Sunday, September 12, 2010

"மாறிவரும் உலகம்" மதவாதிகளுக்கு மூக்குடைப்பு! நாத்திகர்களுக்கு வரவேற்பு!!

அரசுகள் அமைந்த காலத்தில் இருந்து மதங்களின் தலையீடு இருந்தே வந்துள்ளது.மதங்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டபோதும்,மதவாதிகள் ஆட்சியாளர்களாக இருந்தபோதும் நாடுகளுக்குள் மோதல்களும் உண்டாயின.மதமோதல்களால் இரு நாடுகளுக்கு இடையே சண்டை மூண்டதும் உண்டு.மண்பிடிக்கும் போர்களால் ஏற்பட்ட பேரழிவைவிட மதச் சண்டைகளால் உருவான போர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளே அதிகம் என்று வரலாறு பாடம் சொல்கிறது.

மக்களின் வாழ்க்கைக்குப் பாடுபட உருவான அரசு என்னும் அமைப்பில்,மதம் வந்து புகுந்துகொண்டதால் ஏற்பட்டவை இழப்புகளே அன்றி ஏற்பவை எதுவும் இல்லை.பிரஞ்சுப்புரட்சிக்குப்பின் ஜனநாயகம் என்ற கருத்தியலின் மீதும்,ருஷ்யப்புரட்சிக்குப் பின் சோசலிசம் குறித்த விழிப்புணர்வினாலும் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் மக்களிடம் அரசையும்,மததையும் பிரித்துப் பார்க்கும் எண்ணம் உருவானது என்று சொல்லலாம்.பின்னர் மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோன்மையை ஆரிய இன வல்லாண்மையின் பெயரில் உலகம் கண்டது.இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஜனநாயகமும்,சோசலிசமும் அரசுக்கான கருத்தியலாக வடிவம் கொண்டன.ஆனாலும்,மதத்தின் தலையீடு அரசியலில் இருந்தே வந்துள்ளது.
இன்றளவும் மத ஆதிக்கம் பல்வேறு நாடுகளின் அரசுகளில் உள்ளதைப் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்.வளகுடாப் போர்கள்,ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு,ஆப்கானிஸ்தான்,பின்லேடன் விவகாரங்களுக்குள்ளும் மதங்களின் பங்களிப்பு இல்லாமல் இல்லை.
இத்தகைய சூழலில் அரசுகளில் மதங்களின் தலையீடு கூடாது என்ற முழக்கத்தை மதநம்பிக்கையற்றவர்கள்,நாத்திகர்கள்,மனிதநேயர்கள் பல ஆண்டுகளாக எழுப்பி வருகிறார்கள்.உண்மையான மதச்சார்பற்ற அரசுகளே எல்லா மக்களையும் சமமாகப் பாவிக்கும் எண்ணம் கொண்டவையாக இருக்க முடியும்.எந்த மதத்தையும் சாராதவரே எல்லா மதத்தவரையும் மனிதனாகப் பார்ப்பவராக இருப்பார். இப்படி ஒருவராக அண்மையில் ஆஸ்திரேலியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார் ஜூலியா கில்லார்ட்.
ஜூலியா கில்லார்ட்

ஆஸ்திரேலியாவை ஆளும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜூலியா கில்லார்ட், ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் திருமணம் என்ற பந்தம் தேவையற்றது என்ற எண்ணம் கொண்ட இவர், திருமணம் செய்துகொள்ளாமல் தன் வாழ்க்கைத் துணைவருடன் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் கடந்த 106 ஆண்டுகால ஜனநாயக அரசியல் வரலாற்றில், முதன்முதலாக வெளிப்படையாக தன்னை ஒரு நாத்திகவாதி என்று பிரகடனப்படுத்திய பிரதமரும் ஜூலியா கில்லார்ட்தான்.பொறுப்பார்களா மதவாதிகள்; தங்களின் தாக்குதல்களைத் தொடங்கினர்.

ஜூலியா கில்லார்ட் பிரதமராகப் பதவியேற்ற ஆறு வாரங்களுக்குள், இன்னும் மூன்று மாதம் தள்ளி நடத்தவேண்டிய தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட்டார்.ஜூலியா பிரதமரின் அரசு மாளிகையில் குடியேறவும் இல்லை. நான் தலைமையேற்று நடத்தாத தேர்தலில், கட்சியின் முடிவால் பிரதமராகப் பொறுப்பேற்றேன். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், அரசு மாளிகையில் குடியேறுவேன் என்று கூறிவிட்டார்

ஒரு அநாகரிகப் பேர்வழி, ஜூலியா மீது முட்டைகளைக் கூட அடித்தான். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு புயல் வேகத்தில் ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பிரச்சாரம் செய்தார்.இவரது பிரச்சாரம் சூடுபிடித்த சூழலில் மேற்கு ஆஸ்திரேலியத் தலைநகர், பெர்த்தில் உள்ள கத்தோலிக்க மதத்தின் ஆர்ச் பிஷப் பேர்ரி ஹிக்கி என்பவர் நாத்திகருக்கு வாக்களிப்பதா?என விஷம் கக்கினார்.பேர்ரி ஹிக்கி வெளியிட்ட அறிக்கையில், ”நாத்திகம் தலைதூக்குவது நாட்டிற்கு நல்லதல்ல. நாத்திகர்கள் ஆண்ட கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில், என்ன நடந்தது என்பதை நாம் கண்கூடாகக் கண்டோம். அரசியலில் மதச்சார்பின்மை வளர்வது விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கும். எனவே, நாத்திக நம்பிக்கை கொண்ட ஜூலியா கில்லார்ட்டிற்கு, எந்த மதத்தையும் சாராத ஜூலியா கில்லாட்டிற்கு வாக்களித்தால் அவர்கள் தேவாலயங்களைப் புறந்தள்ளுவார்கள், பாரம்பரிய கிறித்துவ மரபிலிருந்து வழுவுவார்கள். அது நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லதல்ல” என்று பதறினார். அதோடு நிற்காமல், எதிர்க்கட்சித் தலைவரான, டோனி அபட், ஆழ்ந்த மத நம்பிக்கை உடைய கிறித்துவர். ஆகவே, அவருக்கு வாக்களிப்பதே நல்லது என்ற கருத்துப்பட தனது அறிவிப்பை வெளியிட்டார்.மதத் தலைவரின் கருத்து இது என்று மக்கள் யாரும் வாய்மூடி மௌனமாய் இருக்கவில்லை.அரசியலில் மதகுரு எப்படி தலையிடலாம்?என மக்கள் கொதித்துவிட்டனர்.தொலைக்காட்சி,வானொலி,இணையதளம் என எல்லா ஊடகங்களிலும் மக்கள் பிஷப்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவித்தவர்களில் பிஷப்பின் கருத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்னவர்கள் 80 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களில் மிக நுணுக்கமாகவும்,நேர்படவும் கருத்துச்சொன்னவர்கள் அதிகம்.பிக்டன் என்ற பகுதியைச் சேர்ந்த மஹ்மூத் என்பவர்,”இவரைப் போன்றவர்களிடமிருந்து(பிஷப் பேர்ரி ஹிக்கி) இதற்குமேல் எதிர்பார்க்க முடியாது. அவருடைய உடையைப் பாருங்களேன். ஒரு ஆண் பேயைப் போல இல்லை? மவுடீகங்களும், மூடப் பழக்கங்களும், முட்டாள்தனங்களும் அரசாங்கங்களை அண்டத் துடிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது,”என்கிறார். பெர்த் பகுதியைச் சேர்ந்த சாண்ட்ரா என்பவரது கருத்து இன்னும் ஆழமானது.அவர் சொல்கிறார்,”ஹாய் மிஸ்டர் ஹிக்கி! அண்மையில் போர்ச்சுகல், கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதே, அதன் காரணம் என்ன தெரியுமா? அந்த நாடுகளில் எல்லாம் அரசிலும், அரசியலிலும் மதக் கிறுக்கு பிடித்த பைத்தியக்காரர்கள் இடைவிடாது தலையிட்டு வந்தார்கள். நாட்டை நட்டப் பாதைக்கு வழி நடத்தினார்கள்.

வருமான வரி செலுத்தத் தேவையில்லாத சொர்க்க நிலையில் இருந்து கொண்டு வரி, செலுத்துகின்ற நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது வாக்களிக்கக் கூடாது என்று புராணக் குப்பைகளை நம்பிக் கொண்டு இருக்கக் கூடிய பாதிரிகள் யாரும் எங்களுக்குக் கூற வேண்டியதில்லை.பெரும்பாலான மக்கள், தாங்கள் எப்படி மற்றவரால் நடத்தப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அதேபோல்தான் மற்றவரையும் நடத்தவேண்டும் என்ற எளிமையான வாழ்வியலோடுதான் வாழ்கிறார்கள். அப்படி வாழும் மக்களுக்கு, மதவாதி, பகுத்தறிவுவாதி, நாத்திக வாதி என்ற எந்த முத்திரையும் தேவையில்லை,”என்கிறார்.
கத்தோலிக்க திருச்சபை அரசுக்கு வரி செலுத்தாதது ஏன்?இவர்கள் நட்த்தும் பள்ளிகளுக்கு அரசு மானியம்  அளிப்பது சரியா?என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

”உலகிலுள்ள பல நாடுகளில், அந்நாட்டுப் பழங்குடியினரது பண்பாட்டை, மொழியைச் சிதைத்து பெருங்கொடுமை செய்தது மதங்கள்தான். மதங் களையோ, கடவுளையோ நம்பாத காரணத்தாலேயே நான் ஜூலியாவிற்கு வாக்களிக்கப் போகிறேன்”என்று மெஸ்ஸ் 303 என்பவர் கூறியிருக்கிறார்
,”நாத்திகத்திற்கு, மதங்கள்(!) கூறுவதைப் போன்ற ஒழுக்கக் கோட்பாடுகள் இல்லை என்று யார் சொன்னது? நாத்திகம் என்பது ஒரு கிளப்போ, நிறுவனமோ அல்லது ஒரு சிறு கூட்டமோ அல்ல. நாத்திகம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட கோட்பாடு. மதங்கள் ஊட்டுகிற வெறுப்பையும், மூட நம்பிக்கைகளையும் தவிர்த்து வாழும் நாத்திகர்கள் அனைவரும் சராசரிக்கு அதிகமான நிலையிலுள்ள ஒழுக்கக் கோட்பாடுகளைப் பேணுகிறார்கள்.நான் ஒரு கிறித்துவன். கிறித்துவ நம்பிக்கைக் கொண்ட பிரதமர்கள் எல்லாம் வலதுசாரி, பழைமைவாதிகளாகவே இருக்கிறார்கள். இயேசு நாதர், மதமும் அரசும் தனித்தனியாகத்தான் இருக்கவேண்டும் என்று சொன்னார். ஆனால், அவரைக் கொன்றவர்கள் அரசையும், மதத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை. ஆகவே, மத நம்பிக்கை கொண்டவரைவிட, மதத்தையும், அரசையும் பிரித்துப் பார்க்கும் நாத்திகருக்கு வாக்களிப்பதுதான் சிறந்தது,”என்று பெர்த்பகுதியைச்சேர்ந்த ஜான் என்பவர் கூறுகிறார்.”அரசியலில் மதத்திற்கு இடமில்லை. பாதிரிமார் கள் அரசியலின் பக்கம் தலை வைத்துப்படுக்கவே கூடாது!”, ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு மதத்தை நம்பித்தான் ஆகவேண்டுமா என்ன? மதங்களை நம்புவோர் அவர்களுடைய நம்பிக்கைகளை அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளட்டும்”,”முட்டாள்தனமான மதங்களும், மதம் சார்ந்த அரசியல் கொள்கைகளும் உலகில் நடத்தி உள்ள போர்கள் ஏராளம். ஜூலியா கிறித்துவராக இல்லாவிட்டால் யாருக்கென்ன நட்டம்?”என்ற கருத்துகளும் பலரால் சொல்லப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நாத்திகம்  குறித்தும்,மத எதிர்ப்புக்கருத்துகளும் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக முன்னிறுத்தப்பட்டன.ஆனால்,மதவாதிகள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.அரசையும் மதத்தையும் பிரித்துப் பார்க்கும் பக்குவத்தை மக்கள் அங்கே பெற்றுவிட்டனர் என்பதையே இந்தக் கருத்துகள் எதிரொலிக்கின்றன.நாத்திகர்கள்தான் நடுநிலையாளர்கள் என்கிற கருத்து மேலோங்கி வருவதையே இது காட்டுகிறது.

தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் ஜூலியா கில்லார்டின் தொழிலாளர் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் சரிபகுதி வாக்குகளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.வாக்கு சதவீதத்திலும் மற்ற கட்சிகளைவிட முன்னிலையில் உள்ளது.

தன்னை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்ட ஒருவருக்கு மக்கள் பெருமளவு வாக்களித்துள்ளார்கள்.அவர்கள் தங்களை ஆள்பவர் அரசை நட்த்தத்தகுதி உள்ளவரா என்றுதான் பார்த்துள்ளார்களே தவிர,அவர் மதவாதியா,நாத்திகரா என்றெல்லாம் பார்க்கவில்லை.மதம் சார்ந்திருப்பதும்,மதத்தை சாராமல் இருப்பதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை.அதனை அரசியலில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை ஆஸ்திரேலியா தேர்தல் எடுத்துக் காட்டியிருக்கிறது.தவிரவும்,மதவாதிகள் அரசியலில் நுழைவதை நாகரீக சமுதாயம் விரும்பவில்லை என்பதையும் இந்த முடிவுகள் உணர்த்துகின்றன.உலக அரசியலின் பொது அரங்கில் மதம் சாராத நாத்திகர்களின் மதிப்பும்,மரியாதையும் மென்மேலும் உயர்ந்து வருவதை உலகம் உற்றுநோக்கத் தொடங்கிவிட்டது.மதங்களின் ஆதிக்கத்தை விடுத்து,மனிதநேயத்தை முன்னிறுத்தவேண்டிய அவசியத்தை எஞ்சிய நாடுகளும்,உலகளாவிய அரசியல்வாதிகளும் உணரவேண்டிய தருணம் இதுதான்.

-                         

No comments:

Post a Comment