Thursday, September 16, 2010

பெரியாரின் 132 ஆவது பிறந்த நாளில் அவரைப்பற்றி...

"நான் சொல்வதை நம்பாதீர்கள் ; உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்"என்று சொல்லி ஒவ்வொரு மனிதனின் பகுத்தறிவையும் பயன்படுத்தச் செய்த மாமனிதர்,அறிவுலக ஆசான்,
தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 132 ஆவது பிறந்த நாளில் தமிழர் மான வாழ்வுக்கு அவர் காட்டிய வழியில்
பயணத்தைத் தொடர சூளுரைப்போம்.


தன்னைப் பற்றி பெரியாரின் கருத்துகள் சில...
 

*நான் யார்? நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துகளை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்கு சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம். என்றாலும் நான் சொல்லுவது அத்தனையும் ஆதாரத்தோடுகூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல.

*நான் அரசியல், மதத்துறையின் பெயரால் யோக்கியமற்ற - மூட- சுயநல மக்களால் வெறுக்கப்பட்டவன்.
துன்பப்பட்டவன். நட்டப்பட்டவன். மானத்தையும் பறிகொடுத்தவன். மந்திரிப் பதவியையும் உதறித் தள்ளியவன்.

*இன்றையச் சுதந்திரத்திற்கு, ‘‘முதன்முதல் நானாகவே சிறைக்குப் போகிறேன்’’ என்று இந்த நாட்டில்,
 ஏன் இந்தியாவிலேயே சிறைக்குப் போனது நானும் என் குடும்பமும் தானே.

*என்னைப் பொறுத்தவரையில் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன்.

*நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும், அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன்.நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிடப் பல கொடிய துன்பங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ்வாழ்வே இவ்விழிசாதி வாழ்வைவிடச் சுகமான வாழ்வு என்று கருதுவேன்.

*மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே
பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை

*என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது.
 அதனாலேயே சக்திக்கும், தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன்.

*எனது கருத்துகள் பாராட்டப்படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிவாகக்
 கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், எனது கருத்துகள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும், உண்மையை     எடுத்துரைப்பதுதான் எனது வாழ்க்கையின் இலட்சியம்.

*நாதசுரக் குழாயாக இருந்தால் ஊதியாக வேண்டும்; தவிலாயிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பது போல் எனக்குத் தொண்டை, குரல் உள்ள வரையில் பேசியாக வேண்டும்;
பிரசங்கம் செய்தாக வேண்டும்.

*ஒரு பகுத்தறிவுவாதி என்கின்ற எனக்கு மதப்பற்றோ, கடவுள்பற்றோ, இலக்கியப்பற்றோ, மொழிப்பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப்பற்றியே பேசுவேன்.

“நீ ஒரு கன்னடியன்; எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?” என்று என்னைக் கூடக் கேட்டார்கள். “தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா” என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.

No comments:

Post a Comment