Monday, September 13, 2010

30 ஆயிரம் டன் அட்சதை அரிசி வீணாவதைத் தடுத்த வித்தியாச இளைஞர்

உணவுப் பற்றாக்குறை என்பது இந்தியத் துணைக்கண்டத்திற்கு பழகிப்போன ஒன்று. சுதந்திர இந்தியாவில் கடந்த 63 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு முழக்கம் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது. அரசுகள் முயன்றுகொண்டிருப்பதாகச் சொல்கின்றன.உற்பத்தியை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கின்றன.உணவுப் பொருள் களை இறக்குமதி செய்கின்றன.மானியங்கள் அளிக்கின்றன.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க,மக்கள் இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறார்கள்?  உணவுத் தேவை, உணவுப் பற்றாக்குறை பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்கிறது?  எனபன பற்றியெல்லாம் சிந்தித்தால் அது பூச்சியம்தான்.(அண்மையில் அரசே உணவுப் பொருளை வீணடித்ததாக பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட  வழக்கின் ஆணையில்,அதை மக்களுக்குக் கொடுங்கள் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது என்பது தனிக்கதை)

தனிமனிதருக்கே சிக்கனம் பற்றிய சிந்தனை இல்லை.எல்லாம் அரசு பார்த்துக் கொள்ளும்  என்ற எண்ணமும், அதற்குமேல் ஆண்டவன் விட்ட வழி என்ற நிலையில் தான் இருக்கிறார்கள். பொதுவாகவே வீணாக்குதல் என்பது இங்கே சர்வசாதாரணம். சேமிப்பு என்ற முறைக்கு இன்னும் பாடம் நடத்த வேண்டி-யிருக்கிறது. போதாததற்கு பெரும்பான்மை மக்கள் சார்ந்துள்ள மதமான இந்து மதமும் இவர்களுக்கு இந்த நல்ல செயல் பற்றியெல்லாம் போதிப்பதில்லை. மாறாக உணவுப்பொருளை பண்டிகைகளின் பெயர்களில் வீணாக்குவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு 30 நாளுக்கு ஒருமுறை அமாவாசை தினத்தில் பூசணிக்காயை தெருவில் போட்டு உடைத்து வீணாக்குகிறார்கள்; ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கு தேங்காயை உடைத்து வீணடிக்கிறார்கள்;கோவில் விளக்குகளுக்கு, வீட்டுக் குத்துவிளக்குகளுக்கு எண்ணை ஊற்றி எரிக்கிறார்கள்; திருஷ்டி கழிப்பதற்காக உப்பு, மிளகாயைக் கொட்டி தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். எலுமிச்சைப் பழத்தை அறுத்து வாகனங்களுக்கு அடியில் வைத்து நசுக்குவது, தூர எறிவது இப்படியான பல சடங்குகள் இங்கே அன்றாட நிகழ்வுகளாக உள்ளன. இவற்றில் வீணாவது எல்லாம் உணவுப்பொருள்கள் என்பதுதான் கொடுமை.

ஏறத்தாழ 60சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள ஒரு நாட்டில் இப்படித்தான் உணவுப் பொருளை வீணாக்குவதா? என்று கேள்வி எழுப்பினால் அது மதவிரோதம் என்கிறது இந்துத்துவா. மக்களை மேலும் மேலும் பிற்போக்குத்தனங்களிலேயே உழல வைத்து, நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதில் பெரும்பான்மை மதமே முன் நிற்கிறது. இந்த எதார்த்த நிலையில்தான் ஒருவர் சடங்குகளின் பெயரால் முக்கிய உணவுப்பொருளான அரிசியை வீணாக்காதீர்கள் என்று இடைவிடாது போராடி சாதனை புரிந்துள்ளார்.

ராகுல் பிரகாஷ் சுவர்னா
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊட்டச் சத்து குறைவினால் ஆண்டுக்கு 45,000 குழந்தைகள் உயிரிழக்கும் நிலையில் கலாச்சாரம், பண்பாடு, சடங்கு என்ற பெயரில் உணவு தானியத்தை விண டிப்பது செய்வது நியாயமா? என கேள்வி எழுப்பிய தானேயை சேர்ந்த சமூக சேவகர் கடந்த 3 ஆண்டு களில் 30 ஆயிரம் டன் அரிசியை சேமித்துள்ளார். செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி ஒரு வார காலம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் மாநிலத்தில் ஆண்டுக்கு 45,000 குழந்தை கள் ஊட்டச்சத்து குறைவி னால் உயிரிழந்து வருகின்றன. இந்த நிலையில் உணவு தானியங்களை விரயம் செய்வது நியாயமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்வியை தனக்குள்ளே கேட்ட ராகுல் பிரகாஷ் சுவர்னா (26) என்ற இளைஞர், திருமணங் களின் போது மணமக்கள் மீது ஆசிர்வதிப்பதற்காக வீசப்படும் அரிசி (அருகம் புல்லுடன் சேர்த்து வீசப் படும் அறுகிடு) வீணடிக் கப்படும் உணவு தானியமாக கருதினார்.

கலாச்சாரம், பண்பாடு, சடங்கு என்ற பெயரில் உணவு தானியம் வீணடிக்கப்படுவதை தடுக்க முடிவு செய்த ராகுல் அதை தனது வீட்டில் இருந்தே தொடங்கினார். கடந்த 2007 ஆம் ஆண்டு தனது அண் ணனுக்குத் திருமணம் நடந்த போது ஆசிர்வதிப் பதற்காக அரிசி வீசப்படுவதை எதிர்த்தார். உணவு தானியத்தை வீணடிக்க வேண்டாம் என குடும்பத்தினரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இவரது கோரிக்கையை யாரும் கேட்கவில்லை, அவர் கூறுவதில் உள்ள நியாயத்தையாரும் புரிந்து கொள்ளவில்லை.
தனது தரப்பு நியாயத்தை குடும்பத் தினருக்கு உணர்த்த பட்டினி கிடந்தார் ராகுல். 6 நாட்கள் தொடர் உண்ணா நிலையில் இருந்ததால் உடல்நிலை மோசமடைந்து ராகுல் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இதன் பிறகே ராகுலின் கூற்றில் உள்ள நியாயத்தை அவரது குடும்பத்தினர் புரிந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியோடு திருமணம் எங்கு நடந்தாலும் அங்கு சென்று உணவு தானியத்தை வீண் செய்ய வேண்டாம் என ராகுல் கோரிக்கை விடுப்பார்.

சிலர் இவரது கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளனர், சிலர் மத சடங்குகளுக்கு ராகுல் எதிரானவர் என தூற்றியுள்ளனர், சிலரோ இவரை அடித்து, உதைத்துள்ளனர். ஆனாலும் தனது கொள்கையில் ராகுல் இன்று வரை உறுதியாக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் இவர் சேமித்த ஆசிர்வாத அரிசியின் அளவு 30 ஆயிரம் டன். திருமணங்களில் இருந்து இவ்வளவு அரிசி சேமிக்க முடியும் என்றால் கூட்டு திருமண நிகழ்ச்சியில் எவ்வளவு அரிசி சேமிக்க முடியும் என எண்ணிய ராகுல், கூட்டு திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் சமூக நலத்துறையை நாடி தனது கொள்கை குறித்து எடுத்து கூறினார்.

அதில் உள்ள நியாயத் தையும் சமூக அக்கறையையும் புரிந்து கொண்ட சமூக நலத்துறை அமைச் சகம், அரிசி ஆசீர்வாத சடங் கை மாற்றி தானியத்தை சேமிப்பது குறித்து ஆலோ சித்து வருகிறது. அன்று பெரியாரின் இயக்கம் சொன்னது உலையில்போடும் அரிசியைத் தலையில் போடாதே என்று. இந்த முழக்கம் தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்னேயே எழுந்தது.சுயமரியாதைத் திருமணங்களால் பார்ப்பனீயச் சடங்குகள் ஒழிக்கப்பட்டு இது போன்ற வீணடிப்புகளுக்கெல்லாம் விடை கொடுக்கப்பட்டது.

இன்று இந்துத்துவ கருத்தியல் வேரூன்றியுள்ள மஹாராஷ்டிராவில் அதன் எதிரொலி கேட்கிறது.கருத்து ரீதியாக அறிந்திராத அந்த இளைஞர் ராகுல் சமூக உணர்வோடும், நாடு, மக்கள் மீதான அக்கறையோடும் நல்ல பணியைச் செய்துவருகிறார்.சுயமரியாதைத் திருமணங்கள் வட இந்தியாவிலும் நடைமுறைக்கு வரும்போது அரிசிகள் வீணாக்கப்படாது. அதுவரை ராகுல் போன்ற இளைஞரின் பணி அங்கே தேவைதான்.

2 comments:

Sundararajan P said...

நல்ல வடிவமைப்பு. நல்ல உள்ளடக்கம். தமிழ்மணம் இணையத்திரட்டியில் சேருங்கள். மேலும் அதிகம் வாசகர்களை சென்றடையலாம்.

வாழ்த்துகள்!

(பின்னூட்டப் பெட்டியில் வேர்ட் வெரிபிகேஷன் உள்ளது. அது தேவையற்றது. எனவே அதை எடுத்துவிடலாம்)

மணிமகன் said...

நன்றி நண்பரே...

Post a Comment