Tuesday, September 14, 2010

கஞ்சா கறுப்பின் தீபாவளி



அண்மையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கறுப்பு அவர்களின் பேட்டி ஒன்றை ராணி (ஆகஸ்ட்8) இதழில் படிக்க நேர்ந்தது. மிக யதார்த்தமாகப் பேசியிருந்தார். எந்தவித ஒப்பனையும் அவரது பேச்சில் இல்லை. சொந்த வாழ்க்கை, திரைப்படம், சக நகைச்சுவை நடிகர்கள் என பல குறித்துமான அவரது பேச்சு நேர்மையாகப்பட்டது.
கஞ்சா கறுப்பு தன் துணைவியுடன்

தான் பள்ளிக்குச் சென்றவுடனேயே திரும்பிவந்துவிட்டதாகவும், எனவே தனக்குப் படிப்பறிவு குறைவு என்றும் சொல்லியவர்,தற்போது தனது துணைவிதான் தனக்கு ஆசிரியர் என்றும் பெருமையோடு கூறுகிறார். அவர்தான் எல்லாவற்றையும் கற்றுத்தருகிறார்; கணினியைப் பயன்படுத்துவது, தனக்கு வரும் மின்னஞ்சல்களுக்கு எப்படி பதில் போடுவது என்பது குறித்தும் தான் கற்றுக்கொண்டுள்ளதாகவும் சொல்லியுள்ள கஞ்சா கறுப்பு,இளைஞர்களே பெண்களிடம் வரதட்சணை வாங்கி கையாலாகாதவராக காட்டிக்கொள்ளாதீர்கள் என்கிறார்.

கஞ்சா கறுப்பு தமது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒன்றைச் சொல்லியுள்ளார். தமது 4 ஆவது வயதிலிருந்து இதுவரை வீட்டில் யாரும் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொங்கல் திருநாளைத்தான் சிறப்பாக கொண்டாடுவோம். இதற்குக் காரணம் தீபாவளி அன்று தமது தந்தை புற்று நோய் காரணமாக இறந்துவிட்டார். அதனால், தீபாவளி கொண்டாடுவதில்லை என்று கூறியிருக்கிறார். தமது இல்லத்தில் யாராவது இறந்துவிட்டால் அந்த ஆண்டு தீபாவளி கொண்டாடாமல் இருப்பது தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு கொண்டாடுவார்கள். தீபாவளி நாளிலேயே தனது தந்தை இறந்ததால் கஞ்சா கறுப்பு குடும்பம் ஆண்டுதோறும் தீபாவளியைப் புறக்கணிக்கிறது.

தீபாவளி தமிழர் திருநாள் அல்ல என்பதற்கு எவ்வளவோ சான்றுகளை பெரியார் முதலான அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்தக் கதையை நம்பும் தமிழர்களின் சிந்தனைக்காக இதனைச்சொல்கிறோம். தனது வீட்டில் நிகழ்ந்த சாவுக்காக ஓர் ஆண்டு தீபாவளியைப் புறக்கணிக்கும் தமிழர்கள், கதைப்படி தமிழரான (அசுரன்) நரகாசுரனை, பார்ப்பனர்கள் கொன்ற நாளே தீபாவளி என்னும்போது அந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடலாமா? நம் பாட்டன் இறந்த நாளைக்கொண்டாடுவது அறிவுடைமையா? தம் தந்தையின் மீதான நேசத்தை கஞ்சா கறுப்பு குடும்பம் தீபாவளியைப் புறக்கணிப்பதன் வாயிலாகக் காட்டுகிறது. தம் மூதாதையின் மீதான நேசத்தை தமிழினம் காட்டவேண்டாமா?


No comments:

Post a Comment