவது உருப்படியான பலன்கள்.ஏற்படலாம்.ஆனால்,இதையெல்லாம் எந்த ஊடகமும் சொல்வதில்லை;மாறாக அவை தீபாவளி மலர்களின் மூலமும்,சிறப்பு நிகழச்சிகளின் மூலமாகவும் பணம் சம்பாதிக்கின்றன.தங்களின் கல்லாவை நிரப்ப அவர்களுக்கு தீபாவளி ஒரு கருவி அவ்வளவுதான்.மக்கள் நலனாவது மண்ணாங்கட்டியாவது.  

2 comments:

baileiikner said...

Betway Casino NJ - Sign Up Bonus & Free Bet - JTG Hub
Welcome to 수원 출장마사지 the Betway NJ online sportsbook, 광주 출장안마 where you can claim your risk-free bet 대구광역 출장마사지 worth up to 하남 출장샵 $1000. It's a 수원 출장샵 great spot for the

m1wsm2e8rh said...

Here on PokerNews I 파라오카지노 even have have} different intermediate technique articles the place I explain all primary points} and nuances of the different roulette betting strategies. These are by far one of the best bets in a recreation of roulette and the one ones a newbie should consideration to}. While I cannot train you the expertise , I may help you with proper bets and one of the best roulette strategies that won't|that will not} kill your bankroll. Most of the online games I included within the listing above accept bets ranging from €/£/$1 to €/£/$5. What differs, nevertheless, are your chances to win at the recreation.

Post a Comment